புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியேற்று 7 மாதங்களாகிறது. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து, மத்திய அரசிடம் பெற்ற ரூ.8 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என எதையும் நிறைவேற்றவில்லை. மழை நிவாரணம், விவசாயிகள் நிவாரணம் தரவில்லை. விலைவாசி உயர்ந்துவிட்டது. மாநில அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. கூட்டுறவு நிறுவனங்கள், பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. என்ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. இதனால்தான் காரைக்காலைச் சேர்ந்தவர் ரங்கசாமியை தொடர்புகொண்டு நீங்கள் அறிவித்த மழை நிவாரணம் ரூ.5,000 எப்போது தருவீர்கள்? என கேட்டார்.

அதற்கு ரங்கசாமி, நான் ராஜா இல்லை. நிர்வாகத்தில் மேலயும், கீழேயும் அமைச்சர்கள் இருக்கின்றனர். இதுதான் புதுச்சேரி என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். இதை காங்கிரஸ் ஆட்சியில் கூறியபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரங்கசாமி மெளனமாக இருந்தார். அதிகாரிகளோடு ஒத்துப்போக வேண்டும் என்றார். இப்போது அதிகாரிகள் ஒத்துப்போகவில்லையா? ஏன் எந்த காரியமும் நடக்கவில்லை? நிதியை ஒதுக்கிவிட்டு அதன்பிறகுதான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஆனால் முதல்வர் ரங்கசாமி நிதியில்லாமல் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். காரைக்காலில் இருந்து போன் பேசியவர் மீது என்ன தவறு இருக்கிறது? போனில் பேசியவரை ரங்கசாமியின் ஆதரவாளர் சங்கர் என்பவர் தொடர்புகொண்டு மிரட்டியிருக்கிறார். அவருக்கு போனில் பேசியவர் எண் எப்படி கிடைத்தது? சங்கரிடம் எண்ணை கொடுத்து ரங்கசாமி மிரட்டும்படி கூறினாரா?
அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரே ஆள்களை தூண்டிவிட்டு மழை நிவாரணம் கேட்டவர் மீது கொலை மிரட்டல் விடுவது, முதலமைச்சர் எந்த அளவுக்கு சர்வாதிகாரத்தோடு செயல்படுகிறார் என்பதை வெளிக்காட்டுகிறது. மக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு விட்டு, ஆள்களை வைத்து மிரட்டுவது முதல்வருக்கு அழகல்ல. ரங்கசாமி ஆட்சியில்தான் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, ஆள் கடத்தல் நடக்கிறது. ரங்கசாமி அறிவித்த அறிவிப்புகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி முழுவதும் சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. இதைப்பற்றி முதல்வர், அமைச்சர்களுக்கு அக்கறையில்லை. இவர்களுக்கு நாற்காலி வேண்டும், பதவி வேண்டும் என நினைக்கின்றனர்.

முதல்வர், அமைச்சர்களிடையே ஒற்றுமையில்லை. மக்கள் விரோத ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். அதனால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சில அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் உள்ள தொழிற்சாலை அதிபர்களிடம் மாமூல் தர வேண்டும் என பேசுகின்றனர். சேதராப்பட்டு, கரசூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அராஜக வேலையை அமைச்சர் செய்கிறார் என புகார் தெரிவித்திருக்கின்றனர். முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்திருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.
Also Read: முதல்வர் பெயரில் கொலை மிரட்டல்; அமைதிகாக்கும் காவல்துறை! – அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்