Share on Social Media


ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து வெளியாகியுள்ளது ‘தலைவி’

1965-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து ‘தலைவி’ படத்தை உருவாக்கியுள்ளார் விஜய். ஜெயலலிதா நடிகையாக அறிமுகம், எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பு எப்படி உருவானது, பின்பு எப்படி காதலாக மாறியது, கருணாநிதி – எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை, எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரிவு, ஜெயலலிதாவின் அரசியல் வருகை எப்படி அமைந்தது, ஜெயலலிதா முதல்வர் ஆவது உள்ளிட்ட சம்பவங்களை வைத்து திரைக்கதையாக வடிவமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.

ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை கதையை எந்தவித சிக்கலுக்கும் உள்ளாகாமல் படமாக்கியுள்ளார் விஜய். ஆகையினால் படத்தின் தொடக்கத்திலேயே இது கற்பனை கலந்த கதை என்று சொல்லிவிடுகிறார். ஜெயலலிதாவின் பயோபிக் முழுமையாக அவருடைய வாழ்க்கைக் கதையைக் கூறியிருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால் இடைவேளை வரை எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவருக்கும் இடையே காதல் எப்படி மலர்ந்தது என்பதலிலேயே சென்றுவிடுகிறது.

ஜெயலலிதாவின் பயோபிக் என்று விளம்பரப்படுத்திய படக்குழுவினர் படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட பார்வையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை. ஜெயா, எம்.ஜே.ஆர், ஆர்.என்.வீரப்பன், கருணா, சசி என நிஜமான கதாபாத்திரங்களின் பெயர்களைச் சுருக்கியும், இனிஷியல் மாற்றியும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அனைத்தையும் கடந்து படத்தின் உருவாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார் விஜய். காட்சியமைப்புகள், ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் பணி, பின்னணி இசை என அனைத்துமே கச்சிதமாகப் பொருந்திப் படத்தைக் காப்பாற்றிவிடுகிறது. இதனை ஜெயலலிதா பயோபிக்காக அல்லாமல், ஒரு நடிகை திரையுலகில் அறிமுகமாகி எப்படி தமிழக முதல்வரானார் என்று பார்த்தால் நம்பும்படியாக இருக்கிறது.

ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்துள்ளார். திமிர், பிரிவு, ஏக்கம், துணிச்சல் எனப் பல விஷயங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் படத்தின் சில இடங்களில் செயற்கைதனமான நடிப்பு எட்டிப் பார்க்கிறது. மேலும், படத்தில் நிறைய இடங்களில் வசனம் ஒன்றாக இருக்கிறது, வாய் அசைவு வேறொன்றாக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளில் கங்கணாவின் மேக்கப்பில் படக்குழுவினர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

1631272038343 Tamil News Spot

எம்.ஜி.ஆராக அரவிந்த் சுவாமி. இவருடைய நடிப்பு கச்சிதம். பல காட்சிகளில் எம்.ஜி.ஆரை எப்படி பிரதிபலித்துள்ளார். ஆனால், இன்னும் கொஞ்சம் உடம்பை மட்டும் குறைத்து நடித்திருந்தால் இன்னும் நம்பகத்தன்மை கூடியிருக்கும். தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி தான் படத்தின் ஹைலைட் என்று சொல்லலாம். தனது முகபாவனைகளிலேயே கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம் செம. இவருக்கும் கங்கணாவுக்கும் இடையிலான காட்சிகள் அனைத்துமே சரியான விதத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கங்கணாவின் உதவியாளராக நடித்துள்ள தம்பி ராமையாவும் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கருணாநிதியாக நாசர், சசிகலாவாக பூர்ணா, எம்.ஜி.ஆரின் மனைவியாக மதுபாலா என குறைவான காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டலின் பணி பாராட்டுக்குரியது. படப்பிடிப்பு காட்சிகள், அரசியல் மேடை, தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என கனகச்சிதமாகத் தனது பணியைச் செய்துள்ளார். அதே போல் கலை இயக்குநராக ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரி ஆகியோரின் பணி வியப்புக்குரியது. எது அரங்கம் என்பது தெரியாத வகையில் இவர்களுடைய பணி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

1631272051343 Tamil News Spot

படத்தின் பல்வேறு காட்சிகளை வெகுவாக காப்பாற்றியிருப்பது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை தான். முதல் காட்சியிலேயே தமிழக சட்டப்பேரவை நிகழ்வு, சமுத்திரக்கனி – ரெஜினா இருவருக்கும் இடையிலான காட்சி, கங்கணாவின் சத்துணவுத் திட்டம் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகளுக்கு இவருடைய பின்னணி இசை மிகவும் வலுசேர்த்துள்ளது. ஆனால், படத்தின் முதல் பாடல் ஏதோ இந்திப் பாடல் போல் உள்ளது. படத்தின் பாடல் மற்றும் வசனங்களை கார்க்கி எழுதியுள்ளார். பல இடங்களின் வசனம் கத்தியின் கூர்மை போல் மிகவும் ஷார்ப்.

ஜெயலலிதாவின் பயோப்பிக்காக அல்லாமல், ஒரு கதையாக வேண்டுமானால் ‘தலைவி’ படத்தினை ரசிக்கலாம். ஆனால், இது ஜெயலலிதா பயோப்பிக்கா என்றால் கண்டிப்பாகக் கேள்விக்குறி தான்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *