Share on Social Media


கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி. அப்போது, வீரமணி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்திருந்ததாகவும், அதுதொடர்பான ஆதாரங்களுடன் புகாரளித்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று காலை 10.50 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘முன்னாள் அமைச்சர் வீரமணி தனது வேட்பு மனுவில், வருமான வரியின் ‘பான்’ எண்ணைத் தவறாக குறிப்பிட்டிருந்தார். அந்த பான் எண்ணுடன் வீரமணியின் சொத்து விவரங்கள் ஒத்துப்போகவில்லை. எனவே, வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வீரமணி மீதான புகார் குறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிடுமாறுக்கூறி அவர்கள் கொடுத்த மனுவை முடித்து வைத்துவிட்டோம். 1966-ஆம் ஆண்டுக்கு முன்புவரை வேட்பு மனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகாரளித்துவந்தது. அதன்பின், யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையமும், முன்னாள் அமைச்சர் வீரமணியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

இதையடுத்து, வீரமணிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வீரமணியிடம் விளக்கம் கேட்க அவரின் செல் நம்பரைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்துப் பேசிய வீரமணியின் உதவியாளர், ‘‘கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அண்ணன் பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றுகூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *