Share on Social Media

241 பந்துகளை சந்தித்த மொஹீந்தர் அமர்நாத் 69 ரன்களில் வெளியேற, தொடர்ந்து விக்கெட் விழுந்து கொண்டே இருக்கும். நம்பர் 10, 11-ல் இறங்கிய கிரண் மோரே மற்றும் மணீந்தர் சிங்கின் உதவியால் திலீப் வெங்சார்க்கர் லார்ட்ஸ் மைதானத்தில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். லார்ட்ஸ் போன்ற ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் மைதானங்களில் எட்ஜ் வாங்காமல் கவர் டிரைவ் ஆடுவது ரொம்பவே கடினம். ஆனால், இந்த போட்டியில் வெங்சார்க்கர் அதிகமாக கவர் டிரைவ்களைத்தான் அதுவும் கச்சிதமாக ஆடியிருந்தார். பெரும்பாலான பந்துகளை ஆஃப் சைடிலேயே தட்டிவிட்டு இங்கிலாந்தின் ஸ்விங் வியூகங்களுக்கும் பதிலடி கொடுத்தார். 126 ரன்களை எடுத்த வெங்சர்க்கார் கடைசி வரை நாட் அவுட்டாகவே இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 47 ரன்கள் முன்னிலை.

எந்த அணிக்கும் சாதகமில்லாமல் சமநிலையிலேயே போட்டி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் யார் சிறப்பாக ஆடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்ற நிலையிருந்தது. ஆனால், கபில்தேவ் வீசிய ஒரு ஸ்பெல் எல்லாவற்றையும் மாற்றியது. 47 ரன்கள் முன்னிலையை இங்கிலாந்து அணி தாண்டுவதற்கு முன்பே அந்த அணியின் டாப் ஆர்டரை மொத்தமாக காலி செய்தார் கபில்தேவ்.

கிரஹாம் கூச், டிம் ராபின்சன், கேப்டன் டேவிட் கவர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரையும் மூன்றே ஓவரில் வீழ்த்தினார் கபில்தேவ். கபில்தேவின் ஹீரோயிக் சம்பவங்களில் இதுவும் ஒன்றும். ஏனெனில், முதல் இன்னிங்ஸில் அவர் அவ்வளவு சிறப்பாக பந்து வீசியிருக்கவில்லை. ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதுவும் டெய்ல் எண்டருடையது. இரண்டாவது இன்னிங்ஸில் கபில்தேவ் இப்படி வீசுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படி எதிர்பாராத நேரத்தில் அதிசயங்களை நிகழ்த்துவதுதானே கபில்தேவின் தனிச்சிறப்பு. இந்த போட்டியிலும் அதையே செய்தார். பந்தை பிடிக்கும் விதத்தில் நுணுக்கமான வித்தைகளை செய்து இன்ஸ்விங்கர்களையும் கட்டர்களையும் வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

கபில்தேவ் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத இங்கிலாந்து அணியால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியவில்லை. மிடில் ஆர்டரில் கேட்டிங், ஆலன் லாம்ப் போன்றவர்கள் கொஞ்சம் ரன் சேர்க்க இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 180 ரன்களை தொட்டது. இந்திய அணிக்கு டார்கெட் 134.

கவாஸ்கர், வெங்ச்சார்க்கர் ஆகியோர் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து அவுட் ஆக இந்திய அணி கொஞ்சம் வேகமாக 5 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கபில்தேவ் க்ரீஸுக்குள் வந்தார். லார்ட்ஸில் ஒரு போட்டியை வெல்ல இதைவிட ஏற்ற தருணம் அமையாது. இதில் சொதப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கபில்தேவ். தட்டித்தட்டி உருட்டி உருட்டி அடிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்த கபில்தேவ் டி20 ஃபினிஷர் போல ஆடத் தொடங்கினார். 10 பந்துகளில் 23 ரன்கள். 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர். பில் எட்மண்ட்ஸ் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 18 ரன்கள். சாதாரணமாக அல்ல பயங்கர அலப்பறையான முறையில் லார்ட்ஸில் இந்திய அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தார் கபில்தேவ்.

லார்ட்ஸ் வெற்றி இந்தியாவுக்கு ஒரு ஏக்கமாகவும் கனவாகவும் இருந்தது. அது அரைநூற்றாண்டு காலம் கடந்து கபில்தேவின் படையால் சாத்தியப்பட்டது. இதன்பிறகு, 2014-ல் தோனி தலைமையில் இந்திய அணி லார்ட்ஸ் போட்டியை வென்றது. வரலாற்றில் இரண்டே இரண்டு முறை மட்டும்தான் லார்ட்ஸ் வெற்றி இந்திய அணிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.

வருகிற இங்கிலாந்து சீரிஸில் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்துமா?!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *