Share on Social Media

அவர் அடிக்கும் பந்துகள் ஒவ்வொன்றும் வரிசையாக பவுண்டரி எல்லையைத் தொட்டுக்கொட்டிருக்கின்றன. பௌலிங் க்ரீசிலிருந்து வீசிய பந்துகள் ஒவ்வொன்றும் ஸ்டம்பைத் தாக்குகின்றன. பாயின்ட் திசையிலிருந்து, கவர் திசையிலிருந்து எரிந்த பந்துகள் ஒவ்வொன்றும் ஸ்டம்புகளைப் பதம் பார்க்கின்றன. அலாவுதீனின் சொல் கேக்கும் ஜீனியைப்போல், அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிபணிந்துகொண்டிருக்கிறது பந்து. வான்கடே எனும் பார்வையாளர்களற்ற மேடையில் மகா தந்திரங்களை நிகழ்த்திகாட்டியிருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. கிரிக்கெட் உலகம் கண்டிராத மகத்தான செயல்பாட்டை நேற்று அரங்கேற்றியிருக்கிறார். 62 ரன்கள், 3 விக்கெட், 1 ரன் அவுட் – ஆல்ரவுண்டர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார். நேற்றைய போட்டி மட்டுமல்ல, ஜடேஜாவின் 16 வருட கிரிக்கெட் கரியருமே ஒரு மிகப்பெரிய பாடம்தான்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அது பொய் என்பதை இந்த 12 ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறார் அவர். 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடினார் ஜடேஜா. பாயின்ட்டில் நின்றுகொண்டிருந்தவர் ஜெயசூர்யா அடித்த ஷாட்டைப் பிடிக்கத் தவறிவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் தன் கைக்கு வந்த முதல் வாய்ப்பையே தவறவிட்டவர்தான் இன்று உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்!

ஆனால், ஜடேஜாவின் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்துவிடவில்லை. மஞ்ரேக்கர் மட்டுமல்ல, ஜடேஜா முழுமையான வீரர் இல்லை என்ற விமர்சனம் ஆரம்பகாலத்திலிருந்து பலரும் சொல்லியிருக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு விதமான விமர்சனங்கள் அவரைத் துறத்திக்கொண்டேதான் இருந்திருக்கிறது. அவரது செயல்பாடுகள் அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. அணியில் அவரது தேர்வு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அணியில் இருந்து அடிக்கடி கழற்றிவிடப்பட்டும் இருக்கிறார். ஆனால், ரவீந்திர ஜடேஜா ஒரு முறை கூட ஓய்ந்ததே இல்லை.

2015-ல் ஒருநாள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். டி-20 அணியில் இவருக்குப் பலமுறை வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை கழற்றிவிடப்பட்டாலும் அசராமல் இருப்பார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வித்தைகள் காட்டுவார். மீண்டும் இந்திய அணியின் கதவுகள் திறக்கும். திறந்தே ஆகவேண்டுமே..!

Ravindra Jadeja

உதாரணம், 2019 உலகக் கோப்பை. ஸ்குவாட் ப்ளேயராக இந்திய அணியோடு இங்கிலாந்து செல்கிறார் ஜட்டு. சஹால், குல்தீப் என இரு ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா என அதிரடி ஆல்ரவுண்டர் இருக்கிறார். எப்படி அணியில் இடம் கிடைக்கும்? இப்படி யோசித்தால் நிச்சயம் இடம் கிடைக்காது. நம்மைத் தேர்ந்தெடுப்பவர்களின் கண்களுக்கு நாம் தெரிந்துகொண்டே இருக்கவேண்டும். அவர்களின் கண்களை, எண்ணங்களை நம்மைச் சுற்றியே இருக்கவைக்கவேண்டும். ரசிகர்களுக்கு இந்த மட்டும் ஜடேஜா இந்த மந்திரம் செய்வதில்லை. தேர்வாளர்களிடமும், அணியை தேர்வு செய்பவர்களிடம்கூட இந்த வித்தையை அவர் கட்டவிழ்த்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி. இந்திய பௌலர்களை பதம்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். மொத்த அணியும் நம்பிக்கை இழந்துவிடுகிறது. சப்ஸ்டிட்யூட்டாக வந்த ஜடேஜா களத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறார். தனி ஓரு ஆளாக பவுண்டரி எல்லையைக் காத்துக்கொண்டிருக்கிறார். லாங் ஆனில், மிட்விக்கெட்டில், லாங் ஆஃபில், ஒவ்வொரு திசையிலும் பாய்ந்து பாய்ந்து பவுண்டரிகளைத் தடுத்துக்கொண்டிருக்கிறார். ஜேசன் ராய் கேட்சை சூப்பர் மேனாகப் பாய்ந்து பிடிக்கிறார்.

ஒட்டுமொத்த ரசிகர்களின் கண்களும் அதிரடி காட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பக்கமிருந்து இவர் பக்கம் திரும்பியது. சப்ஸ்டிட்யூட்டாக வந்து உயிரைக் கொடுக்கும் அவரை எத்தனை நாள் பென்ச்சில் அமரவைக்க முடியும்? அடுத்த இரண்டாவது ஆட்டம், கோலியின் ஆஸ்தான பௌலர் சஹாலுக்குப் பதில் உள்ளே வருகிறார் ஜட்டு.

2019 உலகக் கோப்பை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது யார்? 5 சதங்கள் அடித்த ரோஹித் ஷர்மாவா இல்லை ஒரேயொரு இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் செய்த ஜடேஜாவா! இந்த மாவீரனின் கரியர் வெறும் நம்பர்களால் அளக்கப்படுவதில்லை. அந்தக் களத்தில் அவர் கொட்டும் உழைப்பு. அதுதான் அவருக்கான அளவுகோல்.

jadeja Tamil News Spot
Ravindra Jadeja

நேற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங்கின்போது பௌலிங், ஃபீல்டிங் என ஸ்டம்புகளைப் பதம் பார்த்துக்கொண்டே இருந்தார் ஜட்டு. அவரது எனர்ஜியைப் பார்த்து ஒவ்வொருவரும் பூரித்துப்போய் நின்றிருப்போம். ஆனால், இதே ஜடேஜாதான் கடைசி ஓவர் பேட்டிங் செய்யும்போது நிற்கக் கூட முடியாமல் அவதிப்பட்டவர். வாந்தி வருகிறது என்பதுபோல் சைகை காட்டினார். மிகவும் கஷ்டப்பட்டார். இருந்தும் கொஞ்சம் கூட அசரவில்லை. ஏனெனில், அவருக்கு ஒதுங்கி நிற்கத் தெரியாது. வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ளத் தெரியாது.

தோல்வி கண்களுக்குத் தெரியும்போது அதை கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும் என்பார்கள். மற்றவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்போது ஒருவர் மட்டும் அதைத் தடுக்கப் போராடுவார். இந்த 21-ம் நூற்றாண்டில் அவர்களுக்கு ஆர்வக்கோளாறு என்று பெயர்வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைத்தான் போராளிகள் என்று போற்றுவார்கள். எப்போதும் தோல்வியை, வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். விடாமல் சண்டை போடுவார்கள். ஜடேஜா ஓயாமல் சண்டை செய்துகொண்டேதான் இருந்திருக்கிறார்.

Screenshot 2021 04 26 at 12 49 47 PM Tamil News Spot
Ravindra Jadeja

இலங்கைக்கு எதிரான அதே அறிமுக போட்டி. முதல் வாய்ப்பை விட்டவர், இலங்கை இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஒரு அமர்க்களமான ரன் அவுட் செய்து தான் எப்படிப்பட்ட ஃபீல்டர் என்பதை நிரூபிப்பார். அடுத்த இன்னிங்ஸில், தான் எப்படிப்பட்ட வீரர் என்பதையும் நிரூபித்தார் ஜட்டு. இந்தியாவுக்கு 321 ரன்கள் இலக்கு. ஜடேஜா களமிறங்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 138-6. ஸ்கோர் 193 இருந்தபோது கடைசி நம்பிக்கை தோனியும் அவுட். அன்று பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்ந்துகொண்டே இருந்தாலும் அவர் அசரவில்லை.

இந்த ஒரு போட்டி மட்டுமல்ல. எத்தனையோ போட்டிகளில் கடைசி வரை தனி ஆளாக நின்று போராடியிருக்கிறார். ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் 314 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, 184 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிடும். ஆனாலும், அந்தப் போட்டி டை ஆகும். காரணம் ஜடேஜா. இந்தப் போட்டியைப் போல், அந்த உலகக் கோப்பை அரையிறுதியைப் போல் பல்வேறு போட்டிகளில் ஒற்றை ஆளாக உருண்டு பிரண்டிருக்கிறார் அவர். பிரவீன் குமார், ஹர்பஜன் சிங், அஷ்வின், இர்ஃபான் என லோயர் ஆர்டர் பிளேயர்களோடு பல்வேறு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைத்திருக்கிறார். இவரது நாற்பதுகள், ஐம்பதுகள் பலதும் இந்தியா படுமோசமாகத் தோற்ற போட்டிகளில் போராடியவையாகவே இருக்கும். 2009 ஆஸ்திரேலிய தொடர், 2010 ஜிம்பாப்வே முத்தரப்பு தொடர், 2014 நியூசிலாந்து சுற்றுப் பயணம் என பல தொடர்கள் அப்படியானவைதான்.

இப்படிப் போராடுவதும், வீழ்ந்த பின் எழுவதும் மட்டும் அவர் ஸ்பெஷல் என்று நினைத்துவிடவேண்டாம். வெற்றியை நோக்கி படிகளில் ஏறும் ஒரு வீரனால், போராளியால் கீழே விழுந்தாலும் மீண்டும் எழமுடியும். ஏற முடியும். மீண்டும் மீண்டும் எழுந்து ஏற முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள் முதல் படியிலிருந்துதான் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். ஜடேஜா அப்படியில்லை. அவர் ஒரு சூப்பர்மேன். பந்துகளைப் பாய்ந்து பிடிப்பதாலும், டைரக்ட் ஹிட் அடிப்பதாலும் மட்டும் சொல்லிவிடவில்லை. பத்தாவது படியில் இருந்து கீழே விழுந்தால், எகிறிக் குதித்து பத்தாவது படியில் இருந்தே அவரால் பயணத்தைத் தொடர முடியும். எத்தனை முறை விழுந்தாலும் எழுவார். ஒவ்வொரு முறையும் விழுந்த இடத்தில் இருந்தே தொடர்வார்.

2017 சாம்பியன்ஸ் டிராபி ஏமாற்றத்தால் அணியை விட்டு நீக்கப்படுகிறார். அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான அணியில் ஹர்திக் இல்லாததால் இன்னொரு வாய்ப்பு பெறுகிறார். ஓராண்டுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருப்பவர், விட்ட இடத்தில் இருந்தே தொடர்ந்தார். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள். விளையாடிய 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். மீண்டும் இந்திய அணியின் முக்கிய அங்கமாக மாறுகிறார்.

அன்று பாண்டியாவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றவர், உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் சஹாலுக்குப் பதிலாக வந்தார். ஒரு ஆல்ரவுண்டர் இல்லையா, ஜடேஜாவைக் கூப்பிடு. ஒரு ஸ்பின்னர் இல்லையா ஜடேஜாவைக் கூப்பிடு. இன்று சிஎஸ்கே-வில் ஹிட்டரின் ரோலையும் அவர்தான் பார்த்துக்கொண்டிருகிறார். இதற்காகவும் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார் அவர்.

ஆரம்ப கட்டத்தில் ஸ்லோவாக ஆடும் பேட்ஸ்மேனாகத்தான் இருந்தார். ஷார்ட் ஃபார்மேட்டில் சிக்கனமாகப் பந்துவீசினாலும் விக்கெட் எடுக்க சற்று தடுமாறினார். ஆனால், இன்று எந்த கியரிலும் பேட்டிங் ஆடுகிறார். எப்போது வேண்டுமானாலும் விக்கெட் எடுத்துத் தருகிறார். இதற்கு மேல் ஒரு முழுமையான ஆல்ரவுண்டரைக் காட்டுங்கள் பார்ப்போம் என்று கிரிக்கெட் உலகிற்கு சவால் விட்டிருக்கிறார்!

16 வயதில் இந்திய அண்டர் 19 அணிக்காக உலகக் கோப்பையில் ஆடியதிலிருந்து இன்றுவரை இவர் சந்தித்திடாத விமர்சனங்கள் இல்லை. இவர் பார்த்திடாத வீழ்ச்சியும் இல்லை. ஆனால், எதுவுமே இவரை ஒதுக்கி வைத்ததில்லை. ரேஸிலிருந்து தள்ளிவிடப்பட்டாலும், மீண்டும் டிராக்குக்குள் நுழைந்துவிடுவார். வாய்ப்பு இவர் கதவுகளைத் தட்டும் முன்பே, ஓயாமல் அதன் கதவைத் தட்டுபவர் இவர். முன்பு சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன், ரவீந்திர ஜடேஜா எனும் சகாப்தம் நம்பர்களால் அளக்கப்படப்போவதில்லை. அது உழைப்பின், விடாமுயற்சியின் உருவம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *