Share on Social Media


வேளாண் பொறியாளர் பாளையங்கோட்டையில் உழவர் சாலையில் வேளாண் பொறியியல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர், முத்துக்குமாரசாமி. மனைவி மற்றும் இரு மகன்களுடன் திருமால் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முத்துக்குமாரசாமி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பணியில் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்ட அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பணியாற்றியபோது, நெல்லை வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த ஏழு தற்காலிக ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்து கொடுக்குமாறு அமைச்சரும் உயரதிகாரியும் நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது.

Also Read: முத்துக்குமாரசாமி… கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

அப்போதைய வேளாண்துறை அமைச்சராக இருந்த `அக்ரி’ கிருஷ்ணமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து அப்போதைய முதல்வரான மறைந்த ஜெயலலிதா நீக்கினார்.

முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தது. அதைத் தொடர்ந்து, அவருக்கு தொலைபேசி வாயிலாக நெருக்கடி கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

MKS 2 Tamil News Spot
நீதி கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. அதை எதிர்த்து முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முத்துக்குமாரசாமியின் உறவினரும் வழக்கறிஞருமான பிரம்மா,“நேர்மையாகச் செயல்பட்டதற்காக முத்துக்குமாரசாமியை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள். அவரது மரணம் நடந்து ஆறு ஆண்டுகளாகியும் அவரது குடும்பத்தினர் இன்னும் அந்த துயரத்தில் இருந்து விடுபடவில்லை.

bhrama 1 Tamil News Spot
வழக்கறிஞர் பிரம்மா

வேளாண்மைத் துறையில் நடந்த பணியாளர் நியமனம் தொடர்பாக பணம் வசூலித்துக் கொடுக்குமாறு நிர்ப்பந்தித்ததுடன் மிரட்டியிருக்கிறார்கள். இதில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களின் டார்ச்சர் காரணமாகவே தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த `அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கிறோம். `எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே வழக்கிலிருந்து முதலாவது குற்றவாளியை நீக்கியது செல்லாது’ என நாங்கள் முறையிட்டுள்ளோம்.

சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களாகக் கிடப்பில் இருக்கும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் எங்களுக்கு முழுமையாக நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக ஒவ்வொரு வருடமும் நான் நெல்லை மாநகரில் போஸ்டர்களை ஒட்டி வருகிறேன். முதலாம் ஆண்டில், நெல்லையப்பா நீதி சொல்லப்பா… சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடு!’ என்று போஸ்டர் ஒட்டியதற்காக போலீஸார் வழக்குத் தொடர்ந்தார்கள். ஆனால் நீதிமன்றம் என்னை வழக்கில் இருந்து விடுவித்தது.

MKS 3 Tamil News Spot
பிரம்மா ஒட்டியிருக்கும் போஸ்டர்

இந்த ஆண்டும் வழக்கம் போலவே நான் போஸ்டர் ஒட்டியுள்ளேன். தற்போது தேர்தல் நேரமாக இருப்பதால் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தெரிவித்தார். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பதாக இந்த வழக்கு மாறிவிடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *