30 வருடங்களுக்கு முன்பு, சென்னை அரசு பொது மருத்துவமனையிலுள்ள முதியோர் நல மருத்துவ பிரிவில் நான் பணியாற்றும் பொழுது நான் பெற்ற முதல் நாள் அனுபவம் என் மனதில் இன்னமும் பசுமரத்தாணிப் போல் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு:
அரசு பொதுமருத்துவமனை; முதியோர் மருத்துவமனைப் பிரிவு; காலை 10:00 மணி: ஒரு நோயாளியிடம் சென்றேன்; உடனே அவர் என் வலக்கையை இறுகப்பிடித்துக் கொண்டு, ‘டாக்டர் சார்! எனக்கு 63 வயதாகிறது; ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், நெஞ்சுவலி, மூட்டுவலி, மலச்சிக்கல், தூக்கமின்மை இவ்வாறு பல நோய்களினால் நான் மிகவும் துன்பப்படுகிறேன்; இவ்வயதான காலத்தில் இவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; என் நோய்களுக்குத் தக்க சிகிச்சையளித்து, நீங்கள்தான் என் வேதனையைப் போக்க வேண்டும்’ என்றார். ஆம்! அவர் கூறிய நோய்கள் எல்லாம் அவருடலைத் தாம் வாழும் இடங்களாகக் கொண்டிருந்தன. முதுமையில் இவ்வாறு பல நோய்களும் ஒரே சமயத்தில் வர வாய்ப்புகள் மிகுதி. அதனால்தான் நம் முன்னோர் முதுமைப் பருவத்தை ‘நோய்களின் மேய்ச்சற்காடு’ என்றனர்.
அவருக்கு வேண்டிய சிகிச்சைகளுக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அடுத்த நோயாளியிடம் சென்றேன். அவர் ஏற்கனவே என் வருகையைப் பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எழுபது வயதினை எட்டிப் பிடித்த பெண்மணி அவர். குரலிட்டு அழுவதற்குக்கூட அம்மூதாட்டிக்குச் சக்தி இல்லை; அவரெங்கே வேலை செய்து பிழைப்பது?
அவர் வரலாறு என் கண்களிலும் நீரை வரவழைத்தது; உலகியலையும் எனக்குத் தெரிவித்தது; அம்மூதாட்டிக்கு உற்றார் உறவினர் இல்லாதிருக்க வழியில்லை. சொத்தோ, கையில் நான்கு காசுகளோ இல்லை; அதனால், சொந்த பந்தமெல்லாம் பறந்தோடி விட்டன! நிலபுலனும், வீடுவாசலும், நகைநட்டும் இருந்திருந்தால் பெருங்கூட்டமே அம்மூதாட்டியை ‘நான், நீ’ எனச் சூழ்ந்து கொண்டிருக்குமே!
‘அம்மூதாட்டி ஏன் முதியோர் இல்லத்திற்குப் போக வேண்டும்?’ எனும் வினா என்னுள்ளத்தில் எழுந்து, என்னை அலைக்கழித்தது. ‘பொறு! பார்க்கலாம்!’ எனக் கூறி அடுத்த நோயாளியிடம் சென்றேன்.
அவர் ஒரு புற்றுநோயாளி; அவருக்கு வயது 67; சிகிச்சை பயனளியாத நிலை; என்னைக் கண்டதும் அவர் கண்களில் நீர் கசிந்தது; ‘டாக்டர்! என்னால் முதுகு வலியினைத் தாங்க முடியவில்லை; எந்த மருந்தும் ஊசியும் என் வலியைக் குறைப்பதாய்த் தெரியவில்லை; என் நோய் இனி குணமாகாது என்பது எனக்கும் தெரிந்துவிட்டது; நான் இறப்பது உறுதி; வினாடிக்கு வினாடி நான் படும் துன்பம் சொல்லி முடியாது; செத்துச் செத்துப் பிழைக்கிறேன்; இதனைவிட ஒரே அடியாகச் செத்துவிடுவதே மேல்; அதனால் அருள்கூர்ந்து நீங்கள் எனக்கோர் உதவியைச் செய்ய வேண்டும்; ஏதாவதோர் ஊசியைப் போட்டு என் நோய்க்கும் எனக்கும் ஒரு முடிவைக் கொடுங்கள்; ஒரே அமைதியைக் கொடுங்கள்; உங்களுக்கு அது பெரும் புண்ணியமாக இருக்கும்’ என என்னிரு கைகளையும் தம் இரு கைகளால் பிடித்துக் கொண்டு கதறினார். அவர் வேதனை எனக்கும் தெரியாமலில்லை; புற்றுநோய் மிக விரைவாகப் பரவி, அவரது முதுகெலும்பினைப் பெரிதும் பாதித்திருந்தது; அவர் துடிப்பிலும் பொருள் இல்லாமல் இல்லை. நோயாளிக்குச் சில ஆறுதல் மொழிகளைக் கூறினேன்; வலி குறைய மாற்றுமருந்து ஒன்று கொடுக்க ஏற்பாடு செய்தேன்.
‘இப்புற்று நோயினைத் தொடக்க நிலையிலேயே கண்டு, தக்க சிகிச்சையளித்திருந்தால் பயன் தந்திருக்கும் அல்லையா? முதுமையில் புற்றுநோய் மருந்துகளுக்கும் கட்டுப்படாதா?’ எனும் எண்ண அலைகளோடு பிற நோயாளரையும் கவனித்துவிட்டு என்னிருப்பிடத்திற்குச் சென்றேன்.
ஒருநாள் மாலை 7:00 மணிக்கு ‘ஆதிபராசக்தி கிளினி’க்கிற்குத் திருவேங்கடம் என்பவர் வந்தார். ‘ஐயா! எனக்கு வயது அறுபது; எனக்கு எந்நோயும் இல்லை; நாள்தோறும் காலையில் ஒருமணி நேரம் நடக்கிறேன்; மாலையில் கடற்கரைக்கோ, நண்பர் வீட்டிற்கோ, திரைப்படத்திற்கோ, நாடகத்திற்கோ செல்கிறேன்; நன்றாய் உணவு உட்கொள்கிறேன்; உறங்குகிறேன். ’
நீங்கள் ஒரு முறை தொலைக்காட்சியில், ‘முதுமைக்காலத்தில் ஒருவர்க்கு ஒரு நோயும் இல்லாவிடினும் காலமுறைப்படி பரிசோதனை (Periodic health checkup) செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினீர்கள்; அதனால் வந்திருக்கிறேன்’ என்றார்.

அவர் கூறியவை முற்றிலும் உண்மை. அவரைப் பரிசோதித்த போது அது தெரியவந்தது. அவர் வயது முதுமையைக் காட்டினும், உடலும் உள்ளமும் இளமை மிடுக்குடனே திகழ்ந்தன. அறுபதாம் வயதிலும் முப்பது வயதுடைய ஓரிளைஞரைக் கண்டு நான் பெரிதும் வியந்தேன்.
முதுமைப் பருவத்தில் சிலருக்கு வரும் பிரச்னைகளை மேலே கோடிட்டுக் காட்டினேன். முதுமை அவ்வளவு கொடியதா? எல்லாருமே முதுமையால் துன்பப்படத்தான் வேண்டுமா? அதனைத் தவிர்க்க முடியாதா? தவிர்ப்பதற்குரிய வழி யாது? திருவேங்கடத்திற்கு மட்டும் அறுபது வயதிலும் இளமைத் துடிப்பு எவ்வாறு இருந்தது?
நடுத்தர வயதிலிருந்தே சில வழிமுறைகளை பின்பற்றினால். முதுமையை சுகமாக அனுபவிக்க முடியும். அதற்கு என்ன வழிமுறைகள் என்பதை பற்றி பின்னர் தெரிந்து கொள்ளலாம்.
– பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
முதியோர் நல மருத்துவர்
டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை