Share on Social Media


சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிறைவடையப்போகுது. திரும்பிப் பார்க்கும்போது எப்படியிருக்கு ?

”நான் சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆகப்போகுதுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது. இத்தனை வருஷமா நான் இருக்கேங்கிறதே பெரிய விஷயம். இப்போவும் நீங்க என்னை கரன்ட்ல இருக்கிற இயக்குநரா கேள்வி கேட்கிறது சந்தோஷமா இருக்கு.”

நீங்க இயக்கின படங்களின் எண்ணிக்கை குறைவா இருக்கேன்னு நினைச்சதுண்டா?

இயக்குநர் அமீர்

”அப்படி நான் நினைச்சதில்லை. காரணம், நான் சினிமாவுக்கு வரும்போதே ரொம்ப குறைவான படங்கள்தான் எடுப்போம்னுதான் உள்ள வந்தேன். 2009-ல நடிகர் விஜய்யை சந்திச்சு கதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைச்சது. நான் சொன்ன ரெண்டு கதைகளுமே அவருக்கு பிடிச்சிருந்தது. ‘எந்த கதையைப் பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க’னு சொன்னார். அப்படி பேசிட்டு இருக்கும்போது, ‘இப்போவே ஆரம்பிக்கலாமா இல்லை கொஞ்சம் லேட்டா ஆரம்பிக்கலாமா?’னு கேட்டதுக்கு, ‘அப்படியெல்லாம் எந்த அவசரமும் இல்லை’னு சொன்னேன். ‘அதுவரைக்கும் நீங்க வெயிட் பண்ணணுமே’னு கேட்டார். ‘அப்படியெல்லாம் எனக்கு ஒன்னுமில்லைங்க. சினிமாவுல வேகமா தொடர்ச்சியா ஓடினாலே ஐந்து படங்கள் பண்ணலாம்… அவ்ளோதான்’னு நான் சொன்னது அவருக்கு ரொம்ப ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருந்தது. நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வந்தேனே தவிர, அவசர அவசரமா தோசை சுட்டுத்தர நான் வரலை. அதனால, எண்ணிக்கையா குறைவா இருக்கேன்னு நான் நினைச்சதில்லை. ஆனா, கரியர்ல ஒரு தேக்கம் இருக்குனு உணர்றேன். அது என்னால உருவானதுதான். அதை சரி பண்ணிடலாம்.”

ரஜினி, விஜய், விக்ரம்னு உங்கள் சந்திப்பு நடக்கும். ஆனா, எதுவும் நடைமுறைக்கு வரலையே. என்ன காரணம்?

”என்கிட்ட ஃபாலோ அப் இருக்காது. அதை என்னுடைய மைனஸா பார்க்குறேன். இங்க சினிமாவுல ஃபாலோ அப் ரொம்ப முக்கியம். ஹீரோக்கள் சொல்ற நேரத்துக்கு அவங்க விரும்புவது போல அவங்களோட தொடர்புல இருந்துகிட்டே இருக்கணும். அந்த மாதிரியான விஷயங்களை நான் பண்ணமாட்டேன். அதுக்கு ஈகோனு எடுத்துக்க வேண்டாம். வாய்ப்புக்காக யார்கிட்டயும் கைகட்டி காத்திருந்து நிற்கமாட்டேன். ஆனா, அந்த ஃபாலோ அப்தான் இங்க சிஸ்டமா இருக்கு. அதுக்குள்ள வர்றதுல எனக்கு உடன்பாடில்லை. அப்படித்தான் படம் பண்ணணும்னு அவசியமும் இல்ல. அமீர் கூட படம் பண்ணா வித்தியாசமான படமா இருக்கும்னு வாங்க, அதுக்கு நா கியாரன்டி தரேன். அது வெற்றிப் படம்னு கூட நான் சொல்லலை. வித்தியாசமான படம்னுதான் சொல்றேன். இந்த நம்பிக்கையோடு கைக்கோர்த்தால்தான் சரியா இருக்குமே தவிர, தொடர்ந்து ஃபாலோ பண்ணனும், தினமும் மெசேஜ் அனுப்பணும், இன்னொரு பட விழாவுல கூட இவரைப் பத்தி புகழ்ந்து பேசணும்ங்கிறதுலாம் எனக்கு செட்டாகாது.”

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உங்களின் பருத்தி வீரனை வியந்து பாராட்டியிருந்தார். ஆனால், `ஏனோ நான் வியந்தவர்களிடமிருந்து அடுத்த படைப்புகள் சிறப்பாய் வருவதில்லை!’னு வருத்தப்பட்டிருந்தார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க ?

ameer 2 Tamil News Spot
இயக்குநர் அமீர்

”அவருடைய கோரிக்கை நியாயமானது. அவர் மட்டுமல்ல நிறைய பேர் கேட்குறாங்க. நான் வளர்ந்த சூழல், நான் திரைமொழி கத்துக்கிட்ட இடம், நான் சினிமாவை பார்க்கிற விதம் இதெல்லாம்தான் காரணம். இந்த இண்டஸ்ட்ரில ரஜினி சார் சொல்ற மாதிரி சிஸ்டம் வேற மாதிரி மாறியிருக்கு. இங்க ஹீரோவை புகழ்ந்துக்கிட்டே இருக்கணும். சின்ன ஹீரோவா இருந்தாலும் கூட. அதுவும் அவங்களுக்கு வியாபாரம் இருக்குனா, அவங்களை காலையில எழுந்தவுடன் கடவுள் மாதிரி பார்க்க ஆரம்பிக்க வேண்டிய சூழல் வந்திடுது. தமிழ் சினிமா மட்டும் இந்த மாயைல சிக்கியிருக்கிறதா பார்க்கிறேன். தமிழ் சினிமா நிறைய சிக்கல்கள்ல மாட்டியிருக்கும். அதுல இதுவும் ஒன்னு. உதாரணத்துக்கு, ஃபகத் பாசிலை எடுத்துக்கலாம். எல்லா விதமான கேரக்டர்களும் பண்றார். அவரே ஒரு படம் தயாரிச்சு அதுல, ஒரு சலூன்ல வேலை செய்ற ஆளாகவும் நடிக்கிறார். இங்க அப்படியில்லை. இங்க நல்ல படங்கள் வந்திட்டிருக்கு. ஹீரோக்கள் நல்லா நடிக்கிறாங்கன்னு சொன்னா கூட, அதெல்லாம் ஹீரோயிசமான படங்களாதான் இருக்கு. அது எனக்கு உடன்பாடில்லை. ‘அசுரன்’, ‘கர்ணண்’ இந்த ரெண்டு படத்தை எடுத்துக்கிட்டா, ரெண்டிலும் தனுஷ் ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். வெற்றிமாறன் என் நெருங்கிய நண்பர். ஆனா, படம் முடியும்போது ஹீரோயிசமாதான் முடியுது. அது யதார்த்தத்தை விட கொஞ்சம் தள்ளி இருக்க மாதிரி தெரியுது. இந்த சமூகத்துல நடந்த ஒரு அநியாயத்தை நமக்கு திரைமொழியில சொன்ன படம் ‘கர்ணண்’. உண்மை சம்பவத்துல அப்படியொரு ஹீரோயிசம் இல்லைவேயில்லை. ஆனா, படமா வரும்போது அப்படித்தான் முடிக்க வேண்டியதா இருக்கு. காரணம், தனுஷ் எனும் ஹீரோ. முந்தைய படத்துல 100 கோடி வசூல் கொடுத்துட்டார்ங்கிறதால அந்த இமேஜையும் இதுல போட வேண்டியதா இருக்கு. அதை நான் விரும்பலை. கொடியன்குளம் சம்பவத்தை நான் படமா பார்க்க விரும்புறேன். ஆனா, முடிக்கும்போது ஹீரோயிசமா முடியுது. இதேதான், ‘சூரரைப் போற்று’ படத்திலும். தோற்றுப்போற நாயகர்களாக இங்க யாரும் நடிக்க தயாராயில்லை. அந்த பிம்பம் மாறாமல் இருக்கிறதுனால தமிழ் சினிமா இன்னும் ஹீரோக்கள் கையிலே இருக்கு. இதெல்லாம்தான் நான் முரணா பார்க்குறேன்.”

‘வடசென்னை’க்கு பிறகு, உங்களுக்கு வர்ற கதைகளும் கதாபாத்திரங்களும் எப்படி இருக்கு ?

”அதே மாதிரியான கேரக்டர்ல ஏழு கதை வந்தது. ‘நீங்கதான் சார் டான். உங்களுக்கு கீழே நாலு பேர் இருப்பாங்க. 30 நிமிஷம்தான் வருவீங்க. ஆனா, ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும் சார்’னு சொல்லிதான் ஆரம்பிக்கிறாங்க. ஒரு படத்தையும் ஒத்துக்கலை. நண்பர் தாமிரா ஒரு கதை சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பண்ணலாம்னு சொன்னேன். ஆனா, அவர் கொரோனாவுல மறைஞ்சுட்டார். சீனு ராமசாமி சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. லாக்டெளன் எல்லாம் முடிஞ்ச பிறகுதான், ஆரம்பமாகும். ‘நாற்காலி’ பண்ணி முடிச்சிருக்கேன். பொலிட்டிக்கல் சைட்டயர் படம். நாங்க வேலையை முடிச்சிட்டோம். மக்கள்தான் பார்த்திட்டு சொல்லணும்.”

‘சந்தனத்தேவன்’ எந்த நிலையில இருக்கு… எப்போ எதிர்பார்க்கலாம் ?

”ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, என்னுடைய இயக்கத்துல முழுமையான படமா ‘சந்தனத்தேவன்’ இருக்கும். அதுக்காகத்தான் இந்தப் படத்தை திட்டமிட்டேன். அதுல நான் பண்ண தவறு என்னன்னா, பெரிய படமா திட்டமிட்டுட்டேன். மூணு காலகட்டங்கள் படத்துக்குள்ள இருக்கு. பட்ஜெட்டாகவும் பெரிய படம். 35 நாள் கொண்ட ஒரு ஷெட்யூலை எடுத்து முடிசேன். அப்புறம், எனக்கும் அந்தப் படத்துடைய பைனான்ஸியருக்கும் கொஞ்சம் முரணாகிடுச்சு. அதனால, அந்தப் படம் அப்படியே நிக்குது. சரி, அதை விட்டிட்டு வேறோரு படத்தை பண்ணலாம்னு பார்த்தா, இல்லை இல்லை ஆரம்பிச்சு இதை முடிச்சிடலாம்னு இந்தக் கதையில பயணிக்க வேண்டிய சூழலாகிடுது. நிச்சயமா நல்ல படமாதான் இருக்கும். வந்துச்சுன்னா சந்தோஷம். வரலைனா வருத்தப்படுறதுக்கு ஒன்னுமில்லை. அதனால, புதுமுகங்களை வெச்சு ஒரு கதை எழுதி பவுண்டட் ஸ்கிரிப்டா தயாரா வெச்சிருக்கேன். நான் எப்பவும் பவுண்டட் ஸ்கிரிப்ட் பண்ணமாட்டேன். இந்த லாக்டெளன் எனக்கு அதை கத்துக்கொடுத்துச்சு.”

நடிக்கணுங்கிற ஆசை ஆரம்பத்திலேயே இருந்ததா இல்லை… சினிமாவுக்கு வந்த பிறகுதானா?

ameer Tamil News Spot
இயக்குநர் அமீர்

”உதவி இயக்குநராகுறதுக்கு முன்னாடியே ‘அதே கண்கள்’னு ஒரு சீரியல்ல நடிச்சிருக்கேன். அப்புறம் ‘சேது’ படத்துல ஶ்ரீமன் நடிச்ச கேரக்டர் நான் நடிக்கிறதா இருந்தது. அதுக்கு தகுந்த மாதிரி சில பாடி லேங்குவேஜ் எல்லாம் சேர்க்கப்பட்டது. அப்புறம், பாலா ‘வேணாம்டா. நம்ம டைரக்‌ஷன் சைட்ல இருப்போம். அதுக்கு நம்ம வேற ஆளை போட்டுக்கலாம்’னு சொல்லிட்டார். அப்படித்தான் ஶ்ரீமன் நடிச்சார். இப்படி நான் விரும்புறேனோ இல்லையோ நடிப்பு என் மேல திணிக்கப்பட்டுக்கிட்டே இருந்தது. ‘பருத்திவீரன்’ கதையை நான் நண்பர்கள்கிட்ட சொல்லும்போது, ‘மாடுலேஷன், மேனரிசம் எல்லாம் உனக்கு ரொம்ப சரியா இருக்கும். இதுல நீயே நடி’னாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். ஆசைப்பட்டிருந்தா நடிச்சிருக்கலாம். ஆனா, எனக்கு அப்போ அந்த எண்ணம் இல்லை. ‘யோகி’ படத்துல என்னை நடிக்கவேண்டாம்னு சொன்னாங்க. பெரிய ஹீரோவெல்லாம் கதை கேட்குறாங்க. இப்போ போய் நடிக்கிறேன்னு சொல்றியே’னு சொன்னாங்க. ஆனா, நான் நடிச்சேன். இது வீம்பா என்னன்னு தெரியலை. என் வாழ்க்கையை நானே முடிவு பண்றேன், அவ்ளோதான். ‘யோகி’க்கு பிறகு, பட வாய்ப்புகள் வந்தது. ‘சரி ஏதோ தப்பைப் பண்ணிட்ட. தொடர்ந்து இதையாவது பண்ணு’ன்னாங்க. இல்லைனு ‘ஆதி பகவன்’ எடுக்கப்போயிட்டேன். ‘பருத்திவீரன்’லதான் நடிக்கலை. ‘சந்தனத்தேவன்’ படத்திலாவது நடின்னு சொன்னாங்க. ‘இல்லை இந்தப் படத்தை ஒரு நடிகரை வெச்சுதான் எடுப்பேன்’னு சொல்லி ஆர்யாவை கமிட் பண்ணேன். அப்புறம்தான் ‘வடசென்னை’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார் வெற்றி. இருக்குறது ஒரு வாழ்க்கை. அதுல எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.”

இரண்டு முக்கியமான ஆளுமைகள் இல்லாத தேர்தலை தமிழ்நாடு சந்திச்சு முடிச்சிருக்கு. நடந்து முடிந்த இந்தத் தேர்தலை எப்படி பார்க்கிறீங்க ?

”இந்தத் தேர்தல் தமிழகத்துக்கு ரொம்ப முக்கியமான தேர்தலா பார்த்தேனே தவிர, இந்த ஆளுமைகள் இல்லாத தேர்தல்னு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. ஜெயலலிதா அம்மையார் பிறக்கும்போதே ஆளுமையாகிட்டாங்களா இல்லை, முதல்முறை முதலமைச்சரானதும் ஆளுமையாகிட்டாங்களா… அப்படியில்லை. காலம்தான் ஒருத்தரை ஆளுமையாக்குது. அதனால, இந்த ஆளுமை, வெற்றிடம் இதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்ற வேலை. அவங்கெல்லாம் பார்க்காத இந்த கொரோனா தாக்குதலை எடப்பாடி பழனிசாமி அவர்களும் சரி, அண்ணன் ஸ்டாலினும் பார்த்திருக்காங்க. இதெல்லாம் புதிய பெரிய சவால். அப்போ இவங்க ஆளுமையாதான் இருக்காங்க. நான் இந்தத் தேர்தலை எப்படி பார்க்கிறேன்னா, தமிழக அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எப்படி திராவட தத்துவம் இந்த மண்ணுக்கு அவசியமாகப்பட்டதோ, திராவிடத்துக்கும் ஆரியத்துக்குமான போரா மாறுச்சோ அந்த சூழலை 60 ஆண்டுகள் கழிச்சு இப்போ வந்திருக்கிறதா பார்க்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம் வீழ்த்தப்பட்டிருந்தால், ஆரிய தத்துவம் தலை தூக்கியிருக்கும். அதனால, இதை ஆரியத்துக்கு விழுந்த அடியாதான் பார்க்கிறேன். என் மண்ணுக்கும், மக்களுக்கும், கடவுளுக்கும், கலாசாரத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத மோடி போன்றவர்கள் இங்க வந்து ‘வெற்றிவேல் வீரவேல்’னு சொல்லிட்டு இருந்தாங்க. உங்க ஆட்டத்தை முடிச்சிருக்கேன்னு ஒருத்தர் ‘முத்துவேல்’னு பதவியேற்று முடிச்சு வெச்சுட்டார்.”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *