Share on Social Media


உலகமே தினந்தினம் கொரோனா ஏற்படுத்தி வரும் கோரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடைமுறைகளையும், கடுமையான விதிகளையும் பின்பற்றி வரும் சூழலில் ‘எங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!’ என்று தில்லாக கூறிக்கொண்டு வழக்கம் போல் உலக நாடுகளின் கவனத்தை தனது புதுப்புது சட்டங்களின் மூலம் வடகொரியாவின் பக்கம் ஈர்த்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

என்ன நடக்கிறது அங்கே?!

சில தினங்களுக்கு முன்பு, வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் தான் லீ என்ற இளைஞருக்கு சுமார் 500 வடகொரியர்கள் மத்தியில் மரண தண்டனை மிகக் கொடூரமாக நிறைவேற்றப்பட்டது. காரணம், அவர் வெளிநாட்டு திரைப்படங்களின் சி.டி-க்களை வடகொரியாவில் கள்ளச்சந்தையில் விற்றார் என்பதே!. ‘இதற்கு எதற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்?’ என்று தோன்றினால் அந்நாட்டின் சட்ட விதிகள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது தான் காரணம்.

கிம் ஜாங் உன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது சர்வாதிகாரப்போக்கால் உலக நாடுகள் அனைத்திலும் அறியப்படுபவர். அவ்வப்போது சைலன்ட் மோடில் போவது பிறகு மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பது என சர்வதேச ஊடகங்களின் எவர்க்ரீன் ட்ரெண்டிங் மெட்டீரியல் இவர் தான். வடகொரியாவை பொறுத்தவரையில் அங்கு இணையதளம் கிடையாது, சமூக வலைதளங்கள் கிடையாது, தொலைக்காட்சி சேனல்களும் மிகவும் கட்டுபாடுகளுடன் கூடிய குறைவான சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது.நாட்டின் ஒவ்வொரு நகர்வுகளும் அதிபர் கிம் ஜாங் உன்னின் மிகக் கடுமையான கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. மக்கள் எந்த விதமான முற்போக்கு எண்ணங்களாளும், அயல்நாட்டு சிந்தனைகளாலும் ஆட்கொண்டுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளார். மீறி அதில் ஈடுபடுவோருக்கே இந்த கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

denim trends today main 190806 15c7546dcf648838b608d0e852abf0e7 Tamil News Spot
ஜீன்ஸ் – image

சமீபத்தில் இறுக்கமான ஜீன்ஸ்களையும், அயல்நாட்டு டீ- ஷர்ட்களையும் அணியக்கூடாது என செக் வைத்தார். அதேபோல், வெளிநாட்டு கலாசாரத்தை ஒட்டிய அலங்காரம், ஹேர்ஸ்டைல், மூக்குத்தி அணிவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப்-சீரிஸ்களைப் பார்க்க தடை விதித்துள்ளார். மீறி, பார்ப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சிறைவாசம் மற்றும் அதனை அதிகளவில் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவை எல்லாவற்றையும் கண்காணிக்க தனிக்குழு ஒன்றையும் அமைத்துள்ளார்

வட கொரியாவும் வெளிநாட்டு திரைப்படங்களும்

வடகொரியா மக்கள் உலக நடவடிக்கைகளிலிருந்து தனித்தே வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமானது மிகவும் குறைவே. சினிமா போன்ற எவற்றுக்கும் அங்கு அனுமதியில்லை. இதனால், சீனா மற்றும் தென் கொரியாவின் சினிமா, வெப்- சீரிஸ்களின் சிடிக்களை சீன எல்லையின் வழியாக மறைமுகமாக கொண்டுவந்து அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

37866 thumb Tamil News Spot

சில சமயங்களில், இதை பாதுகாப்பாக எடுத்துவர ரகசியமான பாஸ்வேர்டுகள் மற்றும் குறிப்பிட்ட சாதனங்களில் மட்டும் இயங்கும் வகையில் இதை கொண்டு வந்து மக்கள் ரகசியமாக சினிமாவைப் பார்த்துள்ளனர். இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது அதிபர் கிம்மின் புதிய சட்டங்கள். இச்சட்டங்களின் அடிப்படையில்தான் தான் லீக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான விதை கடந்த 2002ம் ஆண்டே போடப்பட்டுவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2002ம் ஆண்டு பியோங்யாங் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு படங்களின் சி.டிக்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அதை பிடிப்பதற்கு நாட்டின் அனைத்து இராணுவத்தினரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன் முடிவில் சுமார் 20,000 சி.டிக்கள் பிடிபட்டது

இச்சட்டங்கள் தொடர்பாக, அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு கிம் ஜாங் உன் எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு நிறுவனத்தில் ஊழியர் தவறு செய்தால், அந்நிறுவனத்தின் உரிமையாளரும் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோல், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் தவறு செய்துவிட்டால் பெற்றோர்களுக்கும் தண்டனை உண்டு” போன்றவற்றை அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வெளிநாட்டு கலாசாரங்கள் யாவும் நஞ்சை விதைக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணோட்டத்திலேயே இந்த புதிய சட்டங்களானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

death sentence Tamil News Spot
தூக்கு -Representational Image

வெளிநாட்டு கலாசாரங்கள் நாட்டிற்குள் வேரூன்றிவிட்டால் இளைஞர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகிவிடும் என்பதால் தனக்கும், தனது அரசாங்கத்திற்கும் எந்தவித எதிர்ப்பு குரலும் எழுந்திடாத வண்ணம் மிகவும் பாதுகாப்பாக ஒவ்வொரு நகர்வுகளையும் எடுத்து வருகிறார் அதிபர் கிம் ஜாங் உன்.

ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக வடகொரியா, சீனாவுடனான தனது எல்லையை முழுவதுமாக மூடியுள்ளது. சீனாவிலிருந்து வந்துகொண்டிருந்த அத்தியாவசிய பொருட்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் பெரும்பாலான நிதி அணு ஆயுத ஆராய்ச்சிக்கே செலவிடப்படுவதால் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த இரண்டாண்டுகளில் வடகொரியர்கள் அதிகப்படியான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.ஏற்கனவே, உலக நடவடிக்கைகளிலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ்ந்து வரும் வடகொரியர்களின் வாழ்வை இவை மேலும் தனிமைப்படுத்தும். இது கிம் ஜாங் உன் நிகழ்த்தி வரும் சர்வாதிகார்ப்போக்கின் உச்சம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *