Share on Social Media


லிங்குசாமி சினிமா பயணத்தில் 20 ஆண்டுகள்

27 மே, 2021 – 12:55 IST

எழுத்தின் அளவு:


ராமநாதபுரம் லட்சுமிபுரத்தில் பிறந்த நரேன் லிங்குசாமி பத்திரிகையாளராகி அதன்பிறகு இயக்குனர் ஆனவர். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அவர் பாணியிலேயே ஆனந்தம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையாக இருந்த மம்முட்டியை நடிக்க வைத்தார்.

தமிழ் சினிமாவில் மனித உறவுகளை பிரதான பேசுபொருளாக வைத்து எடுக்கப்பட்ட எண்ணற்ற திரைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளன. காலத்தால் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. சகோதரர்களுக்கிடையிலான உறவுகளையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் முதன்மைப்படுத்தி ஒரு அழகான குடும்பக் கதையாகப் பரிணமித்து அனைத்து வயது ரசிகர்களுக்கும் பிடித்தமான விஷயங்களை உள்ளடக்கிய திரைக்கதையை அமைத்து மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

2001 மே 25ம் தேதி வெளியான இந்த படத்தை தமிழ்நாட்டின் குடும்பங்கள் கொண்டாடியது. இன்றைக்கு எந்த குடும்ப படத்தை எடுத்தாலும், எந்த குடும்ப சீரியலை எடுத்தாலும் ஆனந்தத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. ஆனந்தத்தை அப்படியே காப்பி அடித்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்கூட வெற்றி பெற்றிருப்பது ஆனந்தத்தின் பார்முலாவால்தான்.

தனது அடுத்த படமான ரன்னில் அதுவரை சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி அதிலும் வெற்றி பெற்றார். 3வது படமான ஜீ அவருக்கு சற்று சறுக்கலாக அமைந்தது, நீண்ட கால தயாரிப்பு, கதையில் அஜீத்தின் தலையீடு, தயாரிப்பாளரின் பொருளாதார சிக்கல் என அனைத்தையும் சந்தித்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான ஜீ தோல்வி அடைந்தது.

ஜீ தோல்விக்கு நான் காரணம் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகவே சண்டக்கோழி படத்தை இயக்கினார். புதுமுகமாக இருந்த விஷாலை ரஜினி, அஜீத் ரேன்ஞ்சுக்கு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிக் காட்டினார். அடுத்து விக்ரமின் பீமாவில் கொஞ்சம் சறுக்கினாலும் பையாவில் மீண்டும் எழுந்து நின்றார்.

இப்படி ஏற்ற தாழ்வுகளை மாறி மாறி சந்தித்த லிங்குசாமி மிகவும் சறுக்கியது சொந்தமாக படம் தயாரித்தபோதுதான். கமலை வைத்து அவர் தயாரித்த உத்தம வில்லன் படத்தில் அவர் சந்தித்த பொருளாதார இழப்பு லிங்குசாமி என்ற படைப்பாளியை காணாமல் செய்தது. அவர் இயக்கிய, தயாரித்த படங்கள் தொடர்ந்து சறுக்கலை சந்தித்தது. வழக்கு எண் மற்றும் வெற்றி பெற்றது. யார் இவர்கள், ரா ரா ராஜ்குமார் படங்கள் வெளிவராமல் இருக்கிறது.

இப்போது தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு எழுந்து நிற்கிறார். தெலுங்கில் ராம் பொத்தேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ‘உப்பன்னா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

தமிழில் தான் இழந்த அனைத்தையும் தெலுங்கின் மூலம் பெற்றுவிடும் முனைப்பில் இருக்கிறார் லிங்குசாமி. விரையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பிரமாண்ட ஆக்ஷன் படத்தையும் இயக்க இருக்கிறார். லிங்குசாமியின் செகண்ட் ரவுண்ட் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவோம்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *