Share on Social Media


ஸ்டாலின்
ஸ்டாலின்

100 நாட்கள் என்பவை எந்த ஒரு ஆட்சியையும் முழுதாக மதிப்பிட போதுமான கால அளவு இல்லை. இருந்தாலும், ஒரு ஆட்சி மீதமிருக்கும் நாட்களில் எந்த திசையில் செல்லப்போகிறது என்பதை, அந்த 100 நாட்களை வைத்து மதிப்பிட்டு விட முடியும்.

முதல்வர் ஸ்டாலினின் முதல் 100 நாட்களை ஆய்வுப்பூர்வமாக மதிப்பிட்டு, 10 தலைப்புகளில் `கனவு தமிழ்நாடு இயக்கம்’ தொகுத்திருக்கிறது. அந்த தொகுப்பே இங்கு வழங்கப்பட்டிருக்கிறது…!

கனவு தமிழ்நாடு இயக்கம்

கனவு தமிழ்நாடு இயக்கம்

ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்டாலினின் 100 நாட்களில் நிறைய அறிவிப்புகள் வந்திருக்கின்றன. இந்த அறிவிப்புகளையெல்லாம் தாமதமோ சமரசமோ இல்லாமல் அவர் செயல்படுத்தி காட்டவேண்டும்! அது மட்டும் நடந்தால், ‘அனைத்து அளவீடுகளிலும் முதன்மை மாநிலம்’ என தமிழ்நாடு தலைநிமிர்த்தி சொல்ல முடியும்!

1. கொரோனா காலத்தில் முன்னுதாரண முதலமைச்சராக செயல்பட்டார்!

என்னென்ன செய்தார்?

தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை போர்க்கால அடிப்படையில் பெற்று ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்தார்.

உலக வர்த்தக மையம் உள்ளிட்ட பல அரசு கட்டடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி, படுக்கை வசதிகளை அதிகப்படுத்தினார்.

பேரிடர் நேரத்தில் மக்களின் கையில் ரொக்கப்பணம் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டு, 4,000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதி வழங்கினார்.

கொரோனா தொடர்பான மருத்துவ தேவைகளை ஒருங்கிணைக்க முக்கிய மாவட்டங்களில் ‘வார் ரூம்’ திறந்தார். அந்த வார் ரூமுக்கு நேரில் சென்று பணிகள் சரியாக நடப்பதை உறுதி செய்தார்.

கொரானா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் பல்லாயிரக்கணக்கில் பணம் பெற்றுவந்த சூழலில், ‘தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும்’ என்று உத்தரவிட்டார்.

இரவு பகல் பாராமல் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். இதனால் அவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை, இழப்பீடுகள் ஆகிய பலன்கள் கிடைத்தன.

கவச உடையில் முதல்வர் ஸ்டாலின்

கவச உடையில் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்தார்.

கொரானா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.

லாக் டெளனில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கினார். அந்தப் பொருட்கள் தரமாக கிடைப்பதையும் உறுதிப்படுத்தினார்.

வேலைப்பளுவால் விரக்தியில் இருந்த செவிலியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு 15,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளித்தார்.

முக்கியமான தருணத்தில், தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 1220 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அவர்களின் ஊதியத்தையும் 15,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாயாக உயர்த்தினார்.

முதல்வர் ஸ்டாலின் கோவை விசிட்..  'கோவை புறக்கணிப்பு' பிரசார பின்னணி தகவல்கள்!

2. கல்வி மற்றும் மருத்துவம்… என்னனென்ன செய்தார்?

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, 58,000 அரசுப்பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

டிஜிட்டல் வகுப்புகள் கட்டாயமாகி வரும் சூழலில், கல்வி தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அடித்தட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் ஐடிஐ கல்லூரிகள் ஜூன் மாதம் முதல் திறக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. உடனே, அனைத்து மாணவர்களும் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய உத்தரவு போட்டார்.

பயிற்சி மற்றும் முதுகலை மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20,000 ரூபாயாக உயர்த்தினார்.

மக்களைத் தேடி மருத்துவம் 
 - முதல்வர் ஸ்டாலின்

மக்களைத் தேடி மருத்துவம்
– முதல்வர் ஸ்டாலின்

‘இனி மருத்துவமனைகளை தேடி மக்கள் வரவேண்டியதில்லை. மக்களைத் தேடி மருத்துவம் வரும்’ என்று அறிவித்து, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை, தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான கிருஷ்ணகிரியில் வைத்து தொடங்கினார்.

இந்திய மருத்துவத்துறையில் ஒரு முன்மாதிரி முன்னெடுப்பாக, சென்னை ரேலா மருத்துவ நிறுவனத்தில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

உலகம் முழுக்க இருந்து மக்கள் சென்னையை நோக்கி மருத்துவ சேவைக்காக வரும் நிலையில், தென் சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை கட்டும் முடிவை வெளியிட்டார்.

பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தார்.

3.சமூகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுபவர்களாக இருக்கும் பெண்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வ செயல்கள்!

என்னென்ன செய்தார்?

பணிக்கும், கல்லூரிக்கும் செல்லும் பெண்களின் அன்றாடச்செலவை குறைக்கும் வகையில், ‘நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்’ திட்டத்தை கொண்டுவந்தார். (பின்னர் இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுப்பாலினத்தோருக்கும் விரிவுபடுத்தப்பட்டது)

முதலமைச்சரின் பயணங்களின் போது சாலையோரங்களில் கால்கடுக்க நிற்கும் பாதுகாப்புப் பணிகளில் இருந்து, பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்தார்.

ஸ்டெல்லா மேரீஸ், குயின் மேரீஸ் போல சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமை போராளியான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தெரிவித்தார்.

நிதிநிலை கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின்

நிதிநிலை கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின்

‘பெண்களை கோயில்களுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டோம்’ என்று பழமைவாதிகள் கூப்பாடு போடும் நாட்டில், முதன்முறையாக ‘பெண்களையும் அர்ச்சகராக்குவோம். அதற்காக அவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று துணிச்சலாக அறிவித்தார்.

வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மகளிருக்கு பெரும்பிரச்சனையாக இருப்பது தங்குமிடம். இந்தப் பிரச்னையை தீர்க்க, வேலைக்கு செல்லும் மகளிர் விடுதிகள் அமைக்க நடவடிக்கையை தொடங்கினார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக 11 பெண் மாவட்ட ஆட்சியர்களை நியமித்தார். இவர்களில் பெரும்பாலானோர் வேகமும் செயல்திறனும் கொண்ட இளம் அதிகாரிகள்!

பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய 2756 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். கூடுதலாக 20,000 கோடி ரூபாய் கடன் வழங்கவும் அறிவிப்பு வெளியிட்டார்.

4. தமிழனின் பண்பாட்டை உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டை பேணிக்காப்பதற்காக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்!

என்னென்ன செய்தார்?

அரசுப்பேருந்துகளில் மீண்டும் திருக்குறள் பலகை வைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். இம்முறை குறளுக்கு கீழே குறளின் பொருளும் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்க கையெழுத்திட்டார்.

எழுத்தாளர்களுக்காக இலக்கிய மாமணி விருதை அறிமுகம் செய்தார். எழுத்தாளர்களுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

இயல், இசை, நாடகக் கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழறிஞர் இளங்குமரனார் மறைந்தபோது, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளில் முன்பில்லாத அளவுக்கு வேகம் காட்டினார். என்னென்ன கண்டுபிடிப்புகள் நடக்கின்றன என்று மக்கள் அறிந்துகொள்ளவும் வழிசெய்தார்.

தலைமைச் செயலகம் - தமிழ் வாழ்க

தலைமைச் செயலகம் – தமிழ் வாழ்க

‘சால்வைகள் வேண்டாம். புத்தகங்களை அன்பளிப்பாக அளியுங்கள்’ என்ற அறிவிப்பை முதலமைச்சரான பின்பும் பின்பற்றினார். அப்படி அன்பளிப்பாக வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு மடைமாற்றினார்.

டெல்லிக்கு சென்று சோனியா காந்தியை சந்தித்தவர், ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a civilization’ புத்தகத்தை பரிசளித்தார். இதன் மூலம், தமிழனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று இந்திய அளவில் கவனம் பெற்று அதிக பிரதிகள் விற்றது.

தலைமைச் செயலகம் மற்றும் ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க’ பலகைகள் வைத்து, தமிழ் மொழியை எல்லோரும் தலையுயர்த்தி பார்க்க வைத்தார்.

தமிழ்நாட்டின் சில கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறையில் இருந்தாலும், அரசின் சார்பாக எந்த திட்டமும் இல்லாமல் இருந்தது. அதைப் போக்க ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற புரட்சிகர திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கினார்.

கோயில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல. அவை பண்பாட்டுச் செல்வங்கள். எனவே, தமிழ்நாட்டின் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணியை தீவிரமாக முன்னெடுத்தார்.

5.பொதுவாக அரசுகள் வெளிப்படையாக சமூக சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில்லை. ஆனால், ஸ்டாலின் துணிச்சலாக சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தார்.

என்னென்ன செய்தார்?

பாடப்புத்தகத்தில் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்கினார். அது குறித்து விமர்சனங்கள் வந்தபோதும், கண்டுகொள்ளாமல் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

இன்றும் குழந்தை திருமணங்கள் பெருமளவில் நடக்க சரியான கண்காணிப்பின்மையே காரணம். எனவே, குழந்தை திருமணங்களை கண்காணிக்கவென்று தனியாக ஒரு குழுவை அமைத்தார்.

கல்வியே கடவுள். எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் கல்லூரிகள் கட்டும் முக்கியமான சமூக சீர்திருத்த முடிவை எடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சார்பதிவாளர் அலுவலங்களில் பதிவர்கள் அரசர்களைப் போல நடந்துகொண்டிருந்தார்கள். அதாவது, மக்களுக்கு மேலே அரியணையில் அமர்ந்திருப்பதைப் போல இருக்கைகள் அமைத்து அமர்ந்திருந்தார்கள். இந்த ஆணவ மரபை உடைத்தெறியும் நோக்கில், பதிவர்கள் சமதளத்தில் அமர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

செருப்பு என்ற சொல்லே சமூகத்தில் கீழ்த்தரமாக பார்க்கப்படுகிறது. ‘செருப்பால் அடிப்பேன்’ என்கிறார்கள். ‘செருப்பு தைக்கக்கூட லாயக்கு இல்லை’ என்கிறார்கள். இந்த சூழலில், செருப்பு தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து, புரட்சி செய்தார்.

6. உறுதியான, புத்திசாலித்தனமான, கருணையான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகமே சிறந்த நிர்வாகம். அதில் ஸ்டாலின்…!

என்னென்ன செய்தார்?

திமுகவைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்க அவர் பணித்தார். அவர்கள் சமூகவலைதளக் கணக்குகள் தொடங்கி, தொடர்ச்சியாக மக்கள் பிரச்னைகளை கேட்டு தீர்வு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியை விட, ஸ்டாலினின் ஆட்சியில் அதிகமாக கொரோனா நிவாரண நிதி திரண்டது. அதற்காக அவர் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தார். அப்படி திரட்டப்பட்ட நிவாரண நிதியின் விவரங்கள் அனைத்தும் இணையத்தில் ஒளிவுமறைவில்லாமல் வெளியிடப்பட்டது.

மக்களின் சொத்துகளாக இருக்கும் கோயில்களின் சொத்து விவரங்கள் மக்களுக்கு தெரியாமலேயே இருந்தது. ஆனால், ஸ்டாலின் கோயில் சொத்து விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றினார்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்திற்கென்று தனித்துறையை உருவாக்கினார். அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாகவும் மாற்றினார்.

‘தேர்தல் முடிந்ததும் தேவை முடிந்தது’ என்று நிறைய தலைவர்கள் கிளம்பி விடுவார்கள். ஆனால் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தில் பெற்ற ஆயிரக்கணக்கான மனுக்களுக்கு முடிந்தவரை தீர்வு கண்டார். இதன் மூலம், 1 லட்சம் பேர் பயன் பெற்றார்கள்.

உங்கள் தொகுதியில் முதல்வர்

உங்கள் தொகுதியில் முதல்வர்

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழாக நகைகள் அடகுவைக்கப்பட்டு கடன்கள் வாங்கப்படுகிறதென்றால், அது ஏழை எளிய மக்கள் வாங்குவதாகவே இருக்கும். இதை உணர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்யும் பணிகளை தொடங்கினார்.

‘பணியிட மாற்றத்தில் தான் அதிகளவில் லஞ்சம் பெறப்படுகிறது’ என்று ஒரு பொதுக்கருத்து இருக்கிறது. இதை உணர்ந்து, இனி அரசு ஊழியர்களின் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் என்று ஆணை பிறப்பித்தார்.

காவலர்களையும் ரத்தம், சதை கொண்ட மனிதர்களாக பாவித்து, அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளித்தார்.

கடந்தகாலத்தின் தவறுகள் தெரிந்தால் தான், நிகழ்காலத்தை சரியாக அமைக்க முடியும். எனவே, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நிதி நிலைமை எப்படி இருந்தது என்பதை மக்கள் அறிந்துகொள்ள 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்தார்.

ஒரு புதிய அரசு வந்ததும் மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது, அவர்களின் அன்றாடச்சுமையில் ஏதாவது மாற்றம் வருகிறதா என்பது. அந்த விதத்தில், புத்திசாலித்தனமாக ஆவின் பால்விலையை 3 ரூபாய் குறைத்தார். இப்போது, பெட்ரோல் விலையும் 3 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது.

7.நிர்வாகத்துக்கு அடுத்து ஒரு ஆட்சியாளனிடம் மக்கள் எதிர்பார்ப்பது நீதியை. அதையும் ஸ்டாலின் திறம்பட அளித்தார்!

என்னென்ன செய்தார்?

முதன்மையாக, பேரறிவாளனுக்கு பரோல் அளித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது விமர்சிப்பது பத்திரிகையாளர்களின் அறம். அதற்காக அவர்கள் மீது கடந்த ஆட்சியில் அரசு சார்பாக தொடரப்பட்ட 90 அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற்றார்.

‘இவர்கள் சொல்வார்கள். ஆனால், செய்யமாட்டார்கள்’ என்று பலர் சொன்னது, அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களின் மீதான நடவடிக்கை. ஆனால், வேலுமணியின் மீதே தில்லாக நடவடிக்கை மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் ஒரு உரிமைப் போராட்டம். எனவே, அப்போது மக்களின் மீதும் செயற்பாட்டாளர்களின் மீதும் போடப்பட்ட அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்றார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகள் 17 பேருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி அளித்தார்.

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மீண்டும் மூடி, தூத்துக்குடி மக்களுக்கு நீதி செய்தார்.

8. இந்தியா மாநிலங்களால் ஆன நாடு. எனவே மாநில சுயாட்சி இன்றியமையாதது. அதை ஒன்றிய அரசுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பறைசாற்றும் நோக்கில் நிறைய காரியங்களை செய்தார், ஸ்டாலின்.

என்னென்ன செய்தார்?

மத்திய அரசு என்ற சொல்லை பயன்பாட்டில் இருந்து நீக்கி, ஒன்றிய அரசு என்ற பதத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். இந்த சொல்லை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசியக்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில், ‘திராவிட நாட்டுக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன…’ என்ற அண்ணாவின் சுயமரியாதை முழக்கத்தை அச்சமெதுவும் இன்றி வெளியிட்டார்.

மாநிலங்களின் சுயாட்சிக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நீட் தேர்வை நீக்குவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தார். அந்தக் குழுவை, மக்களைக் கேட்டு முடிவெடுக்கும் வகையில் உருவாக்கினார்.

தமிழ்நாட்டு வேலைகளில் தமிழ் இளைஞர்களுக்கு 75% முன்னுரிமை அளித்து, தமிழ்நிலத்தில் ஒன்றிய அரசு மறைமுகமாக முன்னெடுக்கும் வடமாநிலத்தவர் குடியேற்றத்தை தடுத்தார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில், உலகளவில் புகழ்பெற்ற 5 பொருளாதார அறிஞர்களை கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்தார். இப்படி பொருளாதார ஆலோசனைக்குழுக்கள் அமைப்பதை இதுவரை இந்தியாவின் பிற மாநிலங்கள் செய்ததில்லை. தமிழ்நாடே முதல்!

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுடன் முதல்வர்

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுடன் முதல்வர்

ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம் மற்றும் சிஏஏ-வுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு செய்தார். இந்த தீர்மானம் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

‘பாரத ரத்னாவைப் போலவே தமிழ்நாட்டுக்கும் தனித்துவமாக ஒரு விருது வேண்டும்’ என்று முடிவெடுத்து, ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை அறிமுகம் செய்தார்.

ஒன்றிய அரசு சரியாக தடுப்பூசிகளை அனுப்பாத சூழலில், தமிழ்நாடே தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் என்று அறிவித்து, உலகளாவிய அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரினார்.

மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப் போராட்டத்தை திறம்பட நடத்தி வெற்றிகண்டு, ஒன்றிய அரசை பணியவைத்தார்.

9.பொருளாதாரத்தில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டை, முதலிடத்தை நோக்கி நகர்த்த ஸ்டாலின் அடித்தளமிட்டார்.

என்னென்ன செய்தார்?

‘அனைத்து சமூகத்தினர் மற்றும் அனைத்துப்பகுதிகளை உள்ளடக்கிய வளர்ச்சியே என் அரசின் மாடல். அதாவது, திராவிட மாடல்’ என்று பிரகடனப்படுத்தினார்.

கனவு தமிழ்நாடு இயக்கத்தின் பரிந்துரையின் படி, தமிழ்நாட்டை அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க இலக்கு நிர்ணயித்தார்.

சமூகத்தின் சிக்கல்களை புரிந்த பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தலைமையில், மாநில வளர்ச்சிக்குழுவை அமைத்தார்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகிய பொருளாதார அறிஞர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை நியமித்தார்.

’முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ எனற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, 28,508 கோடி முதலீடுகளை ஈர்த்தார்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு நிகழ்ச்சி

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு நிகழ்ச்சி

புதிய தொழில் தொடங்குபவர்கள் தங்கு தடையின்றி அனுமதி பெற கொண்டுவரப்பட்ட ஒற்றைச்சாளர முறைக்கு, புத்தம்புதிய நவீனமான இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப்பங்கை அளிக்கும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

புதிதாக 70 தானியங்கி மெட்ரோ ரயில்களைப் பெறுவதற்கான பணிகளை தொடங்கினார். இதன் மூலம், கட்டுமானத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் முதன்முறையாக நிதி தொழில்நுட்ப நகர் (Fintech City) அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இது சென்னையில் அமையவிருக்கிறது.

தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் போன்ற இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் டைடல் பார்க் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

10.தமிழ்நாட்டில் மீண்டும் அரசியல் நாகரிகத்தை உயிர்ப்பித்தார், ஸ்டாலின்.

முதல் தகைசால் தமிழர் விருதை சொந்தக்கட்சிக்காரர்கள் யாருக்கும் அளிக்காமல், கம்யூனிஸ்ட் இயக்க தோழர் சங்கரய்யாவுக்கு அளித்தார்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு, எந்த பகை உணர்ச்சியும் இல்லாமல் இரங்கல் அறிக்கை வெளியிட்டார். கூடவே, சீமானையும் அலைபேசியில் அழைத்து துக்கம் விசாரித்தார்.

அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் நடுவே அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சங்கரய்யா, முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சங்கரய்யா, முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவில், சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகளையும் இடம்பெற வைத்தார். முக்கியமாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கரை இணைத்தார்.

கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்டு நிலுவையில் இருந்த 130 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்தார். இதில், பிரேமலதா விஜயகாந்த், பழ.கருப்பையா போன்ற எதிர்க்கட்சி பிரமுகர்களும் அடக்கம்!

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய சொந்தக்கட்சி நிர்வாகிகளை, எந்த சமரசமும் செய்யாமல் உடனடியாக கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார்.

அரசுத் திட்டங்களில் முதலமைச்சர்களின் படங்களை பொறிக்கும் அநாகரிக வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். மே 7 முதல் எல்லா அரசு திட்டங்களிலும் தமிழ்நாடு அரசின் முத்திரை மட்டுமே இடம்பெற்று வருகிறது!

-சுரேஷ் சம்பந்தம்,

ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு இயக்கம்Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *