Share on Social Media


கோவை;கோவை வாலாங்குளத்துக்கு தண்ணீர் வரும் நீர் வழித்தடத்தை அடைத்து, ‘ஸ்மார்ட் சிட்டி’ வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, லங்கா கார்னர் பாலத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர்க்கால அடிப்படையில், மழை நீர் வடிகால்களை துார்வார, தமிழக அரசு அறிவுறுத்தியது.

கோவை, கூட்ஸ் ஷெட் ரோட்டில் புதர்மண்டியிருந்த வாய்க்கால் துார்வாரும் பணியை, சில நாட்களுக்கு முன், கலெக்டர் சமீரனும், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலும் இணைந்து துவக்கி வைத்தனர். அவ்வழித்தடத்தில் வழிந்தோடி வரும் தண்ணீர், தானியங்கி சிக்னல் அருகே இரு பிரிவாக பிரிந்து, வாலாங்குளத்துக்கு செல்ல வேண்டும். அதாவது, லங்கா கார்னர் பாலம் அருகே, பர்மா செல் காலனிக்கு செல்லும் வழித்தடத்தில் ஒரு வாய்க்கால் இருக்கிறது.
அத்தனையும் ஆக்கிரமிப்பு
ராயல் தியேட்டர் அருகே, 30 அடி அகலத்துக்கு இன்னொரு வாய்க்கால் அமைந்திருக்கிறது. தியேட்டர் அருகே உள்ள வாய்க்கால் முகப்பு ஆக்கிரமிக்கப்பட்டு, இரும்பு பெட்டி வைத்து, இரு சக்கர வாகனங்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை மற்றும் டீக்கடை நடத்தப்படுகிறது. அதன் பின்புறம் உள்ள வாய்க்கால் புதர் மண்டியிருக்கிறது. வாலாங்குளத்தின் வடக்கு கரையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ வேலை செய்பவர்கள், கரையை பலப்படுத்துவதாக கூறி, ‘கேபியான்’ தொழில்நுட்பத்தில், இடுப்பளவுக்கு கருங்கற்கள் அடுக்கி, நீர் வழித்தடத்தை தடுத்து தடுப்புச்சுவர் கட்டியிருக்கின்றனர்.
அதன் மையப்பகுதிகளில், விரிசலான ஒரு சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.கரையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள, கட்டடங்கள் வெளியேற்றும் கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குளத்துக்குள் கலக்கும் வகையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ வேலை செய்பவர்களே, குழாய் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.இதேபோல், பர்மா செல் காலனி வழியாகச் செல்லும் வாய்க்கால் கரையும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது. கடைகளும், வீடுகளும் கட்டியிருப்பதால், வாய்க்கால் அகலம் சுருங்கியிருக்கிறது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி, வாய்க்காலை மீட்டெடுக்கும் வேலையை செய்யாமல் உள்ளது.இதன் காரணமாகவே, பெரிய கடை வீதி மற்றும் கூட்ஸ் ஷெட் ரோட்டில் வழிந்தோடி வரும் மழை நீர், குளத்துக்குச் செல்ல வழியின்றி, லங்கா கார்னர் பாலத்தில் தேங்குகிறது; போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
மாநகராட்சி ஊழியர்கள் வந்து, வாலாங்குளத்துக்கு ‘பம்ப்’ செய்தால் மட்டுமே, தண்ணீர் வடிகிறது.வேடிக்கை பார்ப்பது இதனால்தான்!இதற்கு தீர்வு காண, ராயல் தியேட்டர் அருகே உள்ள வாய்க்காலை துார் வாரி, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அமைத்துள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும். ‘ஸ்மார்ட் சிட்டி’ பிரிவினர் செய்த தவறு என்பதால், மாநகராட்சி உயரதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இதோ கமிஷனர் பார்வைக்கு வச்சாச்சு. அவரும் வேடிக்கை பார்க்க மாட்டார் என்று நம்புவோம்!

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *