Share on Social Media


இந்தக் கணக்கெடுப்பின்படி சீனாவின் மக்கள் தொகை 141 கோடி. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடு சீனாதான். இது எல்லோருக்கும் தெரியும். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா. இதுவும் தெரியும். 2011-ல் வெளியான இந்தியாவின் 15-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. இப்போதைய மதிப்பீடு 138 கோடி. இந்தியா, மக்கள் தொகையில் 2025-ம் ஆண்டு சீனாவைத் தாண்டிவிடும். இதில் கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. மாறாக, நாம் இந்தச் சூழலுக்குத் தயாராக வேண்டும்.

சீனா இப்போது இரண்டு பிரச்னைகளை எதிர்கொள்கிறது.

முதலாவதாக, குறைவான குழந்தைப் பிறப்பால், ஒருபுறம் உழைக்கும் வயதினர் குறைந்துவிட்டார்கள். மறுபுறம் மருத்துவ வளர்ச்சியால், மக்கள் நீடு வாழ்கிறார்கள். அதாவது முதியவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

இரண்டாவதாக, பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, பாலின சமத்துவம் குலைந்துவிட்டது. சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டு வரலாற்றை நெருங்கிப் பார்ப்பது இந்தப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு – முதல் கட்டம்

1949-ல் 54 கோடியாக இருந்த சீனாவின் மக்கள்தொகை 20 ஆண்டுகளில் 80 கோடியாக உயர்ந்தது. நாடு வறுமையில் இருந்தது. அப்போது சீனாவில் மட்டுமல்ல, உலகெங்கும் பல பொருளாதார வல்லுநர்கள் மக்கள்தொகைப் பெருக்கமே வறுமைக்குக் காரணம் என்று நம்பினார்கள். சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1970-ல் தொடங்கியது.

அரசு கருத்தடைச் சாதனங்களை ஊக்குவித்தது. தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டது. `தாமதமாகத் திருமணம், குறைவாகக் குழந்தைகள், பிள்ளைகளுக்கு இடையில் இடைவெளி’ என்கிற மூன்று அம்சங்கள் பரப்புரையில் பிரதானமாக இடம்பெற்றன. அது எல்லா கிராமங்களையும் சென்றடைந்தது. அதற்குப் பலன் இருந்தது. ஒரு பெண் சராசரியாகப் பிரசவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கருவள விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் 6-ல் இருந்து 3 ஆகக் குறைந்தது.

ஆனால், தலைவர்கள் திருப்தி அடையவில்லை. மனித நேயத்துடனும் அறிவியலின் துணையுடனும் அணுக வேண்டிய பிரச்னையில் அரசியல் சேர்ந்துகொண்டது. சீனப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய மா சே துங் 1976-ல் காலமானார். மாவோவின் தலைமையில் நடந்த பெரும் பாய்ச்சலும் (1958-1962), கலாசாரப் புரட்சியும் (1966-1976) முறையே பொருளாதார, கலாசாரப் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன.

Chinese Children - Parents

Chinese Children – Parents
AP Photo/Ng Han Guan

மாவோவின் மறைவுக்குப் பிறகு வந்த தலைவர்களுக்குத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. டெங் சியோ பிங் சீனாவைப் புரட்டிப் போடுகிற இரண்டு தீர்மானங்களை எடுத்தார்.

முதலாவது தீர்மானம் 1978-ல் எடுக்கப்பட்டது. சீனாவின் கதவுகளை அகலத் திறந்தார் டெங். அந்நிய முதலீடுகள் குவிந்தன. புதிய தொழிற் சமூகம் உருவாகியது. சீனாவின் பொருளாதாரம் வளர்ந்தது. பெரும் மக்கள் திரள் பட்டினியிலிருந்து மீண்டது.

இரண்டாவது தீர்மானம், செப்டம்பர் 25, 1980 அன்று அமலானது. அதுதான் ஒற்றைக் குழந்தைத் திட்டம். நாடெங்கிலும் 5 லட்சம் முழுநேர ஊழியர்களும், 8.5 கோடி பகுதிநேர ஊழியர்களும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சின்னஞ்சிறு கிராமத்தில் தொடங்கி நகரம் வரை என, நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணையும் கண்காணித்தார்கள். பெண்கள் கருத்தடை செய்து கொண்டவர்களா, கர்ப்பமாக இருக்கிறார்களா, குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா, மணமானவர்களா முதலான சகல விவரங்களும் கண்காணிப்புக்கு உள்ளாயின.

இரும்பு விதிகள்

விதிகள் இரும்பால் அடிக்கப்பட்டவை. மீற முடியாது. மீறுபவர்களின் கருக்கள் கலைக்கப்பட்டன. பெரும் அபராதங்கள் (ஆண்டு வருமானத்தின் பத்து மடங்கு) விதிக்கப்பட்டன. விதிவிலக்காகக் கிராமப்புறங்களிலும், சிறுபான்மை இனத்தவர்களிடத்திலும் இரண்டாம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டு இடைவெளி இருக்க வேண்டும். விதிகளைப் போலவே சலுகைகளும் இரும்பால் அடிக்கப்பட்டவை.

ஒரு புறம் நாட்டின் வளம் பெருகியது. உள்கட்டமைப்பு வளர்ந்தது. வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. மறுபுறம் அரசின் அதிகாரம் பெண்களின் கருப்பை வரை நீண்டது. அப்போது சிலர் நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றைக் குழந்தைத் திட்டம்தான் காரணம் என்று வியாக்கியானம் செய்தனர். அது பிழையானது என்பதைக் காலம் சொன்னது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *