Share on Social Media


இன்று நெதர்லாந்து மட்டுமல்ல; பல சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம் நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு. தி ஹேக் என்ற நகரத்திலுள்ள நீதிமன்றத்தில் ராயல் டச் ஷெல் என்ற எண்ணெய் நிறுவனம், அதிகளவிலான கரிம வெளியீட்டிற்குப் பொறுப்பாளர் என்று அந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் சார்பில் இதுபோல் அதிக கரிம வெளியீட்டை நிகழ்த்துகின்ற, காலநிலை மாற்றத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்ற நிறுவனங்களுக்கு எதிராகப் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

In landmark legal battle of climate change activists in the Netherlands who went to court seeking an order for energy giant Shell to rein in its carbon emissions.

2017-ம் ஆண்டில் மட்டுமே உலக அளவில் காலநிலை தொடர்பாக 24 நாடுகளில் 884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரையிலான கணக்குப்படி, 38 நாடுகளில் 1,550 காலநிலை மாற்றம் தொடர்பான வழக்குகள் போடப்பட்டுள்ளன. இத்தனை வழக்குகள் காலநிலை மாற்றம் தொடர்பான காரணிகளை அடிப்படையாக வைத்துப் போடப்பட்டிருந்தாலும், இதுவரை அவற்றில் எதிலுமே காலநிலை மாற்றத்துக்கு யாரும் பொறுப்பாளராக்கப்படவில்லை. ஆனால், வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தை காலநிலை மாற்றம் விரைவுபடுவதற்குப் பொறுப்பாளராக்கி நெதர்லாந்தில், தி ஹேக் என்ற நகரத்தில் அமைந்துள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து, சூழலியல் ஆர்வலர்கள் வெற்றியடைந்துள்ள முதல் வழக்கு என்றும் கூட இது கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லரிஸ்ஸா ஆல்வின், ஷெல் எண்ணெய் நிறுவனத்துடைய 2019-ம் ஆண்டு கரிம வெளியீட்டு அளவில் 45 சதவிகிதம் கரிம வெளியீட்டை 2030-ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், ஷெல் நிறுவனத்தின் கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களும் முயற்சிகளும் வலுவானதாகவோ, போதுமானதாகவோ இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2021 05 29 at 12 24 39 PM Tamil News Spot
Presiding judge Larissa Alwin, center, reads the verdict as judges Irene Kroft, left, and M.L. Harmsen, right, attend, in the court case of Milieudefensie, the Dutch arm of the Friends of the Earth environmental organization, against Shell in The Hague, Netherlands.

இதுமட்டுமன்றி, ஷெல் நிறுவனத்திடமிருந்து எண்ணெய் வாங்கிய வாடிக்கையாளர்கள் முதல் அவர்கள் யாருக்கெல்லாம் அதை சப்ளை செய்தார்களோ அவர்கள் வரை, அனைவரின் மூலமும் நிகழ்ந்துள்ள கரிம வெளியீட்டுக்கு ராயல் டச் ஷெல் நிறுவனம்தான் பொறுப்பு என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவற்றோடு சேர்த்து, மனித உரிமைக்கான ஐரோப்பிய மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் படி, `உயிர் வாழ்வதற்கான உரிமை (right to life)’ மீது அச்சுறுத்தலை உண்டாக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் இருந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்தப் பூமியின் பாதுகாப்பில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் பங்கு வகிக்கக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நம் குழந்தைகளுடைய எதிர்காலம் உயிர்வாழத் தக்கதாக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் இந்தத் தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. ஷெல் நிறுவனம் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது, அதன் அழிவு நடவடிக்கைகளை நிறுத்தியே ஆக வேண்டும் என்பதை நீதிபதியின் தீர்ப்பு தெளிவாக உணர்த்துகிறது” என்று இந்தத் தீர்ப்பு குறித்துக் கூறியுள்ளார், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் நெதர்லாந்து (Friends of Earth Netherlands) அமைப்பின் இயக்குநர் டொனால்ட் போல்ஸ்.

WhatsApp Image 2021 05 29 at 12 23 28 PM Tamil News Spot
Friends of Earth director Donald Pols, center with hat, and lawyer Roger Cox, right, talk to the press after the verdict in the court case of Milieudefensie, the Dutch arm of the Friends of the Earth environmental organization, against Shell in The Hague.

ராயல் டச் ஷெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளில் ஒன்றைப் பதிவு செய்த ஆக்ஷன் எய்ட் நெதர்லாந்து (ActionAid Netherlands), என்ற அமைப்பின் செயல் இயக்குநரான மாரிட் மைஜ், “இந்தத் தீர்ப்பு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு மிகவும் கடுமையானதொரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அவர்கள் எளிய மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது உண்டாக்கும் சேதாரங்களைத் தவிர்க்க வேண்டும், அவர்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது நடந்தே தீரும் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

ராயல் டச் ஷெல் நிறுவனமும் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “காலநிலை மாற்றத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். அதனால்தான், நாங்கள் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை நோக்கிய முயற்சிகளை விரைவுபடுத்தினோம். 2050-ம் ஆண்டுக்குள் நாங்கள் அந்த இலக்கை அடைந்த நிறுவனமாக இருப்போம்.

மேலும், குறைந்த கரிம ஆற்றலைப் பயன்படுத்தக்கூடிய மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன், இயர்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றின் மீது நாங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளோம். இவற்றுக்கான தேவையை அதிகரிப்பதன் மூலம், நாங்கள் கரிம வெளியீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அப்படியிருந்தும் இன்று நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. இருந்தாலும், இந்த முயற்சிகளை நாங்கள் மேன்மேலும் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று கூறியுள்ளது.

tingey injury law firm nSpj Z12lX0 unsplash Tamil News Spot
Law (Representational Image)

இதே ஷெல் நிறுவனத்தின் மீது 2008-ம் ஆண்டில் நைஜீரியா விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தைச் சிதைப்பதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. நைஜர் டெல்டாவில் ராயல் டச் நிறுவனம் அமைத்திருந்த எண்ணெய் குழாய்கள் பராமரிப்பின்றி இருந்ததால், சேதமடைந்து அப்பகுதி விவசாயிகளுடைய நிலங்களைப் பாழாக்கியது. 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை இது நைஜர் டெல்டாவில் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்தது. இதைத் தொடர்து நெதர்லாந்திலும் இதுகுறித்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் ஷெல் நிறுவனத்தின் வாதங்களும் அவர்கள் முன்வைத்த காரணங்களும் போதுமானதாக இல்லையென்று குறிப்பிட்டு கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் ஷெல் நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் குறித்த இந்த வழக்கு மீதான முதல் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. அப்போது ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் நெதர்லாந்து அமைப்போடு சேர்ந்து மேலும் சில சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த இந்த வழக்கில், பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் ராயல் டச் ஷெல் நிறுவனம் தோல்வியடைந்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்கள். இது அந்த நிறுவனம் செய்துள்ள சட்டவிரோத செயல் மட்டுமன்றி மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் நெதர்லாந்து அமைப்பு உட்பட 17,380 அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இதுபோன்றதொரு முயற்சி காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடந்துள்ளதும் இதுவே முதல்முறை.

WhatsApp Image 2021 05 29 at 12 23 58 PM Tamil News Spot
Pictures of plaintiffs fly outside the court where Milieudefensie, the Dutch arm of the Friends of the Earth environmental organization, took Shell to court, in The Hague, Netherlands.

இத்தகைய வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, உலக அளவில் தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில், புதைபடிம எரிவாயு துறையில் எந்த நிறுவனத்தின் மீது வேண்டுமானாலும் இப்படியொரு வழக்கு பாயலாம், அதில் அவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.

ஸ்வீடனில் அமைந்துள்ள ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம், இந்தத் தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதைபடிம எரிவாயு உற்பத்தியை ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக்கொண்டால், உலகளவில் நம்மால் காலநிலை இலக்கை அடைவதற்குத் தேவையான அளவுக்கு கரிம வெளியீட்டைக் குறைக்கமுடியும். இந்தத் தீர்ப்பு அதற்கு வழிவகுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு உலக அளவில் காலநிலை குறித்து கவலைப்படுகின்ற பெருவாரியான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு பலருக்கும் காலநிலைக்கு எதிரான போராட்டத்தில் புதியதொரு பாதையைக் காட்டியுள்ளது என்றும் கூறலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *