Share on Social Media

டோக்கியோ: பாராலிம்பிக்கில் இந்தியாவின் பவினா படேல்(டேபிள் டென்னிஸ்) வெள்ளி வென்று அசத்தினார்.

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 பேர் பங்கேற்கின்றனர்.

 

இதன் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் தனிநபர் ‘கிளாஸ் 4’ பைனலில், உலகின் ‘நம்பர்–12’ இந்தியாவின் பவினாபென் படேல் 34, உலகின் ‘நம்பர்–1’ சீனாவின் ஜூ இங் மோதினர். காலிறுதியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் செர்பியாவின் ரான்கோவிச்சை வீழ்த்தியதால், பைனலில் பவினா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் முதல் செட்டை 7–11 என இழந்த பவினாபென், அடுத்த இரு செட்களை 5–11, 6–11 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 19 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பவினாபென் 0–3 (7–11, 5–11, 6–11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கம் (5 தங்கம், ஒரு வெள்ளி) வென்ற சீன வீராங்கனை ஜூ இங், பாராலிம்பிக்கில் 6வது தங்கத்தை (2008, 2012, 2020ல் ஒற்றையரில் 3, 2008, 2012, 2016ல் அணிகள் பிரிவில் 3) தட்டிச் சென்றார்.

 

புதிய வரலாறு: இதன்மூலம் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பவினா. தவிர இவர், பாராலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே, ரியோ பாராலிம்பிக் குண்டு எறிதலில் (எப்–53) இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளி வென்றிருந்தார். தவிர இது, டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமானது.

 

வாழ்த்து மழையில்…

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்ற பவினாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா, இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளார். உங்களால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. உங்களது மகத்தான சாதனைக்கு வாழ்த்துகள்.

 

பிரதமர் மோடி: பவினா படேல் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது வாழ்க்கை பயணம், இளம் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கமாக இருக்கும். நிறைய இளைஞர்களை விளையாட்டை தேர்வு செய்ய உதவும்.

 

பீஜிங் ஒலிம்பிக் ‘தங்க மகன்’ அபினவ் பிந்த்ரா: வெள்ளி வென்று டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கணக்கை துவக்க உதவிய பவினா படேலின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. மிகவும் பெருமையாக உள்ளது.

 

இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக்: பவினாவின் செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டியில் விளையாடிய விதம் எதிரணியினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இவரது திறமையும், அமைதியும் தான் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெல்ல உதவியது. தேசிய விளையாட்டு (ஆகஸ்ட் 29) தினத்தில் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பரிசளித்திருப்பது தனிச் சிறப்பு.

 

பயோ டேட்டா

பெயர்: பவினா ஹஸ்முக்பாய் படேல்

வயது: 34

பிறந்த இடம்: மெஹ்சானா, குஜராத்

பாதிப்பு: ஒரு வயதில் போலியோவால் பாதிப்பு. இரண்டு கால், வலது கை செயலிழந்தது. 

விளையாட்டு: வீல் சேர் டேபிள் டென்னிஸ், ‘கிளாஸ் 4’

பயிற்சியாளர்: நிகுல் படேல்

பதக்கம்:

2011 தாய்லாந்து சாம்பியன்ஷிப் – வெள்ளி

2013 ஆசிய பாரா சாம்பியன்ஷிப் – வெள்ளி

2017 ஆசிய பாரா சாம்பியன்ஷிப் – வெண்கலம்

2020 டோக்கியோ பாராலிம்பிக் – வெள்ளி

 

ரூ. 3 கோடி பரிசு

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவினாவுக்கு, குஜராத் அரசு ரூ. 3 கோடி பரிசு அறிவித்துள்ளது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (டி.டி.எப்.ஐ.,) சார்பில் ரூ. 31 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

 

பைனலில் பதற்றம்: பவினா

வெள்ளி வென்றது குறித்து பவினா கூறியது: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் தங்கம் வெல்ல முடியாதது ஏமாற்றம். பைனலில் சற்று பதற்றமாக இருந்தது. இதனால் போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. அடுத்து வரும் போட்டிகளில் இத்தவறுகளை சரி செய்து கொள்வேன்.

எனக்கு ஆதரவு அளித்த இந்திய பாராலிம்பிக் கமிட்டி, இந்திய விளையாட்டு ஆணையம், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பதக்கத்தை சமர்ப்பிக்கிறேன். 

டோக்கியோ பாராலிம்பிக்கில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இது அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க உதவும். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். தாயகம் திரும்பியதும் ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியை துவக்க உள்ளேன்.

இவ்வாறு பவினா கூறினார்.

 

சச்சினை சந்திக்க விருப்பம்

பவினாவின் கணவர் நிகுல் படேல் கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை சந்தித்து வெள்ளிப் பதக்கத்தை காண்பிக்க விரும்புகிறார் பவினா. அவர் தான் பவினாவின் ‘ரோல் மாடல்’. இந்தியாவுக்கு திரும்பியவுடன், அவரை சந்திக்க முயற்சி மேற்கொள்வோம்,’’ என்றார்.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *