Share on Social Media


பெங்களூரு: ‛’தவளை தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி, பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு பொருந்தும். பேசி பேசியே முதல்வராகும் வாய்ப்பை நழுவ விட்டார்,” என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல மாதங்களாகவே, முதல்வர் எடியூரப்பாவை மாற்றி, வேறொருவரை அமர்த்த பா.ஜ., மேலிடம் ஆலோசித்தது. யாரை முதல்வராக்குவது? என, ஆலோசித்த போது, பசவராஜ் பொம்மை பெயர் இருக்கவில்லை. முதலில் பசனகவுடா பாட்டீல் எத்னால், அடுத்து, அரவிந்த் பெல்லத் பெயர் பரிசீலனையில் இருந்தது.
இறுதியில் எத்னால் பெயரே முடிவு செய்யப்பட, வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அவருக்கு வாய்ப்பு படிப்படியாக குறைந்தது. அதற்கு அவரது பேச்சுகளே முக்கிய காரணம். நாள் தவறாமல், எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உட்பட, பா.ஜ.,வின் சில தலைவர்களை, வாய்க்கு வந்த படி சாடினார்.
இது கட்சிக்கும், அரசுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எத்னால் பேச்சுகளை, கட்சி மேலிடமும் கவனித்தது. கட்சி தலைவர்களை பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது என, பலமுறை எச்சரித்தது.கட்சியின் மாநில பொறுப்பாளர் அருண்சிங்கும் அறிவுரை கூறினார். ஆனால், எதற்கும் பணியாத எத்னால், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தனக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில், வட மாவட்டத்தவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, அவ்வப்போது கூறி வந்தார். கட்சி ஒழுங்கை மதிக்காத எத்னாலை, பா.ஜ., மேலிடம் ஒதுக்கியது.
இறுதி வினாடியில், பசவராஜ் பொம்மை பெயர் முடிவானது. இவரை தவிர வேறொருவரை முதல்வர் பதவியில் அமர்த்த, எடியூரப்பா சம்மதிக்கவில்லை. பசவராஜ் பொம்மையே முதல்வரானார். தினமும் கட்சியை தர்மசங்கடத்தில் தள்ளிய எத்னால், தான் முதல்வராகும் வாய்ப்பை, தன் வாயால் நழுவவிட்டார் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *