Share on Social Media


செவ்வாய் சென்று அங்கே பசுமையைப் பரப்பவிருக்கும் ஜெயம் ரவி அதற்கு முன்னதாக, தன் ஒரு மாத கால விடுமுறையைக் கழிக்கத் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். வெளிநாட்டிலிருந்து வருபவர் ஊரில் விவசாயத்தை வைத்து நடக்கும் அரசியல் விளையாட்டுகளைக் கண்டு வெகுண்டு எழுகிறார். விவசாயத்தை மீட்க அதையே தன் தொழிலாகக் கையிலெடுக்க நினைப்பவருக்கு எதிரியாக உலகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வில்லன் வருகிறான். அவர்கள் இருவருக்கும் இடையேயான கண்ணாமூச்சி ‘சயின்ஸ் ஃபிக்ஷன் மெடிக்கல் பயோலாஜிக்கல் அக்ரி ஃபேண்டஸி’தான் ‘பூமி’.

பூமி

ஜெயம் ரவியின் 25-வது படம். நிறையக் காட்சிகளில் அநாயசமாக நடித்திருக்கிறார். படத்தைப் பார்க்க வைக்கும் ஒரே நபர் அவர்தான். சண்டைக் காட்சிகள் தொடங்கி பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதுவரை அத்தனை சிரத்தையுடன் செய்திருக்கிறார். ஆனால், கதைத் தேர்வில் இன்னும் கவனமாய் இருந்திருக்கலாமே தோழர்!

லாஜிக் மீறல்களை ஓரம் வைத்துவிடலாம். சில காட்சிகளை ‘என்னதான் இருந்தாலும் இது சினிமாதானே’ எனும் வகையில் புறந்தள்ளியும் விடலாம். ஆனால், அவற்றை விட்டுவிட்டுப் பார்த்தாலும், படம் வெறுமனே வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளின் குவியலாகத்தான் இருக்கிறது. நாசாவிலிருக்கும் ஜெயம் ரவிக்கு தன் கிராமத்தின் நிலைமையும் தெரியவில்லை, காதலி எப்படி இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இவ்வளவு ஏன், ஒரு கிராமம் எப்படியிருக்கும், அதன் கதை மாந்தர்கள் எப்படியிருப்பார்கள் என்பதில் இயக்குநருக்கே எந்தப் புரிதலும் இல்லை.

Bhoomi 2 Tamil News Spot
பூமி

சினிமாவில் ஒரு வசனம் வந்தாலோ, புள்ளி விவரங்கள் ஏதும் சொன்னாலோ, அதன் நம்பகத்தன்மையைச் சோதிக்க, உடனே மொபைலில் கூகுளைத்தட்டும் காலம் இது. அப்படியிருக்க, வெளிநாடுகளில் கார் தயாரிக்கத் தடை; சுவாசிக்க கார்பன் டை ஆக்ஸைடு (உறுப்புகள் ‘டெனெட்’ படம் போல ரிவர்ஸில் செயல்படுமோ!), கண் பார்வை இழக்கச் செய்யும் வைரஸ் என அறிவியலோடு வீம்பாக விளையாடியிருக்கிறார் இயக்குநர். கோபுர கலசத்தில் முன்னோர்கள் நூற்றாண்டுக்கு முன்வைத்த விதைநெல் இன்னமும் தூசியாகாமல் சிதையாமல் இருக்கிறது… அரிசி மட்டுமன்றி பல்வேறு காய்கறியின் விதைகளும் அதில் இருக்கிறது; ஒருவரின் முடியை ஆராய்ச்சிக்கு அனுப்பினால் அவரின் ஜாதகமே தெரிந்துவிடும்; காபியில் கெமிக்கலை கலப்பதன் மூலம் ‘ஆட்டிஸம்’ குறைபாட்டை நொடியில் வரவைக்க முடியும் என்று இன்னொரு காதில் காளிஃபிளவரை சுற்றியிருக்கிறார்கள்.

“என்ன நீ இப்பவே கொன்னுடு. இல்லாட்டி ரொம்ப வருத்தப்படுவ” என ஜெயம் ரவி இடைவேளை சமயத்தில் பேசும் வசனத்தின் மூலம் நம்மைத்தான் ஓடிடியை கிளோஸ் செய்யச் சொல்கிறாரோ எனத் தோன்றும் அளவுக்கு நாயகன் – வில்லன் மோதலில் வசனங்கள் செல்கின்றன. உலகை ஆளும் 13 குடும்பங்கள் (எல்லாம் நம்ம இல்லுமினாட்டி பயதான்!), கடையில் விற்கும் எல்லா பொருள்களும் ஒரே நிறுவனம், விதைகள் எல்லாம் கார்ப்பரேட் வசம் என ஆரம்பித்து வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளும், யூடியூபில் வரும் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை வீடியோக்களின் சாரமும் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.

Bhoomi 4 Tamil News Spot
பூமி

பெண் மயக்கத்தில் எப்போதும் இருக்கும் கலெக்டர், சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் வட்டாட்சியர், வில்லன் சொல் கேட்டு கணவரைப் போட்டுத் தள்ளும் மனைவிகள் (நம்மூர் அமைச்சரைக் கண்காணிக்க வெளிநாட்டு வில்லன் வைத்த ஸ்லீப்பர்செல்லாம்!) எனப் படம் எந்தக் காலத்தில் நடக்கிறது, எந்த உலகத்தில் நடக்கிறது என்றே தெரியவில்லை. அதிலும் அந்த ஜட்ஜய்யா கதாபாத்திரம்… எங்கேயோ போய்ட்டீங்க தெய்வமே! கோர்ட்டில் யார் அப்படிப் பேசியிருந்தாலும் கடுமையான தண்டனை கிடைத்திருக்கும். ஏங்க, நீங்க இல்லுமினாட்டினா என்ன வேணா பேசுவீங்களா?!

‘கார்ப்பரேட் வேலை போனா என்ன, அதே வேலையைத் நான் தருகிறேன்’ எனச் சொல்லும் காட்சி விஷமத்தின் உச்சம். உண்மையில் கோலிவுட் இயக்குநர்களுக்கு IT, ITES CORE போன்ற வெவ்வேறு கார்ப்பரேட் வேலைகளைப் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்பதற்கான சான்று அக்காட்சி. வெளிநாட்டுக்கு வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் போதும் போல… மீதி எல்லாவற்றையும் அவர்களே மானே தேனே போட்டு நிரப்பிக் கொள்கிறார்கள்.

Bhoomi 3 Tamil News Spot
பூமி

சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, நிதி அகர்வால், சதீஷ், ராதாரவி, ஜான் விஜய் எனப் பல தெரிந்த முகங்கள். ஆனால், எல்லாமே ஃபார்வர்டுகளுக்கு மத்தியில் காணாமல் போய்விடுகிறார்கள். பிரம்மாஸ்திரம் வரை பக்காவாக பிளான் செய்யும் பாலிவுட் இறக்குமதி வில்லன் வேறு. வில்லன் சீப்பை ஒளித்து வைப்பதும், ஹீரோ கல்யாணம் நின்று போவதையும் ரிப்பீட் முறையில் எத்தனை தடவைதான் பார்ப்பது? இதற்கு மேல் சீப்பை ஒளித்துவைக்க முடியாது என்பதால், மனமில்லாமல் படத்தை முடித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு கிராமத்தின் வறட்சியைக் கவர்ந்து வந்திருக்கிறது. ஆனால், படத்தில் வரும் போலி வாட்ஸ்அப் ஃபார்வேடுகள் போதாது என்பது போல், பாடல் வரிகளிலும் இலவச மின்சாரம் வேண்டாம், கடன் தள்ளுபடி, லோன் வேண்டாம் என வரிகள். விவசாயிகள் பாவம் பாஸ்! கொஞ்சமேனும் விவசாயிகளுக்கு என்ன பிரச்னை, அவர்கள் ஏன் தற்போது டெல்லியில் போராடுகிறார்கள் என்பதையெல்லாம் யூடியூபில் தேடாமல், கூகுளில், குறிப்பாகச் செய்தி ஊடகங்களின் லிங்க்குகளைத் தேடிப் பாருங்கள்.

5feb31eb5c391 Tamil News Spot
பூமி

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் வரும் படத்தின் போகி காட்சி அழகிய குறியீடு இயக்குநர் சார். நிறையப் படியுங்கள்! இணையத்தில் குப்பைகளுக்கு நடுவே நல்லவையும் கொட்டிக் கிடக்கிறது மரியாதைக்குரிய இயக்குநர் அவர்களே!

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான். தமிழ் குடி ஆதிக்குடிதான். ஆனால், அதற்காக வெறுமனே எந்த மெனக்கெடலும் இல்லாமல், விவசாயத்தையும், ‘தமிழன் ஒன்றும் முட்டாள் இல்லை’ ஃபார்மேட்டையும், வாட்ஸ்அப், யூடியூப் புரளிகளையும் வைத்து மட்டுமே படம் எடுக்கலாமா?!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *