Share on Social Media


“ஆளுங்கட்சியினர் என் மனைவியை தவறாகப் பேசுகிறார்கள். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை நான் இதற்க்கு முன்பு எதிர்கொண்டதில்லை. மீண்டும் முதல்வராகித்தான் இந்த சட்டப்பேரவைக்குள் நுழைவேன்!” என கண்ணீர்விட்டு அழுதபடி, சபதம் செய்திருக்கிறார் ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு

ஜெகன்மோகன் ரெட்டி – சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தொடரில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த, ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சந்திரபாபு நாயுடுவைச் சரமாரியாக எதிர்விமர்சனம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் – ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சட்டப்பேரவையிலிருந்து சந்திரபாபு நாயுடு வெளிநடப்பு செய்தார்.

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களைக் குறிப்பிட்டுக் கண்ணீர்விட்டு அழுதார்.

“என்னுடைய 40 ஆண்டுக் கால அரசியல் வாழ்க்கையில், நான் பல போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். சட்டப்பேரவையில் காரசாரமான வாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் இதுபோன்ற அவமானத்தை நான் சந்தித்த தில்லை!. கடந்த 2 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள். என் மனைவியைப் பற்றி ஆளுங்கட்சியினர் தவறான வார்த்தைகளால் அவதூறு பேசுகிறார்கள்” என்று கூறியபடியே கதறி அழுதார். உடனே அவரை சக எம்.எல்.ஏ-க்கள் சமாதானம் செய்தனர்.

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு

கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு

பின்னர் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு சபாநாயகர் மௌனமாக அமர்ந்திருக்கிறார். முதல்வரோ எந்த பதிலும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார். என் சுயமரியாதையை அடமானம் வைத்துவிட்டு, என்னால் சட்டப்பேரவைக்குள் வரமுடியாது. நான் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்று, முதல்வராக ஆட்சியமைப்பேன். அப்போது இந்த அவைக்கு வருகிறேன். அதுவரை சட்டப்பேரவைக்குள் நுழையமாட்டேன்!” என கண்ணீர் மல்கச் சபதம் விட்டார்.

ஆளுங்கட்சியினரின் விமர்சனத்தால், எதிர்க்கட்சித் தலைவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதிருப்பது, ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *