Share on Social Media


கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மாநிலத்திலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. இதன்படி, சென்னையில் 85 சதவீதம் பேர் முதல் தவணை, 60 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மாநகராட்சி நடத்தும் தொடர் மெகா தடுப்பூசி முகாம் காரணமாக, இந்த இலக்கை அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, இந்தாண்டு ஜன., மாதம் முதல் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி, மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை, மாநில அரசு பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்தாண்டு, ஜன., 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. ஆரம்பத்தில், கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை.அதன் பின் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, கொரோனா இரண்டாம் அலை தாக்கம் போன்றவற்றின் வாயிலாக, தடுப்பூசி ஆர்வம் அதிகரித்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையங்களுடன், அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைத்து, தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டது.அதன்படி, மாநிலத்திலேயே முதன்முறையாக, சென்னை மாநகராட்சியில் கடந்த ஆக., 26ம் தேதி, ஒரு வார்டில் இரண்டு முகாம் என, 400 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாமில், பொதுமக்கள் வழக்கமாக வருவதை விட, 1.35 லட்சம் பேர் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மெகா தடுப்பூசி போடும் முகாமில், பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து, தமிழகம் முழுதும், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதுவரை, சென்னையில், 15 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று முன்தினம் வரை, 47 லட்சத்து 21 ஆயிரத்து 815 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33 லட்சத்து 17 ஆயிரத்து 392 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதன்படி, 85 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். மாநிலத்திலேயே, இரண்டாம் தவணை தடுப்பூசி அதிகம் போடப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.இதில், 40 லட்சத்து 39 ஆயிரத்து 720 பேர் முதல் தவணை தடுப்பூசிகளும்; 28 லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டுள்ளனர்.

அதேபோல், 6 லட்சத்து 82 ஆயிரத்து 95 முதல் தவணை தடுப்பூசியும் 4 லட்சத்து 84 ஆயிரத்து 860 இரண்டாம் தவணை தடுப்பூசியும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுள்ளனர். மொத்தமுள்ள, 85 சதவீதத்தில், 73 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதத்தில், 51 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அமைச்சர் பாராட்டு!மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி முகாம்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையிலான நிர்வாகம் மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

ஒவ்வொரு முறையும், 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாநில அளவில், 48.95 சதவீதம் மட்டுமே, இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் 85 சதவீதம் முதல் தவணையும், 60 சதவீதம் இரண்டாம் தவணையும் போடப்பட்டுள்ளது. மாநில அளவை கடந்து, சென்னை மாநகராட்சி தமிழகத்திலேயே இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டத்தில் முன்னிலையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *