Share on Social Media


தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., பேட்டி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது. தேர்தல் நெருங்கும் போது, கூட்டணியும், ஒற்றுமையும் வலிமைப்படும்.

அந்த நேரத்தில், காங்கிரசுக்கு சோனியா தலைமை வகிப்பாரா அல்லது ராகுல் இருப்பாரா என்ற சந்தேகம் வருகிறது. ஏனெனில், ராகுல் தலைமையில் வயதில் மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அணி சேர விரும்புவதில்லையே!


இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை
: எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு இடம் தராமல், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றிருப்பது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுகிறது. நிச்சயம் ஒருநாள் வேளாண் சட்டத்தின் நன்மைகளை விவசாயிகள் புரிந்து கொள்வர்.

உண்மையான விவசாயிகளுக்கு அந்த சட்டங்கள் அவசியம் என்பது நன்கு புரியும். கம்யூ., கட்சியை சேர்ந்த விவசாயிகள் தானே, இத்தனை காலமும் போராடினர். எனவே, அவர்களுக்கு புரியவே செய்யாது!


வரலாற்று ஆய்வாளர் வேதபிரகாஷ் பேட்டி:
திருவள்ளுவர் கிறிஸ்துவர் என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. 1975ம் ஆண்டிலேயே பேராசிரியர் தெய்வநாயகம் இந்த கருத்தை வலியுறுத்தினார். அதை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அப்போதே நிராகரித்து சுற்றறிக்கை வெளியிட்டது.

ஹிந்துக்களுக்கு எதிராகவும், விரோதமாகவும் எதையாவது சொல்வது, எழுதுவது தான் திருமாவளவனின் அரசியல் நடவடிக்கையாக ஆகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை
: கொரோனா பேரிடர் காலத்தில், கேரளாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களில், 91 சதவீதம் பேருக்கு கல்வி கிடைத்துள்ளது. இந்த சாதனையின் பின்னணியில் ஒட்டுமொத்த கேரள மக்களும் உள்ளனர்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் ‘ஆன்லைன்’ கல்வி, சிறப்பான வகையில் இருந்தது என்கிறீர்கள். அப்படியானால் கொரோனாவை விரட்ட மட்டும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறதே உங்கள் அரசு ஏன்?

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: கோவில்களுக்கு தங்கத்திலான மாங்கல்யம் போன்றவற்றை காணிக்கையாக வழங்குவது ஹிந்துக்களின் பழக்கம். இது, பக்தர்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. இதில், லாப, நஷ்ட கணக்கு பார்த்து உருக்க நினைப்பது தவறு. தமிழக அரசு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு நீதிமன்றங்கள் மூலம், பா.ஜ., முட்டுக்கட்டை போடவில்லையே ஏன்?

நடிகர் கார்த்தி அறிக்கை: மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒரு வருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும், நன்றியும்!

நடிப்பதை தவிர, வேறு விவகாரங்களில் தான் உங்களுக்கும், உங்கள் சகோதரருக்கும் விருப்பம் அதிகம் போலிருக்கிறது. எப்படியோ, அடுத்த படத்திற்கு கரு கிடைத்து விட்டது உங்களுக்கு!

தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: ஓராண்டுக்கு மேலாக போராடிய விவசாயிகளிடம் யார் மன்னிப்பு கேட்பது; உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு யார் நஷ்டஈடு தருவது; எதிர்க்கட்சிகள் ரத்து செய்ய கேட்டபோது பிடிவாதமாக மறுத்தவர்களின் தலைகீழ் மாற்றத்தின் மர்மம் என்ன?

போராடியவர்களின் கோரிக்கை இப்போதைக்கு நிறைவேறி விட்டது. அடுத்து, நஷ்ட ஈடு கேட்டு, விரைவில் போராட்டம் நடத்துவர்; அப்போது பார்த்துக் கொள்ளலாம்… உங்கள் கோரிக்கை, பிரதமர் காதுக்கு எட்டி விட்டது போலும்… மன்னிப்பு கேட்டு விட்டாரே!

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேட்டு நிலங்களில் பயிரிடப்பட்ட கடலை உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தியும் பாதித்துள்ளது. இவற்றுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் இப்போதைய நிதி நிலையில் இது சாத்தியமில்லை. மத்திய அரசு நிதி வழங்கினால் கொஞ்சம் பகிர்ந்தளிக்கப்படலாம். எப்படியோ, ‘மத்திய அரசே நிவாரணம் கொடு…’ என, நீங்கள் போராட்டம் நடத்த ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டதல்லவா!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: மக்கள் புரட்சிக்கு முன் எத்தகைய அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு வரலாற்று சான்றாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது.

நீங்கள் இங்கிருந்து சுகமாக அறிக்கை விட்டு விடுவீர்கள். ஓராண்டாக வெயிலிலும், மழையிலும் விவசாயிகளுடன் மறைந்து கிடந்த கம்யூனிஸ்டுகளுக்குத் தான் தெரியும் போராட்டத்தின் வெற்றி பின்னணி!


பா.ஜ.,விலிருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் சேர்ந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை
: மத்திய அரசின் விவசாய சட்டங்களை வாபஸ் பெறச் செய்த விவசாயிகளை பாராட்டுகிறேன். மத்திய அரசின் இந்த முடிவின் பின்னணியில் பெரிய உன்னத நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உ.பி., தேர்தலுக்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கை தான் இது.

எப்படி இப்படி மாறிட்டீங்க… பா.ஜ.,வில் இருக்கும் போது நீங்கள் இவ்வளவு புத்திசாலியாக இல்லையே… கட்சி மாறியதும் கற்பனை வளமும் வந்து விட்டதே!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *