Share on Social Media


ரஜினியின் பாராட்டில் நெகிழ்ந்த ‘வெற்றி’

05 டிச, 2021 – 12:21 IST

எழுத்தின் அளவு:


கோலிவுட் சினிமாவில் தொடர் வெற்றி பட இயக்குனர்கள், நடிகர்கள் வரிசையில், முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் வெற்றி பழனிசாமி.
பல்லடம் அருகே நாதகவுண்டம்பாளையத்தில் இருந்து சினிமா கனவோடு சென்னை புறப்பட்டு சென்ற இவர், ‛தெனாவெட்டு’ துவங்கி, சமீபத்தில் வெளியான, ‛அண்ணாத்த’ படம் வரையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை, 22 படங்களில் ஒளிப்பதிவாளராக தனது தனித்தன்மையை, ‛வெளிச்சம்’ போட்டு காட்டியுள்ளார். பெயரிலே இருந்தாலும், முதல், ‛வெற்றி’ இவருக்கு அவ்வளவு எளிதாக வாய்க்கவில்லையாம்.
சினிமா கனவு எங்கிருந்து துவங்கியது?
சிறு வயதிலிருந்தே சினிமா பைத்தியம். செந்துாரப்பூவே, புலன்விசாரணை, இணைந்த கைகள் படங்கள் பார்க்கும்போது இறுதியில், ‘ஏ பிலிம் பை பிலிம் ஸ்டூடண்ஸ் -‘டிப்ளமோ இன் பிலிம் டெக்னாலஜி’ என திரையில் வரும். இங்கு முறைப்படி படித்து சினிமாக்குள் நுழைய ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தேன்.என் முதல் குரு சரவணன் சார்தான். அவருடன் பூவே உனக்காக, சூரியவம்சம் படங்களில் அசிஸ்டென்டாக பணிபுரிய துவங்கினேன்.
எனது முதல் படம், ‘அகரம்’ வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது. அடுத்த படமான ‘தெனாவெட்டு’ பல இழுபறிக்குப்பிறகே, ரிலீசானது. எனக்கான முதல் அங்கீகாரத்தை தந்த படம்.ஒளிப்பதிவாளர் சிவா நெருங்கிய நண்பர். இவர் இயக்கிய, ‘சவுரியம்’ தெலுங்கு படத்தில் பணியாற்றினேன். பின், மாசிலாமணி, வேங்கை, காஞ்சனா – 1, 2, 3, வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம், அண்ணாத்த என அடுத்தடுத்து, ‘கிரேப்’ உயர்ந்தது.
அஜித், ரஜினியுடன் பணியாற்றியது…
அஜித் சார் சூட்டிங் ஸ்பாட்டில் கடைநிலை ஊழியர்களிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் பேசுவார். கூட இருப்பவர்களும் ஜெயிக்கணும்னு அடிக்கடி சொல்வார். சினிமா பார்க்கும் யாருக்கும் அவரின் தாக்கம் இருக்கும். ரஜினி சார், சூட்டிங்கிற்கு காலை, 7:00 மணிக்கு வருவார். ஷாட் இல்லை என்றாலும், இரவு எத்தனை மணியானாலும் கூடவே இருப்பார். அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பின், அவருக்கு ஒளிப்பதிவில் மிக பிடித்த படம், ‘அண்ணாத்த’தான் என சொல்லி என்னை கட்டிப்பிடித்ததை மறக்க முடியாது.
பணியாற்ற விரும்பும் இயக்குனர்…
ஒவ்வொருவரிடமும் தனித்துவம் உண்டு. அதில் நம்மை பொருத்திக்கொண்டு போவதுதான் சரி. இயக்குனர் வெற்றிமாறன் படங்கள் மிக பிடிக்கும்.
இயக்குனராகும் ஐடியா உள்ளதா?
மெட்ரோ சிட்டியில் வசிப்பவர்களுக்கும், கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்றால் சாதாரண காரியம் இல்லை. இருவேறு வாழ்வியலையும் உணர்ந்து அதற்கேற்ப கதையை நகர்த்த, தனித்திறமை வேண்டும். அதற்குள் நுழையும்முன், ஒளிப்பதிவு துறையில் நான், சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வரலாற்று படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
தொழில்நுட்ப ரீதியாக எப்படி அப்டேட் செய்கிறீர்கள்?
மாதம் ஒரு புதிய டெக்னாலஜி அறிமுகமாகின்றன. தேடித்தேடி உலக சினிமாக்களை பார்த்து வந்த காலம்போய், இப்போது வீட்டில் இருந்தபடியே ஓ.டி.டி., தளத்தில் எளிதாக காண முடிகிறது. அதில், உள்ள கேமிரா வேலைப்பாடுகளை ஆராய முடிகிறது. ஒளிப்பதிவு சார்ந்த புத்தகங்கள், இணையதளங்கள் நிறைய படிக்கிறேன்.
விவசாயி, ஒளிப்பதிவாளர்… எது பிடிக்கும்?
முன்னாள் எம்.எல்.ஏ., ஆக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவராக எனது அப்பா பழனிசாமி விட்டுச்சென்ற சேவையை தொடர்கிறேன். கட்சி சார்பற்ற விவசாயிகள் செயல்தலைவர், ‘ஏர்முனை’ இளைஞர் அமைப்பு மற்றும் நாராயணசாமி நாயுடு அறக்கட்டளை தலைவராக உள்ளேன். சூட்டிங் நேரம் போக, விவசாயிகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது, போராட்டம் மூலமாக தீர்வு காண்பதில் ஈடுபடுத்தி வருகிறேன். இதில், ஆத்மதிருப்தியும் உள்ளது. சினிமா – விவசாயம் சங்கம் இரண்டையும் எப்போதும் குழப்பி கொண்டதில்லை. விவசாயி, ஒளிப்பதிவாளர் ஆகிய இரண்டுமே, எனக்கு இரு கண்கள் போல.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *