Share on Social Media


”ரவுடி சிடி மணி போலீசில் சிக்கியது எப்படி?” என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள் என  தெரிவித்தார். அதன்படி சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள டாப்டென் ரவுடிகள் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தேனாம்பேட்டை ரவுடி சிடி மணி கொலை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு கோடிஸ்வர ரவுடியாக சொகுசு கார்களில் எந்தவித தடையும் மின்றி லாக்டவுனிலும் பந்தாவாக வலம் வருவது காவல் ஆணையரின் பார்வைக்கு சென்றது.  இதனால், அவரை கைது செய்ய காவல் ஆணைர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அப்போது, சிடி மணி சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மற்றும் அண்ணன் மகன்களுடன் வசித்து வருவதும் காரில் சென்னைக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் சோழிங்கநல்லூர் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். சிடி மணி வசித்து வந்த வீட்டையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். 

 கடந்த 1ம் தேதி நள்ளிரவு சிடி மணி வீட்டை போலீசார் சுற்றி வளைத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் இருந்த சிடி மணியை பிடித்து காரில் ஏற்றி அழைத்து வந்தனர். அவரிடம் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற பல லட்சம் மதிப்புள்ள கார்கள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் முக்கிய ஆவணங்களான சிடி மணியின் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அவற்றை ஆய்வு செய்தனர்.

 அப்போது, சிடி மணி தான் தப்பிப்பதற்காக  செல்போன் அப்ளிகேஷனும் வீட்டின் வௌிப்புறப் பகுதியில் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.  வீட்டுக்குள் போலீசார் இரவு சமயத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்தால் செல்போனில் வைத்துள்ள அப்ளிகேஷன் மூலம் ஒரே சமயத்தில் தனது குடும்பத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மெசேஜ் போகும் வகையில் சிடி மணி வைத்திருந்தது காவதுறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற தகவல்கள் சிடி மணியின் செல்போனை ஆய்வு செய்த பின்பு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

 கடந்த ஆண்டு தேனாம்பேட்டையில் சிடி மணியை எதிரி கும்பல் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர்.  அப்போது சிடி மணியிடம் இருந்து பார்ச்சூனர் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். தற்போது அந்தக் கார்  சிடி மணியிடம் இல்லை. அது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிய போது அந்த காரை குண்டு துளைக்காத காராக மாற்றுவதற்காக டெல்லிக்கு அனுப்பி வைத்ததாகவும் அதிர்ச்சித் தகவலை சிடி மணி தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

image

 சிடி மணியிடம் இருந்து போலீசார் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் அதில் பயன்படுத்தக்கூடிய 11 புல்லட்டுக்களை பறிமுதல் செய்தனர். அதில் 3 புல்லட்டுக்கள் டம்மி என போலீசார் கண்டறிந்தனர். அதனை தனது எதிரிகளை பயமுறுத்துவதற்காக பயன்படுத்துவேன் என்றும் அதை துப்பாக்கியில் போட்டு பயன்படுத்தினால் ‘டமால்என்ற சத்தம் மட்டுமே வரும் என்றும் குண்டு பாயாது என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் சிடி மணி அடிக்கடி மதுரைக்கு காரில் சென்று வந்துள்ளார்.  அங்குள்ள தனது நண்பரின் தென்னந்தோப்புக்குள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கூட்டாளிகள் யார்? அவர்களை பிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

 தற்போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சிடி மணி சென்னை ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் அது தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி  ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிடி மணியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ரவுடி சிடி மணி 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு புழல் சிளையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


PT News App:உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது புதியதலைமுறை ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Puthiyathalaimurai ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *