Share on Social Media


கோவை குறிச்சி குளத்தின் கரையில், இரவில் கடும் இருட்டாக இருப்பதால், பாதசாரிகளும், வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.கோவை-பொள்ளாச்சி ரோட்டிலுள்ள குறிச்சி குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதன் கரைப்பகுதியும் அகலமாக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை, சைக்கிள் பாதை போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் குறிச்சி பிரிவிலிருந்து சுந்தராபுரம் நோக்கிச் செல்லும் ரோட்டில், ஒரு கி.மீ., துாரத்துக்கு, கரைப்பகுதியில் நிறைய பணிகள் நடக்கின்றன.ஆனால் இந்த கரையை ஒட்டியுள்ள ரோடு அகலமாக்கப்படவில்லை. ஒரு புறத்தில், மேம்பாட்டுப் பணியால் ரோடு மேலும் குறுகலாகியுள்ளது. முன்பு அங்கு வாகனங்கள் ஒதுங்குவதற்கு இடம் இருந்தது.இப்போது அந்த இடங்கள் மேடாக்கப்பட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளதால், வாகனங்கள் ஒதுங்கவும் இடமில்லை. மறுபுறத்தில் மண் ரோடாக இருப்பதோடு, அங்கு கடைகள் ஆக்கிரமிப்பு அதிகமாகவுள்ளது.

அந்த பகுதியில் ரோட்டுக்கும், மண் தரைக்கும் உயர வித்தியாசம் இருப்பதால் நிறைய வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. பொங்காளியம்மன் கோவில் அருகில் ஒரு புறம் கோவிலும், மற்றொரு புறம் பெரிய ஆலமரமும் இருப்பதால், அந்த இடத்தில் ரோடு மிகவும் குறுகலாகவுள்ளது. இப்படியாக குறிச்சி குளக்கரையில் விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புமிக அதிகமாகவுள்ளது.குறிச்சி குளத்தை மேம்படுத்தும் பணியைத் துவக்குவதற்கு முன்பே, குளத்தின் கிழக்குக்கரைப் பகுதியில் உள்ள ரோட்டை அகலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை இதற்காக எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.

இதற்கு பொள்ளாச்சி எம்.பி.,யும், கோவை எம்.பி.,யும் சேர்ந்து குரல் கொடுத்து, சிறப்பு நிதி வாங்கி, இந்த இடத்தில் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.அது மட்டுமின்றி, குறிச்சி குளம் மேம்படுத்தப்பட்ட பின்பு, அங்கு வரும் வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ இடத்தை ஒதுக்குவதிலும் பிரச்னை உள்ளது. ரோட்டில் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், விபத்து நடக்காத வகையிலும் ‘பார்க்கிங்’ பகுதியைத் திட்டமிடுவது கட்டாயமாகும்.

இவை அனைத்தும் மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.இப்போது குறிச்சி குளத்தில் நடந்து வரும் பணிகளின் பொருட்டு, அந்தக் கரையில் இருந்த விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அதனால் அந்தப் பகுதி கடும் இருட்டாகவுள்ளது. பாதசாரிகள் கடப்பதே தெரியவில்லை.
ஏற்கனவே குறுகலான ரோடு, உயர வித்தியாசம், கோவில், மரம் என விபத்துக்கான காரணிகள் அதிகமிருக்கும் நிலையில், இப்போது விளக்குகளும் எரியாததால் இரவு நேரத்தில் இங்கு விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.
குளத்தை மேம்படுத்தும் பணியும், மந்த கதியில் நடப்பதால் இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த ஆபத்து தொடருமென்பது தெரியவில்லை.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.-நமது நிருபர்-



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *