Share on Social Media


காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவில் கல்வெட்டு வைப்பதில் புகழ் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். கோவிலை நிர்வகிக்கும் வேல்முருகன் என்பவர், தமிழ்நாடு காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றியவர். அ.தி.மு.க மீதும், ஜெயலலிதா மீதும் அதீத பற்று கொண்ட வேல்முருகன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, காவல் சீருடையில் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்த போது, சீருடையில் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து காவல் சீருடையில் அ.தி.மு.க சார்பு சம்பவங்களை அரங்கேற்றிய வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பியது காவல்துறை.

தேனி எம்.பி’க்கு வைக்கப்பட்ட கல்வெட்டு

தேனி எம்.பி’க்கு வைக்கப்பட்ட கல்வெட்டு

இந்நிலையில், குச்சனூரில் உள்ள காசி ஸ்ரீ அன்னப்பூரணி கோவிலை நிர்வாகித்து வந்தார் வேல்முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, வாக்கு எண்ணும் முன்னரே, தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை எம்.பி என குறிப்பிட்டு, இதே கோவிலில் கல்வெட்டு வைத்தார் வேல்முருகன். கல்வெட்டு அகற்றப்பட்டதுடன், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்றும், ஓ.பி.எஸ் துணைமுதல்வர் என்றும், 3வது முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது என்றும் கல்வெட்டு வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் வேல்முருகன். இது தொடர்பாக, காவல்துறை இதுவரை எந்த வழக்குப்பதிவும் செய்யவில்லை.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *