Share on Social Media


லக்னோ: ‘நாட்டில் பாஜ தலைவர்களும், அவர்களின் கோடீஸ்வர நண்பர்களும் மட்டுமே பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி கலவரத்தில் கொல்லப்பட்ட 4 விவசாயிகளுக்கு நீதி கேட்கும், ‘கிசான் நியாய் பேரணி’யை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசியில் நேற்று நடத்தினார். அங்கு நடந்த கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: இந்த தேசம் பிரதமரின் சொத்தும் அல்ல, அவர்களின் அமைச்சர்களின் சொத்தும் அல்ல. இந்த தேசம் உங்களுடையது. விவசாயிகள் மக்களுக்கு உணவுகளை வழங்குகிறார்கள், விவசாயிகளின் மகன்கள் எல்லையைக் காக்கிறார்கள். ஆனால், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில், பல்வேறு நிகழ்ச்சிக்காக லக்னோ வரை வந்த பிரதமர் மோடி, ஏன் லக்கிம்பூருக்கு வரவில்லை? பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற அவருக்கு நேரமில்லையா? மக்களிடம் நான் பேசும் போது, அவர்கள் வேலை இல்லை, வருமானம் இல்லை என புலம்புகிறார்கள். தற்போது நாட்டில் விவசாயிகள், தலித்கள், பெண்கள் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர். எந்த சாதி, மதத்தை சேர்ந்த மக்களும் பாதுகாப்பாக இல்லை. பிரதமர் மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், அவரது கட்சியினரும், அதோடு அவரது கோடீஸ்வர நண்பர்களும் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். இதை புரிந்து கொள்ளுங்கள். இந்த தேசம் சேதமடைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* நெற்றியில் சந்தன பட்டை ‘ஜெய் மாதா தி’ கோஷம்
உபி.யில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. சிதாபூரில் கைதாகி விடுவிக்கப்பட்ட பிறகு, பிரியங்கா தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். லக்னோவில் பல்வேறு கோயில்களில் வழிபட்ட பிரியங்கா வாரணாசியில் நேற்று காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய சந்தன பட்டை, குங்கும பொட்டுடன், வாரணாசி கூட்டத்தில் பங்கேற்ற அவர், ‘ஜெய் மாதா தி’ என துர்க்கையை போற்றும் சமஸ்கிருத மந்திரத்தை முழங்கி பேச்சை தொடங்கினார். நவராத்திரி விரதம் இருப்பதாக கூறிய பிரியங்கா, பேச்சை முடிக்கும் போதும் ‘ஜெய் மாதா தி’ என முழங்கினார். மேலும், கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் அதை கூறும்படி தெரிவித்தார். இந்துக்களின் ஓட்டுக்களை குறிவைத்து பிரசாரம் செய்யும் உபி பாஜ முதல்வர் யோகிக்கு சவால் விடும் வகையில் பிரியங்கா அதிரடியாக களமிறங்கி உள்ளார். பிரியங்கா மட்டுமின்றி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் இந்துக்களின் ஓட்டை கவரும் புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *