Share on Social Media


மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய பல்வேறு திட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல்கொடுத்த போதெல்லாம், ‘இது ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள்தான்’ என்று சொல்லி எதிர்ப்பு பந்துகளைத் திருப்பியடித்து வந்தது பா.ஜ.க! ஆனால், கொரோனா 2-வது அலை ஒட்டுமொத்தமாக நாட்டையே துவம்சம் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சரமாரியாக குற்றச்சாட்டுகளை வீசிவருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினேன்…

”பேரிடர் காலத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை மட்டுமே காங்கிரஸ் கூறிவருவது நியாயம்தானா?”

கொரோனா வைரஸ்

”நாங்கள் குற்றச்சாட்டு வைக்கவில்லை… கொரோனா முதல் அலையின்போது, அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் உலகம் முழுக்கவே ஒரு தயக்க நிலை இருந்தது. ஆனால், இந்த 2-வது அலை என்பது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழித்தே வந்திருக்கிறது. எனவே, அமெரிக்காவில் 60 % பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டனர். இஸ்ரேலில் 67% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர். ஆனால், இந்தியாவிலோ ஒரு தடுப்பூசி 10% பேருக்கும், 2 தவணை தடுப்பூசி வெறும் 3% மக்களுக்கும் மட்டுமே போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி தயாரிப்பு பணியில் பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தாதது, தனியார் துறையில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தது, உள்நாட்டில் தயாரான தடுப்பூசிகளையும் வெளிநாடுகளுக்கு தாரை வார்த்தது என இந்தத் தவறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாட்டின் லட்சோபலட்ச குடிமக்களின் உயிரோடு விளையாடிவிட்டது. ஆக இந்த தவறுகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்றுக்கொள்வது?”

”தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இந்தியா, உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்திருப்பதாக மத்திய பா.ஜ.க அரசு சொல்கிறதே…?”

”இது என்ன சமாதானம்? உத்தரப்பிரதேசம் கங்கைக் கரையில் எவ்வளவு பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்ற சேட்டிலைட் புகைப்படம் ஒன்றே நாட்டின் அவலநிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறதே…. அப்போதும்கூட அந்த சேட்டிலைட் புகைப்படத்தை மறைப்பதற்குத்தான் பா.ஜ.க-வினர் முயற்சி செய்கிறார்களே தவிர, தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால்தான் கொரோனாவில் இறந்தவர்களை புதைப்பதற்கும் எரிப்பதற்கும்கூட இடமில்லை என்பது தினசரி செய்தியாக இருக்கிறது. ஆக, 130 கோடி மக்கள் தொகையைக்கொண்ட நாட்டில், எத்தனை சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியிருக்கிறீர்கள், அதை எவ்வளவு விரைவாக செலுத்தியிருக்கிறீர்கள் என்பதுதானே இங்கே கேள்வி! ஒட்டுமொத்தத்தில் கொரோனாவை ஒழிப்பதைக்காட்டிலும் ஒளித்துவைப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறது மத்திய பா.ஜ.க அரசு!”

social media Tamil News Spot
சமூக ஊடகம்

”சமூக ஊடகக் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக, புதிய விதிகளை இயற்றியிருக்கும் மத்திய அரசை குறை கூறுவது ஏன்?”

”நாட்டில் நடைபெறுகிற அனைத்து உண்மைகளும் குடிமக்களுக்குத் தெரிந்தாகவேண்டும்; அதுதான் உண்மையான ஜனநாயகம். நாடாளுமன்றத்தில் பல்வேறு விஷயங்களுக்காக உறுப்பினர்கள் கலகக் குரல் எழுப்பும்போது கூட்டத்தை ஒத்திவைப்பார்களே தவிர… உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நடத்திய வரலாறு எப்போதும் கிடையாது. உதாரணமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயேகூட ‘போபர்ஸ், 2ஜி’ குறித்தெல்லாம் எவ்வளவோ எதிர்வாதங்கள் வைக்கப்பட்டதுதானே… அத்தனையையும் காங்கிரஸ் அரசு அனுமதித்தது. மாற்றுக்குரலே ஒலிக்கக்கூடாது என்று சொல்லி எதிர்க்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் மாற்றுக்குரல்களும் ஒலிக்கவேண்டும் என்றுதான் நமது அரசியல் சட்டமே சொல்கிறது.இந்தவகையில் எல்லோரும் தங்கள் கருத்துகளை சொல்லக்கூடிய – தனி மனித உரிமையை வெளிப்படுத்துகிற இடமாக இன்றைக்கு சமூக ஊடகம் இருக்கிறது. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் சமூக ஊடகத்தின் குரல்வளையை நெறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விதிகள் என்பது, ‘உண்மைகள் எதுவும் வெளிவந்துவிடக் கூடாது’ என்ற பயத்தினால் ஏற்பட்டது. எனவேதான் இதைத் தவறு என்று சொல்லி எதிர்க்கிறோம்.”

”அதேசமயம், மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகளை கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுதானே?”

”உலகம் முழுவதும் பெருமளவில் வணிகம் செய்துவருபவர்களில் பெரும்பாலானோர் ஆட்சியாளர்களோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்புவதில்லை. ஒருசிலர் மட்டுமே துணிச்சலாக நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுப்பார்கள்.”

narendira modi Tamil News Spot
நரேந்திர மோடி

”காங்கிரஸ் கட்சி, ‘டூல்கிட்’ தயாரித்ததாக பா.ஜ.க சுமத்திய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வரும்போதே, ‘இது புனையப்பட்ட ஒன்று’ என ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?”

”ட்விட்டர் நிறுவனம் இந்த விவகாரத்தில் உள்ள உண்மையைச் சொல்லியிருக்கிறது. இந்த உண்மையை விசாரணை நடந்துவரும்போது தெரிவிக்காமல், பின்னர் எப்போது தெரிவிக்க முடியும்? கொரோனாவினால் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டிருக்கும் கெட்டப்பெயரை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி செய்யாத ஒன்றை, செய்ததாகக்கூறி பா.ஜ.க தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இப்போதும்கூட காங்கிரஸ் கட்சி, இந்த செய்தியை மறுத்திருந்தால் நீங்கள் கேள்வி எழுப்பலாம். சம்பந்தப்பட்ட ட்விட்டர் நிறுவனமே ‘இது புனைவு செய்யப்பட்டது’ என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டது. ஆக, பிரதமர் மோடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இதைவிட கேவலம், அவமானம் வேறு எதுவும் கிடையாது!”

”சென்ட்ரல் விஸ்டா திட்டம் குறித்து இப்போது கேள்வி எழுப்புகிற காங்கிரஸ் கட்சி, 10 வருடங்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைந்தது என்று பா.ஜ.க-வினர் கேட்கிறார்களே?”

”அப்படி எந்தத் திட்டத்தையும் காங்கிரஸ் அரசு கொண்டுவரவில்லை. நாடாளுமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும். அந்தவகையில் 10 வருடங்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்தும் உறுப்பினர்கள் விவாதித்திருக்கலாம். ஆனால், அப்படி புதிதாக நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான திட்டத்தையோ அதற்கான நிதி ஒதுக்குதலையோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செய்யவில்லை. இப்போது உள்ள நாடாளுமன்றத்தின் உறுதித்தன்மையே இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கக்கூடியது. ஆனால், இந்தப் பெருந்தொற்று பேரிடர் காலத்திலும் 20 கோடி ரூபாய் செலவில், புதிதாக ஒரு கட்டிடத்தைக் கட்டி அடிக்கல்லில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளும் நப்பாசையில் மோடி இவ்வாறு செயல்பட்டு வருகிறார். இந்தத் தொகையில், மக்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவமனைகளை கட்டித் தரலாம். தலைநகர் டெல்லியிலேயே கழிப்பறை வசதிகளின்றி குப்பங்களில் தவித்துவரும் மக்களின் அவலநிலையைப் போக்கலாம்… அடிப்படையான இந்த வசதிகளை எல்லாம் செய்துதராமல், பிரதமருக்கு இப்போது மாடமாளிகை ஏன் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி!”

rahul rajiv priyanka Tamil News Spot
ராகுல் – ராஜீவ் – பிரியங்கா

”ராஜீவ்காந்தியின் குடும்பத்தினரே, ‘ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மன்னித்துவிட்டோம்’ என்று கூறியபிறகும், காங்கிரஸ் கட்சி மட்டும் தொடர்ந்து ஏதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?”

”பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ‘மன்னித்துவிட்டோம் என்று சொன்னாலும்கூட அதை எந்தவொரு நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில், சட்டத்துக்கு உட்பட்டது கிடையாது. இதைத்தான் கடந்தகால விசாரணை வழக்குகளும் நமக்கு உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே, ‘மன்னித்துவிட்டேன்’ என்று சொல்வதென்பது, அந்தந்த தனிப்பட்ட மனிதர்களின் மனநிலையைப் பொறுத்த விஷயம். ‘எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்; இதற்கு மேல் நமக்கு என்ன இருக்கிறது’ என்ற மனநிலையில்கூட சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மன்னிக்கலாம். ஆனால், நீதிமன்றம் எப்படி மன்னிக்கமுடியும்?”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *