Share on Social Media


கடலுார்: கடலுார் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக கனமழைபெய்து வருவதால் புன்செய் நிலத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் தாமதமாகி வருகிறது.

இதனால் காய்கறி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் வட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். இந்த மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவை விட கூடுதல் மழை பெய்தது.கடந்த நவம்பர் 25ம் தேதி ‘நிவர்’ புயல் கரையைக் கடந்த போதும், டிசம்பர் 1ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ‘புரெவி’ புயலாக மாறியும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதில், டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கனமழை பெய்தது.

அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பெய்தது. ஜனவரி மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 27.9 மி.மீ., ஆனால் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி மாதம் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.இதனால் இயல்பை விட 263.56 மி.மீ., உயர்ந்துள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழையளவாகும்.இந்த ஆண்டு இயல்பான மழையளவான 1,206.7 மி.மீ., மழையில் 1,443.26 மி.மீ., கூடுதலாக பெய்துள்ளது.நேற்று முன்தினம் கொத்தவாச்சேரி, பரங்கிப்பேட்டையில் ஒரே இரவில் 284 மி.மீ., மழை வெளுத்து வாங்கியது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.நன்கு விளைந்த நெல் முளைத்து வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘நிவர்’, ‘புரெவி’ புயல்களில் இருந்து ஓரளவு தப்பி வந்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.அதேப்போன்று, உள்ளூரில் விளையும் காய்கறிகளான கத்தரி, வெண்டை, சுரக்காய், பாகற்காய், புடலை, மிளகாய் உள்ளிட்டவைகள் புஞ்சை நிலத்தில் பயிர் செய்வது வழக்கம்.அதாவது டிசம்பர் மாதமே காய்கறிகளின் நடவு பணியை துவக்கி விடுவர். அதற்கு ஏற்றாற்போல் நர்சரி அமைத்து நாற்று விட்ட பகுதிகள் முழுதும் முற்றி நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையால் உழுத நிலத்தில் மண் சேறாக மாறியுள்ளது. இதனால் காய்கறி, நிலக்கடலை, பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்கள் போன்ற எந்த பயிரும் செய்ய முடியாமல் விவசாயிகள் நொந்து போயுள்ளனர்.

இந்தமாத இறுதியில் சாகுபடி தொடங்கினாலும் அறுவடை செய்வதற்குள் கோடை காலம் வந்து விடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனால் அதிகளவு மழை இல்லாத பகுதிகளான ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வரத்து உள்ளதால் லாரி வாடகை தொகை அதிகமாகி காய்கறிகள் விலையும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதே நிலை நீடித்தால் காய்கறிகள் விலை இன்னும் உயரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *