திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் தாலுகாவை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது பிரிக்கப்பட்டது. மாவட்ட பிரிப்பின்போது, திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு அளித்தது. தற்போதைய அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ள பொன்முடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.அதனை பொருட்படுத்தாத அப்போதைய அரசு திருக்கோவிலுாரை, கள்ளக்குறிச்சியில் இணைத்தது. இதன் காரணமாக பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்தது.காவல், வருவாய், கல்வித் துறைகள் பிரிக்கப்பட்டு விட்ட நிலையில், திருக்கோவிலுாரில் இருந்து பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாக்கள் விழுப்புரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.இதன் காரணமாக திருக்கோவிலுாரில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் இருக்கும் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட மணம்பூண்டி, அரகண்டநல்லுார் மக்கள் பிறப்பு, இறப்பு சான்றுகளை தாலுகா அலுவலகத்தில் பெறாமல் விடுபட்டவர்கள், 40 கி.மீ., துாரம் உள்ள விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நாட வேண்டியுள்ளது.
இருப்பினும், இந்த தாலுகாக்களுக்குட்பட்ட காவல் நிலைய வழக்குகள் இன்றளவும் திருக்கோவிலுார் கோர்ட்டிலேயே விசாரிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் வரதட்சணை கொடுமை, திருமணமான சில நாட்களில் பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அது குறித்த வழக்கு விசாரணைக்கு அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வை அணுக வேண்டியுள்ளது.அதே போன்று, அரகண்டநல்லுாரில் இருந்து திருக்கோவிலுார் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் போலீசார் பங்கேற்று வந்த நிலையில், தற்போது விழுப்புரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்னை என்றால் விழுப்புரத்திலிருந்தே காவல்துறை அதிகாரிகள் வரவேண்டியுள்ளது. இது போலீசாருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் திருக்கோவிலுார் தாலுகாவை விழுப்புரம் மாவட்டத்துடன் முழுமையாக இணைத்து விட்டால் திருக்கோவிலுார் கோட்டத்தில் ஏற்கனவே இருந்த கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லுார் தாலுகாவை இணைப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் மிகுந்த பயனடைவர்.
திருக்கோவிலுாரை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என அப்போது போராடிய தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி தற்போது அமைச்சராகவும் உள்ளார்.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி திருக்கோவிலுாரை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement