Share on Social Media


வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததோடு மக்களவை, மாநிலங்களவையில் இது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட மசோதா இரண்டு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்தும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவுவிடம் சில கேள்விகளை முன் வைத்தேன்.

“வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது குறித்து உங்கள் பார்வை என்ன?”

“மக்களுக்கான ஆட்சிதானே எல்லாம். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கத்தானே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டமன்ற, நாடாளுமன்றங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சட்டம் இயற்றத்தான். காலப்போக்கில் எல்லாப் பிரச்னைகளையும் பேசுவதற்கான இடமாக மாறிவிட்டது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை மக்கள் நலன் சார்ந்து கொண்டு வந்தோம் என்கிறது. ஆனால், அந்தக் கருத்தை மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு விருப்பமில்லாததைச் சட்டமாக்க முடியாது.”

“இப்போதும் விவசாயம் பார்த்து வருகிறீர்களா?”

“எனக்கு அது ஒன்றுதான் தெரியும். விவசாயம் மட்டும்தான் எனக்குத் தெரியும். விவசாயம்தான் எப்போதும் செய்வேன். அது தவிர வேறு எந்தத் தொழிலும் எனக்குக் கிடையாது.”

சபாநாயகர் அப்பாவு

Also Read: “மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் எந்த அரசாலும் திணிக்க முடியாது!”

“முதல்வரிடம் ஒரு லட்சம் பனை விதைகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அதன் நோக்கம் என்ன?”

“பனங்காட்டுக்குள்தான் நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருகிறேன். அந்தப் பனையிலிருந்து கிடைக்கும் பதநீர், கரும்புக் கட்டி, நுங்கு, கிழங்கு என எல்லாவற்றையும் நான் ருசித்துச் சாப்பிட்டிருக்கிறேன். அந்த ருசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதோடு பனை விதையை அரை அடி தோண்டி நிலத்தில் வைத்துவிட்டால் போதும் அதை வளர்க்க வேறு எந்த வேலையும் நீங்கள் செய்யவேண்டியதில்லை. ஆடு, மாடு, மனிதன் கடித்தால் கூட அதற்கு எதுவும் ஆகாது. மற்ற மரங்களைப் போல அருகில் இருக்கும் கட்டடங்களைப் பனை மரங்கள் சிதைக்காது. பனை இந்தளவு பயன் தரக்கூடியது என்பதால்தான் அதை வெட்ட வேண்டுமானால் அரசிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அதைச் செய்தேன்.”

“பருவ காலத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள். ஒரு விவசாயியாக இதற்கு என்ன தீர்வு வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்க உதவி செய்ய வேண்டும். பயிர்கள் அதிகம் விளையும் பகுதிகளில் குடோன்களை அதிக எண்ணிக்கையில் அமைக்கலாம். தற்போது இருக்கும் அரசு அதைச் செய்கிறது என்று நான் நினைக்கிறேன்.”

FEUZ1TbVcAYz0mK Tamil News Spot
அப்பாவு – ஓம் பிர்லா

Also Read: சபாநாயகர் மாநாட்டில் பாய்ச்சல் காட்டிய அப்பாவு… பின்னணி என்ன?!

“எந்த அரசு செய்தாலும் அதிலிருக்கும் போதாமைகளுக்காக விவசாயிகள் குரல் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இப்போதும் அது தொடர்கிறதே?”

“ஒவ்வொரு முறையும் இது குறித்து அந்தந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதி சட்டப்பேரவையில் குரல் கொடுக்கத்தான் செய்கிறார்கள். அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு அரசும் அதற்கான தீர்வுகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். கஷ்டங்கள் வருவது இயற்கைதான். அதை அரசு காது கொடுத்துக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால்தான் அந்த அரசுமீது நாம் குற்றம் சுமத்த முடியும். ஆனால், இப்போதிருக்கும் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத்தான் எனக்குத் தெரிகிறது. விவசாயிகள், எதிர்க்கட்சிகள் அதிலிருக்கும் போதாமைகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லையே. அதற்குதானே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.”

WhatsApp Image 2021 08 02 at 17 10 14 Tamil News Spot
சபாநாயகர் அப்பாவு

“இப்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் நீங்கள்தான் மூத்தவர். உங்கள் அரசியல் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அரசியல் பயணத்தில் கரடுமுரடு எல்லாம் வரத்தான் செய்யும். மாலையும் கிடைக்கும் சாணியும் எறிவார்கள். ஆனால், என் அரசியல் வாழ்க்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் அதிகமாகப் பாடம் படித்ததாக நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இவற்றையெல்லாம் பேச வேண்டும் எனத் தோன்றிக்கொண்டே இருக்கும். என்னுடைய வழக்கு விசாரணை பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தவிர்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். அனைத்து வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: `தனித்துப் போட்டியிட பாஜக தயாரா?!’ – என்ன சொல்கிறார் கரு.நாகராஜன்?

“சபாநாயகர் பதவியில் இதுவரை உங்களது செயல்பாடு உங்களுக்கு நிறைவா இருக்கின்றதா?”

“எந்தப் பணியைக் கொடுத்தாலும் நாம் சிறப்பாகச் செயல்பட்டிருப்போம். அதுல நிறை குறை நிச்சயம் இருக்கலாம். எல்லோருமே மனிதர்கள்தானே. எனக்குக் கொடுத்த பொறுப்பை நான் சரியாகவே செய்து வருகிறேன். இந்தப் பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கேற்ப நான் இதுவரை பணியாற்றி வருகிறேன்.”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *