Share on Social Media


லாக் அப் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டேன்; மனம் திறக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ்

21 நவ, 2021 – 10:15 IST

எழுத்தின் அளவு:


லாக் அப்பில் இருந்து எனக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்தேன் எனக் கூறும் இசையமைப்பாளர் அம்ரீஷ், அதிலிருந்து முற்றிலும் விடைபெற்று, திரையுலகில் தனக்கான இடத்தை நோக்கி வேகமாக பயணிக்க துவங்கியுள்ளார்; மேலும், நம்பிக்கையை மட்டும் எப்போதும் கைவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார். அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

சினிமாவில் நீங்கள் அறிமுகமானது நாயகனாக தானே?

அம்மா ஜெயசித்ராவின் ஆசைக்காக தான், நானே என்னுள் இல்லை என்ற படத்தில் நாயகனாக நடித்தேன். அதற்கு முன், பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்தேன். மொட்ட சிவா கெட்ட சிவா படம் வாயிலாக இசையமைப் பாளராக பலராலும் அறியப்பட்டேன்.

மீண்டும் நாயகனாக நடிப்பீர்களா?

இல்லை சார், இசையில் நாயகனாக இருக்கவே விரும்புகிறேன்.

வாரிசு என்றால் திரையுலகில் நுழைவது சுலபம்; உங்களுக்கு இந்த அனுபவம் எப்படி?

எட்டாவது படிக்கும்போது, இசையமைப்பாளர் மணி சர்மாவிடம் உதவி யாளராக என் திரையுலக பயணத்தை துவக்கினேன். அவரிடம் கற்ற முதல் பாடமே, நாம் யார், என்ன என்பதை வெளியே கழற்றி வைத்து, உதவியாளராக தான் உள்ளே வர வேண்டும் என்பது தான்.அப்போது முதல், நான் ஜெயசித்ராவின் மகன் என்பதை விட, இசையமைப்பாளர் ஒருவரின் உதவியாளராக தான் பயணத்தை துவங்கினேன். வாரிசாக இருந்தாலும் வாய்ப்புகள் சுலபத்தில் கிடைக்கவில்லை.

உங்களுடைய பாடல் ஹிட் ஆவது குறித்து?

ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போதே, அது வெற்றி பெறுமா… இல்லையா என்ற ஓர் உணர்வு நமக்குள் வந்து விடும். அதிலும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்கள் பாடலில் அமைந்தால், வெற்றி நிச்சயமே. அந்த மாதிரி தான், ஹர ஹர மகாதேவகி… மற்றும் சின்ன மச்சான்… உள்ளிட்ட பாடல்கள் குழந்தைகளிடமும் பேசப்பட்டன.

முதலில் பெற்ற பாராட்டு?

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சொன்னது, இவன் ஸ்டைலா பாட்டு போடுவான்பா; ராயபுரம் பக்கமாவே சுத்திட்டு இருப்பான் போல, சேட்டு வீட்டு மூஞ்சா இருந்தாலும், பீட்டு, ராயபுரம் பீட்டாவே இருக்கு என்றார்.

பாலிவுட்டில் இசையமைப்பாளராக நுழைந்தது குறித்து?

சன்னி லியோன் நடித்த வீரமாதேவி படத்திற்கு இசையமைத்தேன். அப்படத்தின் இசை பேசப்பட்டதால், மல்லிகா ஷெராவத் நடிக்கும் நாகமதி படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.

கைவசம் உள்ள படங்கள்?

ரஜினி என்ற பெயரில் ஒரு படம். இப்படத்திற்கு சித்ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அப்பாடல் வெளியாக உள்ளது. அடுத்து, விமல் நடிக்கும் படத்திற்கும், தெலுங்கு படம் ஒன்றுக்கும் இசையமைக்கிறேன்.

இசைக்கு காப்புரிமை கேட்பது குறித்து உங்கள் கருத்து?

ஐ.டி.ஆர்.எஸ்.,ல் நாம் பதிவு செய்து விட்டால், நம் பாடல் எங்கு ஒலித்தாலும் நாம் வருமானம் பெறலாம். நம் இசை, டிஜிட்டல் யுகத்தில் ரிங் டோன் உள்ளிட்ட பல பரிமாணத்தில், பல தளத்தில் வியாபாரமாகிறது. இது உரியவரிடம் சேர்வது தானே நியாயம். டிஜிட்டல் யுகத்திலும் நம் உரிமை இதன் வாயிலாக நிலை நாட்டப்படுகிறது.

தனியிசை பாடல்கள் வளர்ந்து வருவது குறித்து?

வெளிநாடுகளை போலவே, இங்கும் தனியிசை பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு வரவேற்பு கிடைக்க துவங்கிவிட்டது. படத்தின் இசை வாயிலாக மட்டுமே வெளியே தெரிந்த இசையமைப்பாளர்கள், தற்போது தனியிசை மூலம் பிரகாசிக்கின்றனர். இது இசையின் வளர்ச்சியே.

பண மோசடியில் மாட்டிய நீங்கள் முழுமையாக மீண்டு விட்டீர்களா?

முழுவதுமாக மீண்டு விட்டேன். எனக்கு அது ஒரு மாயை போல் இருந்தது. சமீபத்தில் நடிகை மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கைதாகினர்; வீடியோ வெளியானது. ஆனால், அம்ரீஷ் கைதான வீடியோ எங்கும் இருக்காது. ஏன் என்றால், நான் கைதானேன் என்பது ஒரு மாயை. அதன் வலி மட்டும் பயங்கரமாக இருந்தது. எனக்கு சம்பந்தமில்லாத அந்த வாழ்க்கையை வாழ்ந்தேன். அதில் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கும், வெளியே இருந்தவர்களுக்கும் அப்போது இருந்த வித்தியாசம் என்னவென்றால், நான் லாக் அப்பில் இருந்தேன்; வெளியே அனைவரும் லாக் டவுனில் இருந்தனர்.

நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர் யார்?

அம்மா மற்றும் கடவுள்.

எதிர்கால திட்டம்?

நமக்கு கிடைக்கும் படங்களை சரியாக செய்து கொடுத்தாலே போதும். நம் எதிர்காலத்தை அது தீர்மானித்து தரும்.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?

நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர். இயற்கையை நேசியுங்கள்!

– நமது நிருபர் –

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *