Share on Social Media


இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா 2ஆவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு ரத்து: புதுச்சேரி மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் +2 தேர்வு நடைபெறாது என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் – மருத்துவமனை உரிமம் ரத்தாகும்: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்: தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புராதன கோயில்களை பாதுகாக்க மத்திய சிலைக்கடத்தல் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார்.

கருப்பு பூஞ்சை மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கருப்பு பூஞ்சை மருந்து வாங்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 280 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முடங்கியது இ-பதிவு இணையதளம்: ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்ய முயன்றதால் இ-பதிவு இணையதளம் முடங்கியது என்றும், இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறி நடத்தப்பட்டதா திருவிழா?: தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடந்தது தொடர்பாக வீடியோ வெளியானது.

ஆன்லைன் வகுப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் தயார்: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். +2 மதிப்பெண் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடும் வாகன நெரிசல்: தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து டெல்லியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா மறைவு: தத்ரூப ஓவியங்களால் பிரசித்தி பெற்ற ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் காலமானார். கலைகளின் வழியாக காலம் கடந்து வாழ்வார் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் – பாதுகாவலர், கார் ஓட்டுநருக்கு சம்மன்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாதுகாவலர், ஓட்டுநர், அலுவலக உதவியாளருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தடுப்பூசி -ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம்: புதுக்கோட்டை, மதுரையில் கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இ-பதிவு பெற்று பயணிக்க அறிவுறுத்தல்: தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் வாகன போக்குவரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இ-பதிவு பெற்று பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *