Share on Social Media


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து நினைவூட்டல் மனு கொடுப்பதற்காக கையில் 350 பக்கங்கள் கொண்ட கோப்புகளுடன் நின்றிருந்த முனுசாமி என்ற நபரை சந்தித்தோம். அப்போது தனது ஊராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து நம்மிடம் கூறினார். “என்னுடைய பெயர் முனுசாமி. திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் ஊராட்சிக்கு செயலாளராக இருப்பவர் ஏழுமலை. அவரும் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தான். கடந்த 22 வருடமாக இங்கேயே பணியில் இருக்கிறார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்க வேண்டிய பொருட்களை தன் வீட்டிலேயே வைத்து வேலை செய்து வருகிறார். ஏதாவது தவறை பொதுமக்கள் சுட்டிக்காட்டி அவரிடம் கேட்டால், மிரட்டும் தோனியில் பேசி ரேஷன் அட்டை, ஏரி வேலை அட்டை போன்றவற்றை எடுத்துடுவேன் என்று மிரட்டி அனுப்புகிறார். இவர் பணியில் தவறு செய்வது வெளிப்படையாகவே தெரிந்தது. அதனால் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத இந்த நான்கு ஆண்டுகளில் (2017 – 20) ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு மற்றும் செயலாளரின் சொத்து மதிப்பு குறித்தும் 2020 மே மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (RTI) கேட்டிருந்தோம். ஒரு மாத இடைவெளியில் தகவலை கொடுத்த அதிகாரி, வெறும் 25 பக்கத்தில் மட்டுமே மேலோட்டமாக தகவல் கொடுத்திருந்தார்.

முனுசாமி, ஏழுமலை

Also Read: விழுப்புரம்: 56 ஏக்கருக்கு பதிலாக, 158 ஏக்கர்! – போலி திட்ட மதிப்பீடு மூலம் ரூ.35 லட்சம் முறைகேடு?

அதனால் நண்பர் ஒருவரின் உதவியோடு ஆன்லைன் மூலமாக இரண்டு பெரிய புத்தகங்களில் பஞ்சாயத்து வரவு செலவு கணக்கை எடுத்தோம். அதில் பல ஊழல் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அதிலிருந்து 59 குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்தோம். அதற்கு ஆதாரமாக 350 பக்கங்களை உடன் இணைத்து புத்தகமாகவே வைத்துள்ளோம். அரசுப் பணியில் உள்ளவர்கள், துப்புரவு பணியாளர்கள், சென்னையில் இருப்பவர்கள், கணவன்-மனைவி அல்லாதவர்கள், அடையாளமே தெரியாதவர்கள் என 22 நபர்கள் மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி அட்டையை தயார் செய்து பல லட்சம் ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் செயலாளர். அண்மையில் சரிசெய்யப்பட்ட மினி டேங்க் உடன் சேர்த்து மொத்தம் 4 மினி டேங்குகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், 13 மினி டேங்குகள் இயங்கி வருவதாகவும், அதற்கு மோட்டார் வாங்குவது போன்ற செலவினங்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். கடந்த 2018 – 19 ஆண்டுகளில் 6 நபர்கள் நிலங்களில் வரப்பு மடிப்பதற்காக 3,190 ஏரி வேலை செய்யும் ஆட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக 130 ரூபாய் முதல் 205 ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் கணக்கு காட்டியுள்ளார். ஆனால் அந்த பணிக்கு அத்தனை ஆட்கள் பயன்படுத்தப்படவில்லை. ஒரு நாள் ஊதியமாக மக்களுக்கு 100 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குளமே வெட்டாமல்..! ஏரிவேலை செய்யும் படிக்காத மக்களிடம் பிரியாணி வாங்கித் தருவதாகக் கூறி, ஏரியில் உள்ள பள்ளத்தில் நிற்கவைத்து போட்டோ எடுத்து பல ஆயிரம் ரூபாய் ஊழல் செய்துள்ளார். ஊராட்சி அடிப்படை தேவைகளுக்கு பொருள் வாங்கியதாக இல்லாத கடைகளின் பெயரில் பில் போட்டு பஞ்சாயத்து நிதியிலிருந்து காசு எடுத்திருக்கிறார். இப்படி எங்க கிராமத்துல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பணி முடிவிலும் அந்த இடத்தில் போர்டு ஒன்னு வைப்பாங்க. அதில் ஒரு நாள் கூலியாக 205 ரூபாய் வரை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருப்பார்கள். ஆனா, எங்க ஊர்ல கடந்த 4 வருடத்தில் ஏரி வேலை அப்படி என்றாலே 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரைக்கும்தான் அக்கவுண்ட்ல போடுவாங்க. சுமார் 20 கழிப்பறையை கட்டாமலேயே சம்பந்தப்பட்ட நபர்கள் பெயரை பயன்படுத்தி பணி 12,000 ரூபாய் வீதம் காசு எடுத்திருக்காரு. யாருன்னே தெரியாத பெயரெல்லாம் கூட அந்த லிஸ்ட்ல இருக்கு.

Also Read: கிசான் சம்மான் ஊழல்: `களவாடப்பட்டது 321 கோடி, கைப்பற்றப்பட்டது 162 கோடிதானா?’- கொதிக்கும் விவசாயிகள்

இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், 2017 – 19 ஆண்டுகள் வரை ஊரக வேலை பணியில் ஊழல் நடந்திருப்பதை சமூக தணிக்கை அதிகாரிகள் ஏராளமாக கண்டுபிடிச்சிருக்காங்க. ஏரி வேலை மூலம் நடந்த ஊழல் முதற்கொண்டு, கிராம ஊராட்சி சேவை மையத்தை கட்டிய ஊழல் வரை அதுல காட்டியிருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் சுமார் 50 லட்சத்துக்கு மேல் ஊழல் நடந்திருக்கும்.

Pic Merger 659 Tamil News Spot
பழுதடைந்து காணப்படும் மினி டேங்குகள்.

இப்படியாக கிராமத்தில் நடந்த, நடக்காத பணிகளில் எல்லாம் ஊழல் செய்திருக்கிறார் கிராம செயலாளர் ஏழுமலை. இது தொடர்பாக கடந்த ஒரு வருஷமா… வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர், லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலகம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி அப்படின்னு சுமார் 10க்கும் மேலான இடத்தில் மனு கொடுத்துள்ளோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதுசா வந்திருக்கும் கலெக்டர் கிட்டயும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிட்டயும் இந்த புகாரை கொடுத்திருக்கிறோம்” என்றார்.

அந்த கிராமத்தில் உள்ள ஒரு சிலரிடம் பேசினோம். “எங்க பகுதியில ஒரு மினி டேங்க் இருக்கு. அது ரிப்பேர் ஆன போது கிராம செயலாளர் கிட்ட முறையிட்டோம். சரி பண்ணியே தரல. அதனால நாங்களே சொந்த செலவில் பழுதுபார்த்து இதுவரைக்கும் பயன்படுத்தி வரோம்”. என்றனர் இரு இளைஞர்கள். பூங்கொடி என்ற பெண்மணியோ, “நாங்களே எங்கள் கைக்காசை போட்டு தான் வீட்டில் பாத்ரூம் கட்டினோம். கட்டி முடிந்த பின், பில் வாங்கி தரேன்னு கிளர்க் சொன்னாரு. பணம் இல்லாம கஸ்டமா இருந்ததால பாதியிலேயே நிறுத்திட்டோம். எங்களுக்கு எந்த காசும் வரலங்க. எங்க கணவர் பேர்ல பாத்ரூம் கட்டியதாக காசு எடுத்து இருக்காங்களா..!” என்று அதிர்ச்சியாக கேட்டார் அவர்.

Pic Merger 348 Tamil News Spot

இது தொடர்பாக காட்டுச்சிவிரி கிராமத்தின் செயலாளர் ஏழுமலையிடம் பேசினோம்.

“எனக்கும் புகார் சொன்ன அவருக்கும் தனிப்பட்ட பிரச்னை இருக்கு. அத மனசுல வச்சுக்கிட்டு தான் இப்படியெல்லாம் பண்றாரு. இந்த குற்றச்சாட்டு, முன்னாடி இருந்த பி.டி.ஓ கிட்ட போச்சு. “போலி அட்டை இருக்குன்னு சொல்றாங்களே, அந்த அட்டை காரங்களை அழைச்சுக்கிட்டு வாங்க” அப்படின்னு சொன்னாரு. நானும் அழைச்சுக்கிட்டு போனேன், அந்த விசாரணையும் முடிஞ்சது. அவங்க சொல்லுறதுலாம் பொய்னு சொல்லிட்டாங்க. ஒருநாள் அதிகாரிங்க, ஊராட்சியில் வந்து விசாரணை நடத்தினப்போ ‘செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லன்னா உங்கள் மீது புகார் கொடுப்போம்’ அப்படின்னு எனக்கு எதிராக புகார் கொடுத்தவங்க சத்தம் போட்டதால அந்த அதிகாரிங்க போயிட்டாங்க. அப்புறம் எல்லா கட்சிக்காரங்க முன்னிலையில் எழுத்துபூர்வமாக எழுதி பி.டி.ஓ ஆபீஸ்ல கொடுத்துட்டோம்.

இன்று எல்லா கணக்கு வழக்குகளும் ஆன்லைன் மூலமாக தான் நடக்கிறது. நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு தான் தொகை செல்கிறது. நான் சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த தொகையை கேட்டு வாங்கி இருந்தாலோ, என் வங்கி கணக்குல வரவு வைக்கப்பட்டிருந்தாலோ தான் பிரச்னை. அதிகாரிகள் குற்றம் கண்டுபிடித்து கேட்டால் அதற்கு நான் பதில் சொல்கிறேன்” ௭ன்றார்.

Also Read: “இப்பவும் என் மனைவி 100 நாள் வேலைக்குப் போவாங்க” – வியக்கவைக்கும் கந்தர்வகோட்டை கம்யூனிஸ்ட் எம்எல்ஏ

IMG 20210813 WA0036 Tamil News Spot
குளம் வெட்டியதாக கூறப்படும் ஏரி பகுதி

இதுதொடர்பாக இந்த துறைக்கு சம்பந்தப்பட்ட மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசினோம். “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த புகார் விசாரணையில் உள்ளது. அதற்கான விசாரணை அதிகாரியை நியமித்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *