Share on Social Media


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் நடிகர் விஜய் நடித்துப் பரவலான ரசிகர்களைக் கவர்ந்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘யூத்’ வெளியான நாள் இன்று (2002 ஜூலை 19).

இன்று விஜய் அடைந்திருக்கும் வளர்ச்சியும் அவருக்கு இருக்கும் பெருந்திரளான ரசிகர் பட்டாளமும் அவற்றால் அவருடைய திரைப்படங்கள் மீது உருவாகியுள்ள மிகப் பெரிய எதிர்பார்ப்பும் விஜய்யை அனைத்து வெகுஜன அம்சங்களையும் உள்ளடக்கிய பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளிவிட்டன. மாஸ் நாயகனாக, சமூகப் பிரச்சினைகள் மையம் கொண்ட கதைகளில் ஆக்ஷனுக்கும் மாஸ் அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட திரைக்கதையுடன்கூடிய படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. அவருடைய இன்றைய படங்களில் காதல், சென்டிமென்ட் போன்ற அம்சங்களும் இருக்கும் அவற்றுக்குக் குறைவான முக்கியத்துவமே அளிக்கப்படும். விஜய் நடிக்கும் திரைப்படங்களின் பிரம்மாண்ட வியாபார சாத்தியங்கள் அவரால் காதலையோ குடும்ப சென்டிமென்ட்டையோ மையப்படுத்திய குறைந்த பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளன.

ஆனால், 30 ஆண்டுகளை நெருங்கும் அவருடைய திரைப் பயணத்தை பல்வேறு காதல் படங்கள் அலங்கரித்துள்ளன. அவை அவருடைய திரைப் பயணத்தின் முக்கியத் திருப்புமுனைகளாகவும் அமைந்துள்ளன. ‘பூவே உனக்காக’ தொடங்கி ‘காவலன்’ வரை விஜய் நடித்த அழகான காதல் படங்களின் பட்டியல் நீளமானது. அவற்றில் விஜய் ஆக்‌ஷன் நாயகனாக நிலைபெறுவதற்கு முன் நடித்த கடைசி காதல் படம் என்று ‘யூத்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

‘யூத்’துக்குப் பிறகு வெளியான ’பகவதி’, ‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ ‘போக்கிரி’ போன்ற படங்கள் விஜய்யை ஒரு மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைபெறச் செய்தன. அதற்கு முன்பும் அவர் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னுடைய திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும் அதுவரையில் அவர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறுவதற்குப் பங்களித்தவை ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’லவ் டுடே’, ‘குஷி’ எனக் காதலை முதன்மைப்படுத்திய திரைப்படங்களே. ‘நேருக்கு நேர்’ போன்ற ஒருசில படங்களை ஆக்‌ஷன் படமாகவும் வகைப்படுத்தலாம் என்றாலும் அவை காதல் படங்கள் அளவுக்கு விஜய்க்குப் பெயர் வாங்கித் தரவில்லை.

’சிரு நவுதோ’ என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கம்தான் ‘யூத்’. ‘ப்ரியமுடன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான வின்சென்ட் செல்வா ’யூத்’ படத்துக்காக மீண்டும் விஜய்யுடன் இணைந்தார். ‘ப்ரியமுடன்’ படத்தில் காதலுக்காகக் குற்றவாளியாகும் எதிர்மறைத்தன்மை கொண்ட நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். ‘யூத்’ படத்தில் அதற்கு நேரெதிராக முழுக்க முழுக்க நல்லெண்ணமும் நேர்மறைச் சிந்தனையும் கொண்ட நாயகனாக நடித்திருப்பார். தன்னைச் சுற்றியிருப்பவர்ளுக்கும் தன்னை காயப்படுத்தியவர்களுக்கும்கூட தன்னுடைய நேர்மறை எண்ணங்களால் வழிகாட்டுபவராக வாழ்வைச் சிறக்க வைப்பவராக அமைந்திருந்த இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அதுவும் விஜய்யைப் போன்ற ரசிகர்களின் மனங்களுக்கு நெருக்கமான நடிகரைப் பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது?

இந்தப் படத்தில் பி.எஸ்சி ஹோம் சயின்ஸ் படித்து நவீன சமையல் கலை வல்லுநராக நடித்தார் விஜய். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்கு இப்படி ஒரு தொழில் அடையாளம் புதுமையானது. அதுவும் விஜய்யைப் போன்ற பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்கள் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது ஆண்கள் சமைப்பதும் அழகுதான் என்னும் சிந்தனையைப் பரவலாக்க உதவும்.

முறைப்பெண் (சிந்து) தன்னுடைய காதலுடன் சென்றுவிட்டதால் விஜய்க்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைப்படுவதுடன்தான் தொடங்கும் ‘யூத்’. அதற்குப் பிறகு சென்னைக்கு வந்து நாயகியை ( ஷாஹீன்) உயிருக்கு உயிராக நேசிப்பார். ஆனால் அந்தப் பெண் தன்னிடம் காதலைத் தெரிவிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கும் தருணத்தில் அவர் வேறொருவரை (யுகேந்திரன்) தனக்கு நிச்சயிக்கப்பட்ட வருங்காலக் கணவர் என்று அறிமுகப்படுத்துவார். இதுவரை தான் காதலித்த பெண் தன்னைக் காதலித்ததாக நினைத்தது தவறு என்று உணர்வார்.

16266799841138 Tamil News Spot

தமிழ் சினிமாவில் காதல் தோல்வியடைந்த நாயகர்கள் அதற்குக் காரணமான பெண்களை அடிக்க வேண்டும், வெட்ட வேண்டும், பெண் குலத்தையே சிதைக்க வேண்டும் என்றெல்லாம் பாட்டுப்பாடி பெண் வெறுப்பைத் தூண்டத் தொடங்காத காலகட்டம் அது. எதிர்பாராத சில செயல்களின் மூலம் தன்னைக் காதலிப்பதாகத் தவறான நம்பிக்கையை அளித்ததற்காக நாயகி மீது வருத்தமும் கொஞ்சம் கோபமும் இருந்தாலும் இந்தப் படத்தின் நாயகன் அவரைச் சொல்லாலும் செயலாலும் எந்த வகையிலும் துன்புறுத்த மாட்டார். அவருடைய நட்பு வட்டத்திலேயே இருப்பார். அவருக்கு நன்மையே செய்வார். தன்னை விட்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட முறைப்பெண் கணவனால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் வந்து நிற்கும்போது அவருக்கு நேர்மறை எண்ணங்களைப் புகட்டி வாழ்வில் நம்பிக்கைகொள்ளச் செய்வார். இறுதியில் நாயகிக்கு நிச்சயக்கப்பட்டிருந்தவர் கொடியவர் என்று தெரியவந்து அவரிடமிருந்து நாயகியைக் காப்பாற்றுவதும் நாயகி, நாயகனையே வாழ்க்கைத் துணையாக ஏற்பதும் வழக்கமான வெகுஜன சினிமா திருப்பங்கள்.

’யூத்’ படத்தின் மிகப் பெரிய பலம் இப்படிப்பட்ட நேர்மறைச் சிந்தனையும் நிதானமும் கொண்ட கதாபாத்திரப் படைப்பும் அதில் விஜய் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக்கொண்டு நடித்த விதமும்தான். அடுத்ததாக மணி ஷர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. ஹரிஷ் ராகவேந்திரா குரலில் ‘சக்கரை நிலவே’ என்னும் பாடல் அந்த கால இளைஞர்களின் குறிப்பாக ஒருதலைக் காதலில் இருந்தவர்களின் தேசிய கீதமானது. ஹரிஹரன் – ஹரிணி குரலில் அமைந்த ‘சகியே சகியே’, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-சுஜாதா இணைந்து பாடிய ‘அடி ஒன் இஞ்ச் டூ இஞ்ச்’ பாடலும் அழகான டூயட் பாடல்களாக இசை ரசிகர்களைக் கவர்ந்தன.

16266800281138 Tamil News Spot

இவற்றில் காதல் பாடல்களுக்கே ஏற்ற விஜய்யின் அலட்டிக்கொள்ளாத நடனமும் அழகான தோற்றமும் உடல் மொழியும் இந்தப் பாடல்களை கண்களுக்கும் விருந்தாக்கின. எஸ்பிபி தனித்துப் பாடிய மற்றொரு பாடலான ‘சந்தோஷம் சந்தோஷம்’ என்னும் பாடல் அவர் பாடிய விதம், வாழ்வு குறித்த நேர்மறைப் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைக்கும் அற்புதமான வரிகள், பாடல் அமைந்த சூழல், படமாக்கப்பட்ட விதம், விஜய் அதில் செய்யும் அழகான மேனரிஸங்கள் என அனைத்து விதங்களிலும் மிகச் சிறப்பாக அமைந்த பாடல். விஜய்யின் திரைவாழ்வில் அமைந்த ஆகச் சிறந்த பாடல்களில் இடம்பெறும் தகுதியைப் பெற்ற பாடல். சங்கர் மகாதேவன் பாடிய ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலுக்கு மட்டும் சிம்ரன் நடனமாடினார். புகழ்பெற்ற விஜய்-சிம்ரன் இணையின் அசத்தலான நடனத்துக்காகவும் கேட்கும் அனைவரையும் நடனமாடும் உத்வேகத்தை அளிக்கும் இசைக்காகவும் மாஸ் ஹிட்டானது இந்தப் பாடல். திரையரங்குகளில் குதூகலத்துடன் குத்தாட்டம் போட்ட ரசிகர்களை ரிப்பீட் கேட்க வைத்தது.

16266800091138 Tamil News Spot

விவேக்கின் நகைச்சுவைப் பகுதியும் படத்தின் வெற்றிக்குத் தக்க துணை புரிந்தது. குறிப்பாக எப்போதும் மது மயக்கத்தில் இருக்கும் வி.எம்.சி ஹனீபாவுடன் இணைந்து அவர் செய்த நகைச்சுவை (”இது தி.நகர்ல இருக்கற வடபழனி பிராஞ்ச்”) ரசிகர்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்தவை.

இப்படிப் பல காரணங்களுக்காக வெளியாகி இருபது ஆண்டுகளை நெருங்கும் ‘யூத்’ வெகுஜன சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது. விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த திரைப்படங்களில் ஸ்பெஷலான இடத்தையும் பெற்றிருக்கிறது.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *