மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், காட்டு நாயக்கர், இருளர், பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, வழிபாட்டு முறை போன்ற பழக்க வழக்கங்களை பாரம்பர்யமாகப் பின்பற்றி வருகின்றனர்.

குளிர் நிறைந்த நீலகிரி மலை உச்சிகளில் வாழ்விடத்தைக் கொண்டுள்ள ஆயர் சமூகமான தோடர் பழங்குடிகள் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ‘மொற்பொற்த்’ எனும் புத்தாண்டை பெரிய விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். தோடர் இன மக்களின் தாய் மந்தாகக் கருதப்படும் முத்தநாடு மந்தில் தோடர் இன ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி மொற்பொற்த் விழாவைக் கொண்டாடினர்.
தோடர் இன மக்களின் பாரம்பர்ய கோயில்களான மூன்போ மற்றும் ஒரியள்வோ கோயில்களில் வழிபாடு நடத்தினர். பாரம்பர்ய உடையணிந்து வந்த தோடர் இன ஆண்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோத்து ஆடிபாடி மகிழ்ந்து இயற்கையை வணங்கி புத்தாண்டை வரவேற்றனர்.

இந்த விழா குறித்து தெரிவித்த தோடர் பழங்குடிகள், “மொற்பொற்த் என்பது புத்தாண்டை வரவேற்கும் திருவிழா. தோடர் வளர்ப்பு எருமைகள் செழிக்கவும், வருகின்ற ஆண்டில் அனைத்து வளமும் அனைவருக்கும் கிடைக்கவும் இயற்கையை வழிபடும் ஒரு விழாதான் இது. இந்த ஆண்டின் முதல் விழா என்பதால் ஒட்டுமொத்த தோடர் பழங்குடியின ஆண்களும் பங்கேற்கின்றனர்” என்றனர்.