Share on Social Media


கடலுார் : மழை வெள்ளத்தால் பாதித்த கடலோர கிராமங்களில் தென் பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியை அரசு துவங்கியுள்ளது. பாதித்த விவசாய நிலங்களில் மண் சமன் செய்யும் பணி தாமதமாவதால் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் பணியை துவக்கி செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான மழை பெய்து, பல நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 19ம் தேதி கெலவரப்பல்லி, கே.ஆர்.பி., அணை ஆகியவற்றில் இருந்து வந்த தண்ணீருடன் திருக்கோவிலுார் அணைக்கட்டில் திறந்த தண்ணீரும் சேர்த்து தென்பெண்ணையாற்றில் 1.5 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது. தொடர் மழையால் கடலுார் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம், மணி முக்தாறு, பரவனாறு பகுதிகளில் உபரி நீர் திறந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணையாற்றின் கரையோர கிராமங்கள், பண்ருட்டி அருகில் எனதிரிமங்கலம், மேல்குமாரமங்கலம், மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு, அழகியநத்தம், உப்பலவாடி, நாணமேடு, உச்சிமேடு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிட்டிருந்த நெற் பயிர்கள் அழுகி வீணானது. தண்ணீரின் வேகத்தில் பல நிலங்களில் மண் மேடுகள், பள்ளங்கள் உருவாகின. நிலத்தை சமன் செய்யாமல் வேறு பயிர் செய்ய முடியவில்லை. இதனால் வேளாண் பொறியியல் துறை மூலம் நிலங்களை சமன் செய்ய விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாதித்த நிலங்களை கணக்கெடுக்க கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.

பாதித்த பயிர் மற்றும் நிலத்திற்கு இழப்பீடு தொகையை அரசு அறிவிக்கவில்லை. இருப்பினும் அய்யப்பன் எம்.எல்.ஏ., முயற்சியால் கண்டக்காடு பகுதியில் பெண்ணையாற்றின் கரையை பலப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் புகுந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும் பாதித்த நிலங்களை சமன் செய்யும் பணி தாமதமாவதால் சொந்த செலவில் சமன் செய்யும் பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். மழை ஓய்ந்து வெயில் காய்வதால் விவசாய பணிகளை செய்ய ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி நிலத்தில் உள்ள ஈரத்தில் மணிலா சாகுபடி செய்யும் பணியை துவங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *