புதுடெல்லி: வங்கி கடன் தள்ளுபடியில் பாரபட்சம் ஏன்? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியதாவது: கடந்த 200 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டது மூன்று முறைதான் அதில் மூன்றாவது முறை கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளம். எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையினால் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மறுசீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கோரியிருந்த ரூ.3554.88 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய ரூ.4943 கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்வேண்டும். எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்திற்கு வெறும் 1153 கோடி ரூபாய் என்பது மிகவும் குறைவு. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு ஏலத்தில் வென்றுள்ளது. இதில் டாடா ரூ.2,700 கோடி தான் பணமாக செலுத்துகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் டாடா நிறுவனத்தின் பெயரும் தென்படுகிறது, எனவே தான் டாடா நிறுவனம் அந்த 2700 கோடி ரூபாய் பணமும் அரசிடமே பெற்று அரசுக்கே திருப்பி வழங்குகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
இன்று சமையல் எரிவாயுவின் விலை ஏற்றத்தால் தாய்மார்கள் மட்டுமல்ல குடும்பமே கண்ணீர் வடிக்கின்றனர். வங்கிகளில் மக்களின் பணமானது வங்கி திவால் சட்டத்தின் மூலம் செட்டில்மென்ட் என்ற பெயரில் பெருமளவு மோசடி செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு கடன் விவகாரத்தில் 50% தள்ளுபடி, ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும் அலோக் நிறுவனத்திற்கு 83% தள்ளுபடி என பல நிறுவனங்களுக்கு வங்கிகள் பெருமளவு சலுகைகள் வழங்குகின்றன. அப்படி திவால் நிலைக்கு அறிவிக்கப்பட்ட பல நிறுவனங்களை அதன் உரிமையாளரே வேறு பெயரில் மீண்டும் திரும்ப பெறுகின்றனர்.
இந்த வரிசையில் சிவா நிறுவனம் கிட்டத்தட்ட கடன் நிலுவையில் 95% தள்ளுபடி பெற்றுள்ளது. இந்நிகழ்வில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயமே தலையிட்டு எப்படி இவ்வளவு சலுகைகள் வழங்க உள்ளீர்கள் என வினவியுள்ளது. இச்சூழ்நிலையில் சிவா நிறுவனத்தை மீண்டும் சிவாவின் தந்தையே ஏலத்தில் எடுத்துள்ளார். இது குறித்து ஒன்றிய அமைச்சகம் விசாரணை மேற்கொள்ளுமா? விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பெறும் கடன்களுக்கு 10 சதவீதம் கூட தள்ளுபடி கிடைப்பதில்லை, மாறாக அவர்களின் புகைப்படங்களை பொதுவெளியில் ஒட்டச் செய்து அவர்கள் அவமானப்படுத்தப் படுகிறார்கள்.
ஆனால் பெரும் நிறுவனங்களுக்கு மட்டும் வங்கிகள் சலுகைகளை வாரி வழங்குகின்றனர். தள்ளுபடிக்கு பயன்படுத்தப்படுவது அத்தனையும் மக்களின் பணம். இது மிகப் பெரிய மோசடி ஆகும். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார். முன்னதாக தயாநிதி மாறன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்துள்ள பதிலில், பொதிகை தொலைக்காட்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நவீனப்படுத்துதல் என்பது தொடர்ச்சியான செயல்பாடுகள். இது அந்தந்த நேரத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றார்.