Share on Social Media

டோக்கியோ: மூன்று குழந்தைகளுக்கு தாயான 38 வயது மேரி கோமிற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. இரண்டு சுற்றில் வென்ற போதும், குழப்பமான ஸ்கோரிங் முறையால் தோற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரது ஒலிம்பிக் பதக்க கனவும் தகர்ந்து போனது.

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரி கோம் களமிறங்கினார். 6 முறை உலக சாம்பியன் ஆன இவர் வழக்கமாக 48 கி.கி., எடை பிரிவில் பங்கேற்பார். 

லண்டன் ஒலிம்பிக்கில் 51 கி.கி., பிரிவில் வெண்கலம் வென்றார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் 48 முதல் 51 கி.கி., எடை கொண்ட வீராங்கனைகள் ‘பிளை வெயிட்’ பிரிவில் களமிறங்கினர்.

 முதல் போட்டியில் வெற்றி பெற்ற இவர், காலிறுதிக்கு முந்தைய ‘ரவுண்டு–16’ போட்டியில், 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கொலம்பியாவின் வாலன்சியா விக்டோரியாவை 32, சந்தித்தார். ‘விசில்’ ஊதியவுடன் பாய்ந்து வந்த வாலன்சியா, மேரி கோம் மீது தாக்கினார். இருவரும் வார்த்தை மோதலிலும் ஈடுபட்டனர். இருப்பினும் முதல் சுற்றில் 1–4 என தோற்றார் மேரி கோம். 

பின் சுதாரித்துக் கொண்ட மேரி கோம், அடுத்த இரு சுற்றில் (3–2, 3–2) வெற்றி பெற்றார். இருப்பினும் முதல் சுற்றில் அதிக முன்னிலை பெற்றதன் அடிப்படையில் வாலன்சியா வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஒருவேளை 2 அல்லது 3 வது சுற்றில் 4–1 என கைப்பற்றி இருந்தால் மேரி கோம் வென்றிருக்கலாம். 

 

போட்டி எப்படி

* தலா 3 நிமிடங்கள் என மூன்று சுற்றுகள் நடக்கும். 

* முகம், இருபக்க தலையில் ‘பன்ச்’ விட வேண்டும்.

* அம்பயர் எச்சரித்தால் புள்ளி குறைக்கப்படும். 

* இரு சுற்றுக்கு இடையே, 1 நிமிட இடைவெளி தரப்படும். 

* மூன்றில் இரு சுற்று வென்றவர், வெற்றியாளர் ஆவார். இருப்பினும் நடுவர் முடிவு இறுதியானது. 

 

நடுவர் கணிப்பு

குத்துச்சண்டையில் வெளிப்படையான புள்ளி வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட பின், மேடையை சுற்றி ஐந்து நடுவர் அமர்ந்திருப்பர். 

* ஒவ்வொருவரும் தலா 10 புள்ளி வழங்குவர். வென்றவருக்கு 10, தோற்றவருக்கு 9 அல்லது 8 கிடைக்கும். 

 

நடந்தது என்ன

மேரி கோம் விஷயத்தில் முதல் சுற்றில் வாலன்சியாவுக்கு 10, 01, 9, 10, 10 என கிடைத்தது. மேரி கோம் 9, 9, 10, 9, 9 என பெற, அதிக 10 புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் வாலன்சியா 4–1 என வென்றார். 

* இரண்டாவது சுற்றில் மேரி கோம் (9, 9, 10, 10, 10), வாலன்சியாவை (10, 10, 9, 9, 9) முந்தி, 3–2 என வென்றார்.

* மூன்றாவது சுற்றிலும் மேரி கோம் (9, 10, 10, 9, 10), வாலன்சியாவை (10, 9, 9, 10, 9), 3–2 என வென்றார்.

 

பெண்களுக்கு சக்தி அதிகம்

முடிவை அறிவித்ததும் மேரி கோம் கண்களில் கண்ணீர் கொட்டியது. பின் சிரித்துக் கொண்டே இவர் கூறுகையில்,‘‘முதல் சுற்றில் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்று தான் இருவரும் விளையாடியதாக நினைத்தேன். அடுத்த இரு சுற்றுக்களை வென்றேன். ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியும். அதற்கான திறமை என்னிடம் உள்ளது. பொதுவாக மணிப்பூர் மக்களுக்கு போராடும் குணம் அதிகம். பெண்களுக்கு சக்தி சற்று கூடுதலாக உள்ளது,’’ என்றார்.

 

ஓண்ணுமே புரியல

மேரி கோம் பயிற்சியாளர் சோட்டோ லால் கூறுகையில்,‘‘ உண்மையில் எப்படி புள்ளிகள் வழங்குகின்றனர் என்றே புரியவில்லை. மேரி கோம் 1–4 என முதல் சுற்றில் எப்படி தோற்றார் எனவும் தெரியவில்லை,’’ என்றார்.

 

காலிறுதிக்கு முன்னேறினார் சதிஷ் குமார்

ஆண்களுக்கான குத்துச்சண்டை ‘சூப்பர் ஹெவிவெயிட்’ (+91 கி.கி.,) எடைப்பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார், ஜமைக்காவின் ரிகார்டோ பிரவுன் மோதினர். இதில் அபாரமாக ஆடிய சதிஷ் 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் (ஆக. 1) சதிஷ், நடப்பு உலக, ஆசிய சாம்பியன் உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோவை சந்திக்கிறார்.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *