Share on Social Media


(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள ’drop down’ மூலம் பாகம் 1-24 படிக்காதவர்கள் படிக்கலாம்).

இது 25வது வாரம். என்னைப்பொறுத்தவரை பெரிய மைல் கல். இதுதான் என் முதல் முயற்சி. இருப்பினும் சில ஆயிரம் வாசகர்களில் ஆரம்பித்த முதல் கட்டுரை மெல்ல மெல்ல உயர்ந்து ஒரு நல்ல இடத்தை தொட்டது நான் முற்றிலும் எதிர் பார்க்காத ஒன்று. இந்தக்கட்டுரை எனக்கு சில நல்ல இணைப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சி. நான் பெற்ற மகிழ்ச்சி தன்னலம். ஆனால் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் என் அனுபவங்களை படித்து என்னை ஊக்குவித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தியா இலங்கை மற்றும் உலகமெங்கும் கிடைக்கும் கோபால் பல்பொடி மாதிரி எனக்கும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா, மலேஷியா, கத்தார், ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல நாடுகளில் இருந்தும் பல தரப்பட்ட வாசகர்கள். என் கிராமத்துக்கு பக்கத்து கிராம மக்கள், பயணம் செய்ய விரும்புவோர், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர், நிறுவனங்களின் பெரிய பொறுப்புகளில் உள்ளோர், ஓய்வு பெற்றவர்கள், பள்ளியில் நான் தொலைத்த நண்பர்கள் என.

ஏதோ ஒருவிதத்தில் என் எழுத்துகள் உங்களை அடைந்தது நான் செய்த பாக்கியம்.

Tunis

என் முதல் அத்தியாயத்தில் சொன்னேன். எப்படி கிராமத்தில் ஆரம்பித்த என் பயணம் என்னை 50+ நாடுகளுக்கு அழைத்துச்சென்றது என்று. அனைத்துக்கும் முதற்காரணம் என் பெற்றோர்களின் முனைப்பு மற்றும் தியாகங்கள். அன்பான மனைவி, குழந்தைகள் மற்றும் எனக்கு கிடைத்த சகோதர சகோதரிகள். ஒரு கை விரல்கள் போல, எல்லா வித்தியாசங்களையும் கடந்து ஒரு அடிப்படை அம்சம் எங்களை ஒன்றாக வைத்திருக்கின்றது. அது ரத்த சொந்தம் தாண்டிய மரியாதை கலந்த அன்பு. பின் எங்கள் அன்பான சொந்தங்கள். அருமையான சிநேகிதர்கள்/சிநேகிதிகள் மற்றும் எனக்கு கற்பித்த ஆசான்கள் – பள்ளியிலும் மற்றும் அலுவல்களிலும். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நன்றி.

அடிக்கடி நான் நினைப்பதுண்டு. அதிகம் படிக்காத மற்றும் பெற்றோர்களை சின்னஞ்சிறு வயதில் இழந்த என் அம்மாவுக்கு எப்படி அந்த தன்னம்பிக்கையும் எதையும் சவாலாக ஏற்று செய்யும் மனோதைரியமும் வந்தது என்று. தினமும் பெரிய குடும்பத்துக்கு சமைத்து போடுவது, வீட்டின் வரவு செலவுகளை சமாளிப்பது, மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது, பத்திரிகைகளுக்கு அவ்வப்போது துணுக்குகள் எழுதி அனுப்பவது என தினசரி கடமைகள் ஒரு பக்கம். அப்பா மூத்தவர் என்பதால், கூட்டுக்குடும்பத்தில் 7-8 நாத்தனார்கள் மற்றும் கொழுந்தர்களை சமாளித்து மணம் முடித்து அனுப்பியது மறுபக்கம். பாட்டி எப்போதும் படுத்த படுக்கை. தாத்தா பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. பொறுப்புகள் வெகுவாக அப்பா அம்மா தலையில்.

இவ்வளவு சுமைகள் இருந்தது, பிள்ளைகளை வளர்த்து படிக்கவைப்பதை பாதித்திருக்கலாம். அங்கேயும் செவ்வனவே தங்கள் கடமையை செய்து முடித்தார்கள். நம்புவது கடினம். இருந்தும் சொல்கிறேன். என் பெற்றோர்கள் இருந்தவரை பிள்ளைகளை ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை. எப்போதுமே ராஜா, செல்லம் என்றுதான். அம்மா எப்பொழுதும் ஒரு பழமொழியோ அல்லது திருக்குறளோ சொல்லி எங்களை நெறிப்படுத்துவார். அப்பா பக்கத்தில் அமரவைத்து தோளின்மேல் கைபோட்டு அணைத்து, ராஜா இப்படி இருக்கணும், அப்படி படிக்கணும், உனக்கு ஒரு குறைச்சல் இல்லை என்று தன்னம்பிக்கை கொடுப்பார். சித்தப்பாக்கள் மற்றும் அத்தைகளும் அன்புதான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு செய்யும் விதமாக, தாத்தா மட்டும் “இதுங்க உருப்படாதுங்க” என்று அடிக்கடி ஜோசியம் சொல்லுவார்.

வில்லியனூர் அத்தை வீட்டுக்கு வரும்போது எங்களுக்கு “குச்சி ஐஸ்” சாப்பிடவும் “வாட்ச் மிட்டாய்” வாங்கவும் 25 பைசா கிடைக்கும். நாங்கள் சற்றே வளர்ந்த பிறகு, கடலூர் அத்தை எங்களுக்கு பேப்பர் தோசையையும், லஸ்ஸியையும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார். பக்கத்து தெரு அத்தை வீட்டுக்கு சென்றால் தவறாமல் தோசை கிடைக்கும். கடலூர் மாமா, நாங்கள் இளைய பருவத்தின் எல்லையில் அடியெடுத்து வைக்கும்போது எங்களுக்கு H M T கைக்கடிகாரம் மற்றும் டான்டக்ஸ் உள்ளாடைகளை அறிமுகப்படுத்தியவர். முதலியார்பேட்டை மாமா, வரும்தோறும் பச்சைத்தாளில் சுற்றிய “பாரி” சாக்லேட் வாங்கிவருவார். சாக்லேட் சாப்பிட்ட பின், அந்த பச்சைத்தாளை வைத்து அழகான உருவங்கள் செய்துகாட்டுவார். நெசனூர் மாமா வரும்தோறும் அக்கா அக்கா என்று அம்மாவை அன்புடன் அழைத்து தேவைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பார். சிறார் பருவத்தில் மிதிவண்டியில் வைத்து தினமும் பள்ளிக்கு அழைத்து சென்ற சித்தப்பாக்கள் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியுமா? இப்படி ஒவ்வொருவரும் அன்பையே காட்டினார்கள். அம்மாவும் தன் அதீத “உறவுகளை” போற்றி பராமரிக்கும் திறமையால் எல்லோருக்கும் நல்லவராக இருந்தார். அதனாலேயே எல்லோரும் முன்வந்து “அக்கா” / “அண்ணி” சொன்னால் செய்து முடிக்க தயாராக இருந்தார்கள். ஆகவே சிறு வயதில் இருந்த ” சிறிய பற்றாக்குறை” அவ்வளவாக எங்களை பாதிக்கவில்லை.

சமையல் அறையில் (கூடம் என்று சொல்லுவோம்) எல்லோரும் கூட்டமாக அமர்ந்துதான் உணவு அருந்துவோம். சமயத்தில் தொட்டுக்கொள்ள ஒன்றும் இருக்காது. அம்மா “ராஜா போய் முறுக்கு வாங்கி வா” என்று யாராவது ஒருவரை அனுப்புவார்கள். வீட்டிலிருந்து இறங்கி வலது பக்கம் மூன்று வீடு தள்ளி கடைசி வீடு முறுக்குக்காரம்மா வீடு. கணவனை இழந்தவர். மூணு பெண்கள். அனைவரும் முறுக்கு சுற்றுவார்கள்(making murukku with hand). அந்த பதமான மாவை மூன்றே விரல்களால் சுருட்டி சுருட்டி வட்டமான முறுக்கை துணியின் மேல் வார்ப்பார்கள். எப்போதும் வீட்டில் முறுக்கு காய்ந்து கொண்டிருக்கும். உள்ளே சென்று முறுக்கு வாங்கி பின் வலது திரும்பி முதல் குடிசை வீட்டில் ஜன்னல் வழியாக வேறு முறுக்கு வாங்கி பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வருவேன்.

இரண்டு முறுக்குக்காரம்மாக்களும் உறவுதான். பக்கத்து பக்கத்து வீடு. ஒரே தொழில். ஆனால் இருவரின் முறுக்குகளும் வேறு விதம், போட்டியில்லா ஒப்பந்தம் (Non-Compete Agreement) போட்ட மாதிரி. அந்த குடிசை வீட்டு முறுக்காரம்மா பெரிய மகன் பெயர் இருசன். இகுசன் என்றுதான் சொல்லுவார். (“ர” வராது). கோழிப்பண்ணை வைக்கவேண்டும் என்று முயற்சி செய்து ரயில்வேயில் காங்க்மென் வேலை செய்த அப்பா குடியால் அகால மரணம் அடைய, கடைசியில் இருசனும், நீண்ட நாள் கனவை தொலைத்து, காங்க்மென் வேலையில் சேர்ந்தார்.

image2 Tamil News Spot
Kuwait City

முறுக்குக்கே வருவோம். வாங்கி வந்த முறுக்கை அருமையான வெங்காய சாம்பாருக்கோ காரக்குழம்புக்கோ தொட்டுக்கொண்டு அனைவரும் சாப்பிடுவோம். சமயத்தில் பிள்ளைகள் சுற்றி அமர, அம்மாவோ சித்தியோ பிசைந்த சாதத்தை, ஒருவர் பின் ஒருவராக கைநீட்ட, கையில் வைப்பார்கள். கதை பேசி சாப்பிட்டு பல நாட்கள் மகிழ்ந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதே அளவு ஞாபகம் இருக்கிற இன்னொரு விஷயம் என் அண்ணன் மாரியம்மன் கோவில் வேப்ப மரத்தில் ஏறி கிளை முறிந்து 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழ அம்மா கதறி அடித்துக்கொண்டு கோவிலில் இருந்து அண்ணனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை ஓடியது.

அந்தி சாயும் வேளைகளில் அம்மா எங்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து வாசலில் அண்டாவில் உள்ள தண்ணியை சொம்பால் மொண்டு கை கால் சுத்தம் செய்து “தின்றதுக்கு” (Snacks) கொடுப்பார்கள். “தின்றது” விஷயத்தில் கூட, அண்ணனுக்கு முறுக்கு, இன்னொரு அண்ணனுக்கு தேங்காய் பிஸ்கட், அக்காவிற்கு பாதுஷா, தம்பிக்கு பொறை பிஸ்கட், எனக்கு ஓமப்பொடி என்று சுழற்ச்சி முறையில் எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சிப்பார்கள். பின் கோவிலுக்கு சென்று, வேண்டி, விபூதி வைத்து திரும்பி, அவரவர் இடத்தில் உட்கார்ந்து அம்மா மேற்பார்வையில் படிப்போம். அப்பா எல்லாவற்றையும் “ஈசி சாரில்” சாய்ந்தபடி அமைதியாக பார்த்து மகிழ்வார். இப்படி சந்தோஷமாக வளர்ந்த பருவம் மற்றும் நிறைய சம்பவங்கள், வாழ்க்கையைப்பற்றிய அழகையும் உறவின் மேன்மையையும் என் மனதில் விதைத்தன.

சம்பவங்கள் மற்றும் இல்லை. மக்களும்தான். எத்தனை விதங்கள். ஆறுமுகம், மெத்தை தாத்தா மற்றும் பூங்காவனம் பற்றி சொன்னது ஒரு சாம்பிள் தான். பக்கத்து வீட்டு வாழக்கா வடை (காரணப்பெயர்தான். காரணம் என்ன என்று தெரியாது) பஸ் ஓட்டுநர். அப்பாவுக்கு தூரத்து பங்காளி. முரடன். குடிகாரன். யாரும் சகவாசம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு வாய்த்த மனைவி இன்னும் மேல். பேருந்து ஓட்டி இரவு போதையில் வீடு திரும்ப மனைவி போட்டுக்கொடுக்க, பிள்ளைகளை வீட்டுக்கு வெளியில் தூணில் கட்டி, நிர்வாணமாக்கி பெல்டால் அடிப்பார்.

வாழக்கா வடைக்கு எதிர் வீடு மண்டகண்ண செட்டியார். நிறைய குழந்தைகள். காய்கறி கடை உரிமையாளர். பெரிய மாடி வீடு. ஆனால் மிக பழையது. ஒரு முறை கனமழை பெய்ய வீட்டின் ஒரு பகுதி பெரிய சத்தத்துடன் இடிந்து விழுந்தது. எல்லோரும் பயந்தோம். அவரோ ஒன்றுமே நடக்காதது மாதிரி இருக்க ஒவ்வொரு மழைக்கும் பகுதி பகுதியாக இடிந்து கொண்டே போனது வீடு. ஆனால் அவர் கடைசி வரை ஒன்றுமே செய்யாமல் அந்த இடிந்த வீட்டிலேயே மறைந்தும் போனார். அவர் மறைந்தபின், மூத்த மகன் தலையெடுத்து இப்போது புதிய வீடு.

அப்படி இடிந்த வீட்டின் ஒரு பெரிய தூண் உருண்டு வந்து தெரு ஓரம் அரண் போல நின்றது. நாங்கள் அதை பின்புலமாக வைத்து “லாக்” என்ற கோலி குண்டு ஆட்டம் ஆடுவோம். எப்படி என்றால், ஒரு “ப” வடிவில் கோடுகள் அந்த தூணில் முடியுமாறு வரைந்து அந்த கோடுகளை சற்றே பள்ளமாக்கி, 5-6 அடி தள்ளி நின்று முதலில் இரு சிறிய குண்டுகளை அந்த “ப” வுக்குள் வீசி, அந்த இரண்டில், எதிராளி சொல்லும் ஒரு குண்டை மூன்றாவது பெரிய குண்டை வீசி அடிக்கவேண்டும். வெறித்தனமாக ஆடுவோம். அந்த குண்டுகள் பெரும்பாலும் இரும்பு குண்டுகள். பொக்கிஷம் மாதிரி பாதுகாப்போம். வீட்டை விட்டு வெளியே இறங்கும்போதே கால்சட்டை பையில் குண்டுகள் இருக்கும். சூதாட்டம்போல் பணம் வைத்து ஆடுவோம். பணம் எக்கச்சக்கமாக கை மாறும். சொல்ல மறக்கக்கூடாது. அப்போது எங்கள் பணம், சிகரெட்டு பெட்டிகளின் அட்டைதான். பனாமா, வில்ஸ், கோல்ட் பிளேக், சார்மினார் என்று விதவிதமான அட்டைகள். அந்த சிறிய கைகளில் அடங்கும் அளவு பணம் புரளும். வீட்டில் பாதுகாப்பாக மீதி பணமும் இருக்கும்.

வீட்டின் எதிர் வரிசையில் இடது புறம் நான்கு வீடு தள்ளி மேஸ்திரி வீடு. அவரின் மகன் எப்போதும் ஏதாவது குறும்பு பண்ணி வம்பை விலைக்கு வாங்கி வருவார். பின்னர் அந்த குறும்புகள் சிறு திருட்டுகளாக மாற, அந்த பிள்ளை வீட்டை விட்டு ஓடிப்போனார் என்று பேச்சு அடிப்பட்டது. சில வருடம் கழித்து ஊருக்கு திரும்பி வரும்போது, போலீஸ் வேலையில் சேர்ந்து சீருடை அணிந்து வந்தார்.

image3 Tamil News Spot
Doha, Qatar

முறுக்குக்காரம்மா வீட்டின் எதிரில் மாரியம்மன் கோவிலின் மதில் சுவருக்கும் வண்ணான் வீட்டிற்கும் இடையில் ஒரு சின்ன தெரு சோடாக்கார் வீட்டில் போய் முடியும். அதற்கு சற்று முன்னே குடிசை வீடு, ஆசாரி வீடு. பெயர்தான் சேட்டு. அக்மார்க் தமிழ்க்காரர். நல்ல வேலைக்காரர். வீட்டில் தொலைக்காட்சி வாங்கியபோது அதற்கு மேஜை செய்துகொடுத்தார். அதற்கு முன் தொலைபேசி வந்தபோது அதற்கும் “தாங்கி” (Stand) செய்து ஒரு மூலையில் பொருத்தி கொடுத்தார். அவருக்கு அம்மா கொடுத்த பெரிய வேலை, ஒரு கட்டில் செய்ததுதான். வீட்டின் எதிரிலேயே சொந்தக்காரர் வீட்டில் கொரட்டில் (Front Yard) போட்டு சேட்டும், சேட்டின் தம்பியும் நாள்கணக்கில் இழைத்து இழைத்து வேலை செய்வார்கள். அந்த இழைப்பது, திருவு கோல் வைத்து துளை போடுவது, உளி வைத்து மரச்சட்டங்களை செதுக்குவது எல்லாம் பார்க்க நன்றாக இருக்கும். இந்த மாதிரி வேலைகள் பெரும்பாலும் கோடை விடுமுறையில்தான் நடக்கும். காலை மாலை அவர்களுக்கு கடைத்தெருவிலிருந்து “தேனீர்” வாங்கி வந்து கொடுப்பேன். 10 நிமிட தூரம், திறந்த சொம்பில் வந்த தேநீர் தண்ணி போல ஆகிவிடும். ஆயினும், ஒரு 10 நிமிடம் ஓய்வெடுத்து சேட்டும், தம்பியும் அந்த தேநீரை ஏதோ அமிர்த பானம் மாதிரி குடிப்பார்கள்.

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் முதல் சாய்ஸ் “பன்னீர் சோடாதான்”. பெப்சி கோக்கெல்லாம் அந்த பன்னீர் சோடா முன் ஒன்றுமில்லை. நாங்கள் சில நாட்கள் அங்கே சென்று சோடா செய்யும் அழகை பார்ப்போம். சோடக்கார் தம்பி சோடா புட்டிகளை கழுவுவார். அண்ணன் ஒரு “சுழலும்” இயந்திரத்தில் புட்டிகளை பொருத்தி குழாய் மூலம் தண்ணீர் நிரப்பி பின்னர் அந்த இயந்திரத்தை கையால் சுற்ற சில நிமிடங்களில் சோடா ரெடி. கோலி பன்னீர் சோடாவின் வாயில் இடது கையின் கட்டை விரலை பொருத்தி வலது கையால் தேவையான அளவு பலத்துடன் ஒரு தட்டுத்தட்டி “விட்ஸ்க்” என்று சத்தம் வர உடைக்க ஒரு தனித்திறமை வேண்டும். விருந்தினர் முன் அப்படி செய்து காட்டி, நானும் ரௌடிதான் மாதிரி பந்தா பண்ணுவோம்.

விடுமுறை நாட்களில் பூம் பூம் மாட்டுக்காரன், மஞ்சள் புடவை கட்டி கோவிலுக்கு செல்வதாக சொல்லி அரிசியோ பணமோ வாங்கிச்செல்லும் தெரியாத மனிதர்கள், எப்போதும் ஒரு சாக்கு பையை தோளில் போட்டு கையில் ஒரு இரும்பு கம்பியுடன் தெருவில் அவ்வப்போது மேலும் கீழும் நடக்கும் அலங்கோலமே உருவான “புள்ளை புடிக்கறவன்”, பங்குனி உத்திரத்தின் பொது நாக்கில் அலகு குத்தி காவடி எடுத்து சாமி வந்து ஆடும் சக்தியம்மா வீட்டு முருகன், கோவிலில் விழாவின்போது பம்பை உடுக்கை அடித்து ஆடும் மணி, சோன்பப்டி வண்டிக்கார், பிஸ்கட் கார், ஐஸ் கார், வெள்ளரி பழம் விற்பவர், நாகப்பழம் விற்பவர் என பலதரப்பட்ட மக்கள் அந்த கிராமத்தை சுவாரஸ்யமாக்குவார்கள். இரவில் தொடையை தட்டி தட்டி வீடு வீடாக சென்று உணவு சேகரித்து தானும் உண்டு தனக்கு அடைக்கலம் தந்த பாட்டிக்கும் உணவளித்த பார்வையற்ற சிங்காரம் என்ற ராப்பிச்சைக்காரன் கதை சோகம். ஒரு காலத்தில் நில புலன்களோடு இருந்து பின் கண்பார்வை மங்க பிறரால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்க தள்ளப்பட்டதாக சொல்லுவார்கள். ஊரின் இரு தெருக்கள் அவருக்கு அத்துப்படி. யார் துணையும் இல்லாமல் தனியாகவே சென்றுவருவார். ஒரு சிறு கோமணம் தவிர வேறு துணியை அவர் உடம்பில் பார்க்க முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, முனைவர் குமாரராஜா பற்றி சொல்லியே ஆகவேண்டும். பக்கத்து ஊரான காரமணிக்குப்பத்தை சேர்ந்தவர். கடலூரில் அரசு கல்லூரியில் கணக்கியல் (Accountancy) முனைவராக இருந்தவர். அப்பாவின் நண்பரின் மகன். தங்கம். இல்லை, சொக்கத்தங்கம். அப்பாவின் அறிவுரைப்படி, விடுமுறை நாட்களில் நான் அவரிடம் படிக்க செல்ல, கணக்கியல் என்பது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்று மிக எளிதாக்கினார். 16 வயது பையனுக்கு கொஞ்சமும் பொறுமை இழக்காமல் அழகாக போதித்தார். எனக்கு மிகவும் பலமான அடித்தளம் அமைத்ததில் குமாரராஜா அய்யாவுக்கு பெரிய பங்கு உண்டு. அவர்தான் தங்கம் என்றால், மனைவி ஒரு படி மேல். என்னை ஒரு பிள்ளை போல பாவித்து சிறுதீனி, தேநீர் என்று உபசரிப்பார். அவர் பிள்ளைகளும் மிக குணவான்கள். எங்களுக்கு நல்ல நண்பர்களாகி ஊரில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் ஆடி அரட்டை அடித்து இளமை கால வாழ்க்கையை பொன்னாக்கியவர்கள்.

இப்படி சுற்றி வித விதமான மனிதர்கள் இருந்தும் அவர்களில் சிலர் பிரச்னைகளில் உழல்வதைப் பார்த்தும், அப்பாவும் அம்மாவும் ஒரு தெளிவான சீரான நீரோடை போல எங்கள் வாழ்க்கையை கை பிடித்து அழைத்து சென்றார்கள். ஆனால் பாருங்க… யாருக்குமே எப்போதுமே வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருப்பது இல்லை. ஒரு சமயம் இல்லை ஒரு சமயம் “யாரோ” கல் எறிந்து அந்த தெளிவை மற்றும் அமைதியை சீர்குலைக்கலாம். அப்படித்தான் என் ஒரு தம்பி திருமணம் ஆன இரண்டே வருடங்களில் துரதிஷ்டவசமாக எங்களை பிரிந்து சென்றது. வாழ்க்கையின் நியதி, எதுவுமே நிரந்தரமில்லை. துன்பம் உட்பட. அந்த “யாரோ” வுக்கு நாம் அழகாக “விதி” இல்லை “ஆண்டவன் செயல்” என்று நியாயம் கற்பித்து சில மாதங்களில் ஓட்டத்தை மீண்டும் சுமூக நிலைக்கு கொண்டு வருவோம். பிறப்பு உண்டெனில் இறப்பு நிச்சயம். எதுவுமே நிரந்தரமில்லை. என்ன, சிலருக்கு மிக நல்ல வாழ்க்கை அமையும் அதே வேளையில் சிலருக்கு கஷ்டங்கள் ஏறக்குறைய “நிரந்தர” விருந்தாளிகள் ஆகிவிடுகின்றன. ஏன், எதற்கு, யாராலே, எப்போது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழ்கண்ட முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.

நம்மில் பலருக்கு உள்ள கெட்ட பழக்கம் நமக்கு பிடித்த விஷயங்களை பேச ஆரம்பித்தால் கேட்பவர் என்ன நினைக்கிறார் என்று கவலை படாமல் பேசிக்கொண்டே போவது. ரொம்ப தப்பில்லையா அது. ஆகவே கணம் வாசகர்களே கொஞ்சம் விலகி இதுவரை நான் சொல்லாத சில நாடுகளைப்பற்றி சுருக்க சொல்கிறேன். அதுவும் எனக்கு பிடித்த விஷயம்தான். ஆகவே, நிறுத்தப்போவதில்லை, இன்னும் இரண்டு பக்கங்களுக்கு.

Malmo, Sweden

image4 Tamil News Spot
Vienna, Austria
image5 Tamil News Spot
Brussels, Belgium
image6 Tamil News Spot
Madrid, Spain
image7 Tamil News Spot
Malmo, Sweden
image8 Tamil News Spot
Oslo, Norway
image9 Tamil News Spot
Lisbon, Portugal
image10 Tamil News Spot
Prague, Czech
image11 Tamil News Spot
Pyramids, Giza, Egypt
image12 Tamil News Spot
Comoros
image13 Tamil News Spot
Damascus, Syria
image14 Tamil News Spot
Geneva Lake, Switzerland
image15 Tamil News Spot
Frankfurt, Germany
image16 Tamil News Spot
Helsinki, Finland
image17 Tamil News Spot
Manila, Philippines
image18 Tamil News Spot
Prague, Czech
image19 Tamil News Spot
Budapest, Hungary
image20 Tamil News Spot
Gdansk, Poland
image21 Tamil News Spot
Helsinki, Finland
image22 Tamil News Spot
Almaty, Kazakhstan
image23 Tamil News Spot
Bangkok, Thailand

எகிப்து: பத்து முறைகளுக்கு மேல். 1 முறை குடும்பத்தோடு. பிரமீடுகள் பிரம்மிப்பூட்டும். நைல் நதியில் உல்லாச படகில் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே உணவு உண்பது நல்ல அனுபவம்.

விமான நிலையம் எப்போதும் ஒரு ஒழுங்கே இல்லாத பரபரப்பான இடம். சற்றே அழுக்கு. போக்குவரத்து ஒழுங்கில், சென்னை தேவலாம். ஊழல் புரையோடிய ஊர். எங்கும் எதற்கும் சிப்பந்திகள் தலை சொரிவது எதிர்பார்க்க வேண்டும். மேலும், நீங்கள் அங்கே சென்றால் உங்கள் பொருள்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். என் உறவினர்கள் வாகனத்தில் உடமைகளை வைத்துவிட்டு அருங்காட்சியகம் சுற்றி வருவதற்குள் பணம் மற்றும் சில நகைகளை இழந்தார்கள்.

சிரியா: அலுவல் சம்பந்தமான பயணங்கள்தான். மிக பழமையான ஊர். 40 வருடங்களாக ஒரே குடும்பம் ஆண்டுவரும் ஜனநாயக (?) நாடு. சிரியன் மக்களிடம் எப்போதுமே “எதிர்காலத்தில் நம்பிக்கையற்ற” மனப்பான்மை உள்ளதாக நண்பர் சொல்லுவார். கடைசியாக 2011 டிசம்பரில் சென்றேன். அப்போதுதான் உள்நாட்டு கலவரம் துவங்கியிருந்தது. பின்னர் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஆசையுமில்லை.

கொமொரோஸ்: சிறிய தீவு. மக்கள் தொகை 9 லட்சம். இந்தியர்கள் ஒரு 250-300 பேர்தான் என்று படித்தேன். ஏழ்மையான நாடு. ஒரு அரசு நிறுவனம் என் நிறுவனத்திற்கு சட்டப்படி திருப்பவேண்டிய பணத்தை திருப்பாமல் இழுத்தடிக்க என் நிறுவனம் என்னை நேரில் அனுப்பி சுமூகமாக பேசி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது. நானும் ஏதோ தைரியத்தில் இந்த தீவுக்கு (ஆப்பிரிக்காவின் ஓரம்) சென்று இறங்கினேன். அடுத்த நாள் அரசு நிறுவனத்தில் சந்திப்பு. நல்லபடியாக முடித்து ஒப்புதல் வாங்கி அந்த பணத்தை வசூலித்தோம். ஆனால் அதற்குள், அவர்கள் சொல்லிய சால்ஜாப்புகள் நம்ம ஊர் ரகத்தைவிட சுவாரஸ்யம்.

ஜெர்மனி: ஹாங்காங் சென்று பிறகு நான் சென்ற இரண்டாவது ஃபாரின் ட்ரிப். அக்டோபர் மாதம், நல்ல குளிர். உலக விஷயங்கள் அறிந்த என் மாமா ஒருவர், ஷங்கர் அந்த குளிருக்கு நல்ல பாதுகாப்பான ஆடைகள் அவசியம். துபாயை விட இங்கே சென்னையில் “பூம்புகார்” எம்போரியத்தில் மிக மலிவாக “எக்ஸ்போர்ட் குவாலிட்டி” கிடைக்கும் என்று என் மனைவி இந்தியா செல்லும்போது வாங்கி அனுப்பினார். ஏறக்குறைய மொத்தமான சாக்குதான். 5-6 கிலோ கனம். கீழ் முட்டி வரை பாதுகாப்பு. எடுத்து சென்று பத்திரமாக திருப்பி எடுத்துவந்தேன். அவசியம் ஏற்படவில்லை. “வால்மார்ட்”இல் வாங்கியிருந்தால் திருப்பியிருக்கலாம்.

ஸ்விட்ஸ்ர்லாண்ட்: வேலை நிமித்தம் சென்றேன். ஜெர்மனி தந்த அனுபவத்தில் பெரிதாக ஒன்றுமே எடுத்து செல்லவில்லை. நண்பர்களுடன் ஜெனீவா ஏரியை சுற்றிப்பார்க்க செல்ல, அங்கிருந்த குளிரிலும் காற்றிலும் உடம்பு நடுங்க நான் ஏறக்குறைய “உறையும் ” நிலைக்கு சென்று, என் நண்பனின் மேலாடையை வாங்கி உயிரோடு விடுதிக்கு வந்து சேர்ந்தேன்.

பிலிபைன்ஸ்: மக்காட்டி (மெட்ரோ மணிலா) என்ற இடத்தில தங்கியிருந்தேன். ஏறக்குறைய இந்தியா போலவே செல்வந்தர்களும் ஏழைகளும் தோளோடு தோள் சேர்ந்து வாழும் ஊர். மும்பையை நினைவூட்டும். இரவுகளில் தனியாக மக்காட்டியில் சென்றால் அதன் அர்த்தமே நீங்கள் துணை தேடி அலைவதாக எண்ணி எண்ணற்றவர்கள் அணுகுவார்கள்.

பின்லாந்தில் கலைமான் (Reindeer) பர்கர் சாப்பிட்டது, ஹங்கேரியில் அறையின் (தனி வீட்டில் தங்கினேன்) கதவை திறக்கத்தெரியாமல் உள்ளேயே பட்டினி கிடக்கப்போகிறேன் என்று பயந்தது, ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் உள்ளூர் நடனங்கள் கண்டு களித்தது, நெதர்லாண்ட்ஸில் டுலிப் (Tulip) தோட்டம் பார்த்தது, பிரான்சில் “ஈபிள் கோபுரம்” ஏறியது, டென்மார்க்கில் ஐஸ் கட்டி ஹோட்டல் சென்றது என எண்ணற்ற நினைவுகள். பல்கேரியா, ருமேனியா, லாட்வியா, லெபனான் மற்றும் துனிசியா நாடுகள் அரசியல் மாற்றங்களால் அல்லாடுவது கண் கூடாக தெரிந்தது.

குவைத் எவ்வளவுதான் பணக்கார நாடாக இருந்தாலும், ஏன் பெரியதாக முன்னேற்றங்கள் இல்லை என்பதும், கத்தார் என்ற சிறிய நாட்டுக்கு ஏன் இவ்வளவு செல்வம் என்பவை பதில் தெரிந்த கேள்விகள். ஆஸ்திரியா, பெல்ஜியம், ஸ்பெயின், ஸ்வீடன், நார்வே, போர்ச்சுகல் மற்றும் செக் நாடுகள் சுற்றிப்பார்க்க ஏதுவான அழகான கலைநயமிக்க நாடுகள். தாய்லாந்து மற்றும் மக்காவு (Macau, SAR of China ) நாடுகள் சுகபோகங்களுக்கு என்றே உள்ள இடங்கள். நண்பர்களுடன் சென்று என்னதான் அப்படி என்று பார்க்க சென்றேன். பார்த்தேன். ரசித்தேன் என்று சொல்லமாட்டேன். இது உலகின் மற்றுமொரு பக்கம், அவ்வளவே.

image25 Tamil News Spot
Macau, SAR, China
image26 Tamil News Spot
Red Square, Moscow
image27 Tamil News Spot
Keukenhof, Near Amsterdam, The Netherlands
image28 Tamil News Spot
Mariamman Koil Street, Varakalpet
image29 Tamil News Spot
Keukenhof, Near Amsterdam, The Netherlands
image30 Tamil News Spot
Vella Gate Bus Stop, Varakalpet
image31 Tamil News Spot
Denmark
image32 Tamil News Spot
Arc De Triomphe, Paris
image33 Tamil News Spot
Sofia, Bulgaria
image34 Tamil News Spot
Bucharest, Romania
image35 Tamil News Spot
Riga, Latvia
image36 Tamil News Spot
Beirut, Lebanon

நான் எழுத ஆரம்பித்தபோது சற்று தயங்கினேன். vikatan.com ஏறக்குறைய ஒரு சமூக ஊடகம். சமூக ஊடகத்தில் ஆக்கபூர்வமான விஷயங்கள் ஒரு பக்கம். அதே சமயத்தில் காரணமேயில்லாமல் முன் பின் தெரியாதோரை பழிப்பது, இழி சொல் பேசுவது போன்ற விஷயங்களும் அதிகம். நல்ல வேளை, எனக்கு அந்தமாதிரி ஒன்றும் பெரியதாக நடக்கவில்லை.

இப்போது சொல்லுங்கள், நான் இந்த அத்தியாத்தோடு முடிப்பது சரிதானே. இல்லையென்றால் இன்னும் 20 வாரம் உங்களை மீண்டும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வரை, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த இடைப்பட்ட நேரத்தில் உங்கள் நாட்கள் நல்ல நாட்களாக அமையட்டும். உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும். என்னிடம் தொடர்புகொள்ள விரும்பினால் [email protected] மற்றும் WhatsApp-ல் (+971506558126) முடியும். நான் ட்ராவல் ஏஜென்ட் இல்லை என்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், என் அனுபவத்தில் நான் ஏதாவது தகவல் கொடுக்கமுடியும் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக செய்ய முயற்சிப்பேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்.

சமீபத்தில் ஒரு ஜோக் படித்தேன். சிறு குழந்தை அப்பா அம்மாவை பார்த்து “சொல்லாம கொல்லாம பெத்து போடவேண்டியது அப்புறம் டாக்டருக்கு படி என்ஜினீயருக்கு படி என்று உயிர எடுக்கவேண்டியது” என்று குழந்தை சொல்வதுமாதிரியான மாதிரியான ஜோக். மேலோட்டமாக பார்த்தால் ஜோக். உண்மையில் நாம் இந்த உலகத்துக்கு வந்தது நம்முடைய முடிவு கிடையாது. வந்த பிறகு நாம் வேண்டாம் என்றால் பழைய நிலைக்கு செல்வது என்று நடக்காத காரியம். இது இயற்கையின் / வாழ்க்கையின் நியதி.

நியதி இப்படி இருக்கும்போது, நாம் செய்யவேண்டியது, பிறந்தபின் எப்படி வாழ்க்கையை செம்மையாக்குவது என்பதுதான். இல்லாததை பற்றி புலம்பிக்கொண்டு மற்றவர்களை குறை சொல்லி, இருப்பதை அனுபவிக்க மறக்கலாம். மாறாக இருப்பதற்கு நன்றி சொல்லி இல்லாததை அடைய என்ன செய்யமுடியுமோ அதை செய்ய முயற்சிக்கலாம். முடிவெடுப்பது உங்கள் கையில்தான்.

சில விதிவிலக்குகள் தவிர்த்து, பொதுவாகவே வாழ்க்கை மிக அழகானது, நீங்கள் அப்படி நினைத்தால். வரும் 2022 நல்லபடியாக அமையவும் உங்கள் கனவுகள் மெய்ப்படவும் மற்றும் வாழ்க்கை நல்ல உடல் மற்றும் மன நலத்தோடு மகிழ்ச்சிகரமாக அமையவும் என் பிரார்த்தனைகள்.

ஒரு குறளோடு விடைபெறுகிறேன்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

அதாகப்பட்டது நல்ல தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றும் மக்கள், இன்னல் வரும்போதும் இழிசெயலில் ஈடுபடமாட்டார்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.