Share on Social Media


முதுமை எப்பொழுது ஆரம்பமாகிறது?

இதற்கு பதில் காண்பது சற்று கடினம். குழந்தைப் பருவம், இளமைப் பருவம் முதலானவையைப் போல் முதுமையும் ஒரு பருவம்தான். ஆனால், ஒருவருடைய வாழ்க்கையில் அது எப்பொழுது குறுக்கிடுகிறது என்பது யாருக்கும் தெரியாது என்றாலும் முதுமைப் பருவத்தின் ஆரம்ப நிலையை நிர்ணயிக்க வேண்டிய ஒரு காட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவருடைய வயதை வைத்து அவர் முதியவரா இல்லையா? என்று கூற முடியுமா என்று பார்த்தால் அது சாத்தியப்படவில்லை. ஏனென்றால் ஐம்பது வயதுடையவர் வயதளவில் இளமையாக இருந்தாலும் தோற்றத்தில் எழுபது வயதானவரைப் போல காட்சியளிக்கிறார். மாறாக எழுபது வயது முதியவர் நாற்பது வயது இளைஞரை போல் மிடுக்குடன் தோற்றமளிப்பார்.

‘The man is as old as he feels, and a women is as old as she looks’ – Proverb

‘ஒரு ஆணின் வயது அவருடைய மனதைப் பொறுத்தும், ஒரு பெண்ணின் வயது அவருடைய தோற்றத்தைப் பொறுத்தும் அமைகிறது’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உள்ளது.

aging

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒருவர் எப்பொழுது முதுமையடைகிறார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம். அதாவது முதுமை என்பது பொதுவாக தோற்றத்தைப் பொறுத்தும் இல்லை, எண்ணத்தைப் பொறுத்தும் இல்லை, மேலும் வயதைப் பொறுத்தும் இல்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.

எனவே, ஒருவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் வயதை கணக்கிட்டு நம் நாட்டில் முதுமைக் காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது 58 வயதிலிருந்து 60 வயது வரை ஓய்வு பெறுவதால், 60 வயதிற்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என்று தற்பொழுது எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், இவ்வயது வரம்பு நிர்ணயம் நிரந்திரமானது இல்லை. வாழும் காலங்கள் அதிகரிக்க அதிகரிக்க வயது வரம்பும் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆகவே, விரைவில் நமது அரசு வயது வரம்பை 65 ஆக உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

முதுமையின் ஆரம்பகால சூழலைப் பற்றி தற்பொழுது ஒரு புதிய செய்தி வந்துள்ளது. ஒரு கரு எப்பொழுது தன் தாயின் கருவறையில் உருவாகிறதோ, அன்றே அந்தக் கரு முதுமையின் முதற்படியில் காலடி எடுத்து வைத்து விட்டதாக கருதப்படுகிறது என ஆராய்ச்சி கூறுகிறது!

முதுமை ஒரு முழு நிலவா அல்லது தேய்பிறையா?

முதுமை ஒரு முழு நிலா

முதுமைப் பருவம் என்பது கடவுள் கொடுத்த வரம். எல்லோருக்கும் இந்த அரிதான வரத்தைக் கடவுள் கொடுத்து விடுவதில்லை. இந்தப் பருவத்தை எட்டும் முன்பே சிலர் இறந்து விடுகிறார்கள். நீண்ட ஆயுளைப் பெற்று முதுமையை ஆண்டு அனுபவித்து வாழ்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சிலருக்கு மட்டுமே இந்த சிறப்பு வாய்ந்த முதுமைப் பருவத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. பேரக் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலையில் சேர்ந்து தங்கள் குடும்ப வாழ்வைத் துவக்குவதைப் பார்த்து மகிழும் பெருமிதம் இங்கு எத்தனை பேருக்கு வாய்க்கிறது! இந்த இனிய பருவத்தில்தான், மணி விழா, பவள விழா போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளால் நெஞ்சம் நெகிழ்வதைக் காண முடிகிறது.

எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி, சீரான உடல்நலம், ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, தியானம் மற்றும் உண்மையான உறவுகள் இவற்றோடு சற்றே பொருளாதார வசதியும் இருந்தால் முதுமைப் பருவம் ஒரு முழுநிலவே. இன்னும் சிலருக்கோ?

முதுமை ஒரு தேய்பிறை

முதுமையில் வறுமை கொடியது, தனிமை கொடியது, பல நோய்களின் தாக்கம் அதைவிடக் கொடியது என்பது தெரிந்ததே. ஆனால் இவற்றில் எல்லாவற்றையும் விட மிகவும் கொடியது என்ன தெரியுமா? அதுதான் முதுமையில் இயலாமை, அதாவது வயதான காலத்தில் தனது தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது.

வீட்டில் விசாலமான இடம் இருந்தாலும் இளைய தலைமுறையினர் நெஞ்சங்களில் இடமில்லாமல் நிராகரிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம். தங்கள் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராத பெற்றோர்களை சுமையாக பலர் நினைக்கிறார்கள். இப்படி நிராகரிக்கப்படும் பல முதியவர்கள் இதையெல்லாம் சகித்துக் கொண்டு இன்னமும் வாழ வேண்டுமா? என்கிற ஆசை அவர்களுக்கு அறவே இல்லை. ஆனால், ‘ஆண்டவனாகப் பார்த்து தேதி குறித்து அழைக்கும் வரையில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்வோம்’ என காலத்தைக் கடத்தும் கட்டாய நிலைக்கு பல முதியவர்கள் ஆட்படுகிறார்கள்.

மகனின் பொய்யான அன்பான பேச்சாலும், பயமுறுத்தலினாலும் மனம் மாறி தன் சொத்துக்களை எல்லாம் வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு தனி மரமாக எவ்வித உதவியும் இன்றி நடுரோட்டில் அல்லது முதியோர் காப்பகங்களில் முடங்கிய நிலையில் ஆதரவற்று நிற்கும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிமாகிக் கொண்டே போகிறது.

பிணிகள், தனிமை, வறுமை, இயலாமை மற்றும் உறவினர்களின் புறக்கணிப்பு போன்ற பல தொல்லைகளோடு காலத்தை கடத்தும் முதியவர்களுக்கு முதுமை ஒரு தேய் பிறையே!

British Geriatric Golden Tamil News Spot
British Geriatric Golden Award for Dr V S Natarajan (Geriatric Care)
Dr B C Roy award Tamil News Spot
Dr B C Roy Award for Dr V S Natarajan (Geriatric Care)
NAK 2624 Tamil News Spot
Padmasri Award for Dr V S Natarajan (Geriatric Care)

முதுமை ஒரு திரிசங்கு

முதுமைப் பருவம் ஒரு சிலருக்கு மட்டுமே முழு நிலவாக- பூங்காற்றாக அமைகிறது. வேறு சிலருக்கோ தேய்பிறையாக – புயலாக முதுமை அமைகிறது. முதுமைப் பருவம் ஒருவருக்கு எவ்வாறு அமையும் என்பதை அறுதியிட்டு யாராலும் கூற இயலாது. ஆகையால் முதுமைப் பருவம் சுகமாக இருக்குமா அல்லது சுமையாக இருக்குமா என்று கூறுவது மிகவும் சிரமம். இங்கே தான் ‘தலைவிதி’ என்ற சொல் சரியாகப் பொருந்துகிறது. மொத்தத்தில் பலருக்கு முதுமைப் பருவம் ஒரு திரிசங்கு நிலையாகத்தான் அமைந்து விடுகிறது.

– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

முதியோர் நல மருத்துவர்

டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னைSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.