Share on Social Media

பழம்பெருமை மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி விட வேண்டும் என்பது பல வீரர்களின் ஆசையாகவும், பல ஜாம்பவான்களின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் தங்கள் பெயர் பொறிக்கப்பட்டு விட வேண்டும் என்பது பேராசையாகவும் இருக்கும்.

லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற ஆசை பல வீரர்களுக்கும் சாத்தியப்பட்டுவிடும். ஆனால், அந்த பேராசை அவ்வளவு எளிதில் அகப்படாது. நிகரற்ற வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே போன்றவர்களால் கூட லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டில் பெயரை பதிக்க முடியவில்லை. இதிலிருந்து லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டின் மதிப்பை புரிந்துக்கொள்ளலாம். ஆனால், அந்த ஆசை-பேராசை இரண்டையும் ஒரே இன்னிங்ஸில், அதுவும் சர்வதேச கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸிலேயே சாத்தியப்படுத்தியிருக்கிறார் நியூசிலாந்தின் டெவன் கான்வே!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சார்பில் டெவன் கான்வே எனும் வீரர் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமானார். ஓப்பனராக இறங்கிய டெவன் கான்வே இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு இரட்டை சதத்தை பதிவு செய்து, லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டில் தனது பெயரையும் பதிவு செய்துவிட்டார். கடைசி வரை இங்கிலாந்து பௌலர்களால் கான்வேவை அவுட் ஆக்க முடியவில்லை. அவரேதான் ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார்.

டெவன் கான்வே நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் அல்ல. அவர் தென்னாப்பிரிக்க நாட்டு குடிமகன். அங்கே கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறையால் அணியில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் பல வீரர்களும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு குடிபெயர்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். காலின் மன்றோ, வாட்லிங், வேக்னர், கிராண்ட் எலியட் என பல தென்னாப்பிரிக்க வீரர்கள் நியூசிலாந்துக்காக ஆடிக் கொண்டிருக்கின்றனர். கான்வேவும் அந்த வரிசையில் இடம்பிடிப்பதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.

டெவன் கான்வே

2017-ம் ஆண்டு முதல் வெல்லிங்டன் அணிக்காக ஆடும் வாய்ப்பு கான்வேக்கு கிடைத்தது. தனது திறமை மூலம் அனைவரையும் கவர்ந்த கான்வேக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் சீக்கிரமே கிடைத்தது. நியூசிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரிலும் வெல்லிங்டன் ஃபயர் பேர்ட்ஸ் அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. இந்த தொடரின் கடந்த இரண்டு சீசன்களிலும் வெல்லிங்டன் அணிதான் சாம்பியன். டெவன் கான்வேதான் இரண்டு சீசனிலும் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

இதற்கிடையே நியூசிலாந்து தேசிய அணியில் ஆடுவதற்கான அனுமதியும் கான்வேக்கு கிடைத்தது. கடந்த நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த தொடரின் ஒரு போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்கள் அடித்து நன்றாக ஆடியிருந்தார். அடுத்ததாக மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் கான்வேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் டி20 போட்டியிலேயே ஒற்றை ஆளாக நின்று 99 ரன்களை எடுத்து அணியை வெற்றிபெற செய்தார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் அடித்த ஐந்தாவது அரைசதமாக இது அமைந்தது. இந்த சாதனை கான்வே மீது பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியது.

இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் கான்வே 75 க்கு மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார். டி20 போட்டிகளில் 59 என்ற ஆவரேஜை வைத்திருக்கிறார். ஒயிட்பால் கிரிக்கெட்டில் சரவெடியாக வெடித்து சிதறவிட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் கான்வேவை சேர்த்தது நியூசிலாந்து அணி.

கனவுக்களமான லார்ட்ஸில் தனது டெஸ்ட் தொப்பியை வாங்கி மாட்டினார் கான்வே. டாம் லேதமுடன், கான்வே ஓப்பனராக இறக்கப்பட்டார். இங்கிலாந்தின் லார்ட்ஸில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடை நியூ பாலில் எதிர்கொள்வது என்பது சிங்கத்தை அதன் கோட்டையிலே எதிர் கொள்வதற்கு சமம். அதுவும் ஒன்றல்ல… இங்கே இரட்டை சிங்கங்கள். ஆனால், டெவன் கான்வே ஒரு ரிங் மாஸ்டர் போல அநாயசமாக இவர்களை சமாளித்தார்.

E29jh5tVkAsL3QS Tamil News Spot
டெவன் கான்வே

முதல் ஸ்பெல்லில் ஆண்டர்சன் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயும், ப்ராட் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பாடிலைனிலும் வீசிக்கொண்டிருந்தனர். முதல் 5 ஓவர்களில் இந்த யுக்தியை லேதம் மற்றும் கான்வேவால் அவ்வளவு சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் திணறினார்கள். ஆனால், கான்வே சீக்கிரமே சுதாரித்துக் கொண்டார்.

‘நாம் எதிர்ப்பது முரட்டு சிங்கங்கள். பயந்து பம்மினால் நம்மை தின்று செரித்து ஏப்பம் விடுவதற்கு ஒரு நொடி ஆகாது. பிழைக்க வேண்டுமென்றால் எதிர்த்து சண்டை செய்ய வேண்டும்’ என்பதை உணர்ந்தார் கான்வே. ஆறாவது ஓவரிலிருந்தே கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்தார். ப்ராட் இடங்கொடுக்காமல் உடம்புக்குள் வீசிய பந்தை ரிஸ்க் எடுத்து க்ராஸ் பேட்டில் ஆடி பவுண்டரி ஆக்கினார். நான்கு ஸ்லிப்களை வைத்து டிரைவ் ஆடும் லெந்த்தில் ஆண்டர்சன் வலை வீச அதையும் துணிச்சலாக எதிர்கொண்டு கவர் டிரைவ் ஆடி பவுண்டரி ஆக்கினார். இதன்பிறகு, ஆண்டர்சன்- பிராட் இருவருமே தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியதாயிற்று. இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சனும் மார்க் வுட்டும் கூட சிறப்பாக வீசியிருந்தனர். ராபின்சன் சில வேரியேஷன்களை பயன்படுத்தி செட் செய்து விக்கெட் எடுக்க முயற்சிக்க, மார்க் வுட் 140+ இல் ஷார்ட் பாலாக வீசி மிரட்டிக் கொண்டிருந்தார்.

இந்த யுக்திகளையும் டெவன் கான்வே சிறப்பாக எதிர்கொண்டார். குறிப்பாக, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பலரும் ஷார்ட் பாலுக்கு ஸ்கொயர் லெகிலும், ஃபைன் லெகிலும் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, கான்வே மட்டும் ஷார்ட் பால்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். ஷார்ட் பால்களை எதிர்கொள்ளும் போது மற்ற பேட்ஸ்மேன்கள் பேட்டை கீழிருந்து மேலாக வீசி அதாவது பந்துக்கு கீழிருந்து அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆகினர். ஆனால், கான்வே ஷார்ட் பால்களை எதிர்கொள்ளும் போது பேட்டை மேலிருந்து கீழாக வீசி அதாவது பந்துக்கு மேலிருந்து அட்டாக் செய்து கிரவுண்ட்டடாக மட்டுமே ஆடினார். 200 அடிக்கும் போது அடித்த அந்த சிக்சருக்கு மட்டுமே இந்த யுக்தியை மாற்றியிருப்பார்.

Tamil News Spot
டெவன் கான்வே

கான்வேவின் இன்னிங்ஸில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம் அவருடைய அமைதி. பதற்றமே அடையாமல் இங்கிலாந்தின் பலமிக்க பௌலிங் அட்டாக்கை எதிர்கொண்டார். கான்வே 180+ இல் இருக்கும் போது நியயூசிலாந்தின் டெய்ல் தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து விக்கெட் விழுகிறது. ஆனாலும் கான்வேவிடம் 200 அடித்துவிட வேண்டுமே என்கிற அவசரமும் பதற்றமும் துளி கூட இருக்கவில்லை. கடைசி விக்கெட்டுக்கு வேக்னர் வந்து கண்ணாபின்னாவென பெரிய ஷாட்டுகள் ஆட அப்போதும் வெகு இயல்பாக அமைதியாக ஒரு எண்ட்டில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அவசரமேயின்றி ஒரு ஷார்ட் பாலில் ஸ்கொயர் லெகில் செம கூலாக ஒரு சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார்

இப்படி இங்கிலாந்தின் ஒவ்வொரு பௌலர்களுக்கும் அவர்களின் வியூகங்களுக்கு எதிராகவும் டெக்னிக்கலாகவும் மனரீதியாகவும் வலுவாக பதிலடி கொடுத்தார் கான்வே. கடைசி வரை அவரின் விக்கெட்டை இங்கிலாந்து பௌலர்களால் வீழ்த்தவே முடியவில்லை. தானாகவே ரன் அவுட் ஆகிதான் கான்வே வெளியேறினார்.

சச்சினுக்கு ஷேன் வார்னேவுக்கும் சாத்தியப்படாத கனவு கான்வேக்கு தனது அறிமுக போட்டியிலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. 2021-ல் முதல் நபராக லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்றதிருக்கிறார் கான்வே. மிகச்சிறந்த அறிமுக இன்னிங்ஸை ஆடியதன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் கான்வே. மூன்று ஃபார்மேட்களிலும் கலக்குவதால் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக கான்வே சீக்கிரமே உருமாறுவார் என நம்பலாம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *