Share on Social Media


மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் போட்ட முதல் ஐந்து கையெழுத்துகளில் ஒன்று `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கத்துக்கானது. தேர்தல் பிரசாரத்தின்போது `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முன்னெடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார் மு.க.ஸ்டாலின். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மக்களுக்கு அவர் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல் ஐந்து கையெழுத்துகளில் ஒன்றாக இதற்கு கையெழுத்திட்டது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அந்தத் துறைக்குச் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையரகத்தில் இதுதொடர்பான பணிகள் வேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன. மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்ஸை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

“புதிய துறையை உருவாக்கும்போது பல்வேறு சிக்கல்கள் உருவாகும். `என்னென்ன பணிகள் இருக்கின்றன… யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள்?’ என்று தீர்மானிப்பதற்கே பல நாள்கள் தேவைப்படும். ஆனால், உங்கள் துறையைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் அவகாசம் இல்லை. 100 நாள்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை எப்படிச் செயல்படுகிறது… எவ்வளவு பேர் பணிபுரிகின்றனர்?”

“இந்தத் துறையில் எனக்குச் சிறப்பு அதிகாரி என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. துறையை உருவாக்கியதும் உடனடியாக செயல்பட வேண்டியிருப்பதால், ஒரே நேரத்தில் இரு வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருபுறம் மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் பணிகளும் மறுபுறம் இந்தத் துறைக்கான கட்டமைப்பை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது அனைத்துத் தொகுதிகளிலும் பெற்ற நாலரை லட்சம் மனுக்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுதான் எங்கள் முதல் டாஸ்க்.

மனுக்கள் அனைத்தையும் டிஜிட்டலாகப் பதிவு செய்கிறோம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிடம் இதற்கு ஏதுவான சாஃப்ட்வேர் இருந்ததால் மனுக்களை துறை வாரியாகப் பிரித்து உடனடியாக நடவடிக்கையைத் தொடங்க முடிகிறது. `அவுட் சோர்ஸ் ஏஜென்சி’ மூலமாகத்தான் மனுக்கள் எங்களது போர்ட்டலில் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு மனு பதிவு செய்யப்பட்டதும் ரியல் டைமில் அது மாவட்டங்களிலும் டிஸ்ப்ளே ஆகும்.

ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த மனுமீதான கள விசாரணையைத் தொடங்கி நடவடிக்கையை ஆரம்பிக்கின்றனர். மாவட்டங்களில் இருக்கின்ற அதிகாரிகள் மூலமாக செயல்படுவதுதான் இந்தத் துறையின் தன்மையாக இருக்கிறது. நாங்கள் இங்கிருந்து கண்காணிப்போம். ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநராக இருந்த சஜீவனாவை டெபுடேஷனில் கொடுத்திருக்கின்றனர். சி.எம் செல்லிலிருந்து ஒரு செக்‌ஷன் அதிகாரிகள் சப்போர்ட் செய்கின்றனர். ஆகவே, இதை ஒரு டீம் வொர்க்காகச் செய்கிறோம்.”

“ மாவட்டங்களில் ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளை வைத்துதான் இந்தத் துறை செயல்படுகிறது என்கிறீர்கள்… இதற்கென பிரத்யேக அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லையா?”

“அன்றாடம் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய பணிகளைச் சார்ந்த கோரிக்கைகள்தான் மனுக்களாக வரும். உதாரணத்துக்கு `நான் மின் இணைப்பு கேட்டிருந்தேன். எனக்கு கிடைக்கலை’, `பென்ஷன் கேட்டிருந்தேன் கிடைக்கலை’ என்பது போன்ற கோரிக்கைகள்தான். அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தாம் நிறைவேற்ற முடியும். ஆகையால், இதற்காகத் தனியாக மாவட்ட அளவில் டீம் எதுவும் இல்லை. ஆனால், கண்காணிப்புக்கான ஒரு டீமை உருவாக்கியிருக்கிறோம். மாவட்ட அளவில் டி.ஆர்.ஓ அல்லது சப் கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர், டி.ஆர்.ஓ இவர்களில் சீனியர் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களை நோடல் ஆபீஸராக நியமித்திருக்கிறோம். மனுக்கள் மீது நேர்மையாகவும் குறித்த நேரத்துக்குள்ளும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் உறுதி செய்வதும் இந்த நோடல் ஆபீஸர்ஸின் பொறுப்பு.”

PKS 5547 1 Tamil News Spot
ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்

“ஏற்கெனவே இருக்கும் அதிகாரிகளைத்தான் பயன்படுத்த முடியும் என்பது புரிகிறது. ஆனால், அவர்களுக்கு இதே காலகட்டத்தில் நேரடியாகவும் நிறைய மனுக்கள் வருமல்லவா… அப்படி வரும்பட்சத்தில், இந்த மனுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா?”

“அப்படி இல்லை. எல்லா மனுக்களும் முக்கியம்தான். சீனியாரிட்டியை மீறி இந்த மனுக்கள் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. ஒவ்வொரு மனுவும் அந்தந்த சீனியாரிட்டி அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படுகிறது.”

“பலர் தங்களது சொந்தப் பிரச்னைகளை மனுவாக எழுதியிருப்பார்கள். அதாவது, அவை அரசு நிர்வாக ரீதியாகத் தீர்க்க இயலாத பிரச்னைகளாக இருக்கலாம். அப்படியான மனுதாரர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள்?”

“இதை இரண்டு விதமாகச் செய்திருக்கிறோம். முதலாவது, இப்போது அரசாங்கத்தில் நடைமுறையில் இருக்கிற திட்டங்கள் மூலமாகச் செய்யக்கூடிய விஷயங்களை செய்துவிடுகிறோம். இரண்டாவது உடனடியாகத் தீர்வு காண முடியாத விஷயங்களை சஜஷன்ஸ் கேட்டகிரிக்கு கொண்டு செல்கிறோம். அதாவது, `பெட்ரோல் விலையைக் குறைங்க’, `எங்களுக்கு ஜி.எஸ்.டி வேண்டாம்.’ , `நீட் தேர்வை ரத்து செய்யணும்’ இந்த மாதிரி நிறைய மனுக்கள் வந்திருக்கின்றன. அவற்றின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள்.

அதேபோல, ஏதாவது ஒரு ஊரில் புது பஞ்சாயத்து கேட்கின்றனர் அல்லது இருக்கும் ஒன்றியத்தைப் பிரித்து இரண்டு ஒன்றியங்களாக்குங்கள் என்று மனு செய்திருக்கின்றனர் என்றால், அதை உடனடியாக செய்ய முடியாதல்லவா? அது ஏராளமான கள ஆய்வுகளின் அடிப்படையில் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நிறைவேற்றக்கூடியது. எனவே, இதுபோன்ற விஷயங்களை சம்பந்தப்பட்ட துறைக்கு சஜஷனாக அனுப்புவோம். பிற்காலத்தில் அதுகுறித்து அரசு முடிவெடுக்கும்போது இந்த ஆலோசனைகள் பெரும் உதவியாக இருக்கும். ஆனால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு உரிய பதில் அளிக்கவும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்.

தவிர, மனுக்களை இங்கே போர்ட்டலில் நாங்கள் பதிவு செய்ததுமே, `உங்கள் மனு பதிவு செய்யப்பட்டது’ என மனுதாரருக்கு ஓர் அக்னாலஜிமென்ட் நம்பர் மெசேஜாக சென்றுவிடும். அந்த நம்பரை வைத்து அவர்கள் மனு எந்த நிலையிலிருக்கிறது என்று ஸ்டேட்டஸ் செக் செய்ய முடியும். அந்த வசதியை இன்னும் சில நாள்களில் `ஆக்டிவேட்’ செய்துவிடுவோம். அப்படி செக் செய்யும்போது, அவரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கிறதா… நிராகரிக்கப்பட்டது என்றால் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது இப்படி அனைத்து தகவல்களையும் இணையத்தின் வாயிலாகவே பார்த்துக்கொள்ள முடியும்.”

PKS 5565 Tamil News Spot
தன் குழுவினருடன் ஷில்பா பிரபாகர் சதீஷ்

“ மனுதாரர்கள் மொபைல் நம்பர் கொடுக்கவில்லை என்றால் சிக்கலாகுமே?”

“ஒருவர் தனிப்பட்ட கோரிக்கைகள் வைக்கும்போது அவருடைய மொபைல் நம்பர் கட்டாயம் தேவை. மொபைல் நம்பர் இல்லை. ஆனால், அட்ரஸ் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதைக் கண்டுபிடித்துவிடலாம். இரண்டுமே இல்லையெனில், இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால், பொதுவான கோரிக்கைக்கு அது இரண்டுமே தேவையில்லை. அதாவது ஒரு ஊர் பெயரைக் குறிப்பிட்டு இந்த ஊருக்கு ரோடு போட்டுக் கொடுங்கள் அல்லது தண்ணீர் வசதி செய்துகொடுங்கள் என்றால், அதற்கு மனுதாரின் போன் நம்பரோ, முகவரியோ தேவையில்லை சம்பந்தப்பட்ட ஊரின் பெயர் மட்டுமே போதுமானது. அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறோம்.”

“வாரா வாரம் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அங்கும் இதே மாதிரியான பிரச்னைகள் குறித்துத்தான் மனு செய்யப்படுகின்றன. ஒருபக்கம் மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படும்போது இன்னொரு பக்கம் இந்தத் திட்டத்துக்கு இத்தனை லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?”

“மக்கள் குறைகளைப் பொறுத்தவரையில் ஒருவர் ஒரு விஷயத்துக்கு விண்ணப்பித்து அது கிடைக்கவில்லை என்றால்தான் குறைகள் பட்டியலில் வரும். ஆனால், ஒருவர் எனக்கு மின் இணைப்பு வேண்டும் என்று முதல்முறையாகக் கேட்பது விண்ணப்பம் என்ற பட்டியலில் வரும். பலர் விண்ணப்பம் செய்யாமலேயே நேரடியாக மனுவாகக் கொடுப்பவர்களும் இருக்கின்றனர். நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இப்படி நிறைய பார்த்திருக்கிறேன். அதனால் நிறைய மனுக்கள் வந்திருக்கலாம். அந்த அடிப்படையில் பிரித்துப் பார்த்தால்தான் இதுகுறித்து நாம் விவாதிக்க முடியும்”

60bfe5d170c06 Tamil News Spot
ஸ்டாலின்

“இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரொம்பவே ஸ்பெஷலான திட்டம். தேர்தலுக்கு முன்பும் சரி முதலமைச்சரான பிறகும் சரி, மக்கள் மத்தியில் இது முக்கியமான திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதன் தலைமைப் பொறுப்புக்கு உங்களை நியமித்தது குறித்து எப்படி உணர்கிறீர்கள்?

“இது பொறுப்பான அரசாங்கமாக இருக்க வேண்டும்; சாதாரண மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான தீர்வை உருவாக்கித் தர வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதை நான் பெரிய வாய்ப்பாகத்தான் பார்க்கிறேன். தமிழ்நாடு முழுக்க உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீர்வை உருவாக்கும்போது அது பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.”

“முதலமைச்சரே நேரடியாக இங்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். இந்தத் துறையின் பணிகள் குறித்து அப்டேட்டுகளைத் தொடர்ந்து கேட்டுகிறாரா? எந்தளவுக்கு இதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்?’’

“முதலமைச்சர் மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறார். மனுக்கள் அனைத்தும் ஆன்லைனில் அப்டேட் செய்திருப்பதால் டேஷ் போர்டை பார்த்தாலே தினமும் எவ்வளவு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன, எவ்வளவு நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்துவிடும். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட மனுக்கள் குறித்து அவ்வப்போது முதலமைச்சருக்கும் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

அந்த அப்டேட்களை மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் கள ஆய்வுக்குப் போகும்போது அந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றனவா? போகும்போது அவர்களுக்கான அனுமதி ஆணைகளைக் கொடுத்துவிடலாமா என ஆர்வத்துடன் கேட்கிறார். சமீபத்தில் சேலத்துக்குச் சென்றிருந்தபோதுகூட சேலத்திலிருந்து எத்தனை மனுக்கள் வந்திருக்கின்றன, என்ன நிலவரம், அங்கே போகும்போது நாம் அதற்கான ஆர்டர்களை வழங்கிவிடலாமா எனக் கேட்டார்.

அதுமட்டுமல்ல, முதலமைச்சரிடம் தங்கள் மனுக்களுக்கான பலன்களைப் பெற வரும் மனுதாரர்கள் ஒவ்வொருவரிடமும், `எங்கே இருந்து வர்றீங்க… என்ன பண்றீங்க… உங்க குறை இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது சந்தோஷமா? என்றெல்லாம் கேட்பார். அதையெல்லாம் பார்க்கும்போது எந்தளவுக்கு மக்களோடு சி.எம் கனெக்ட் ஆகுறாங்க என்பதை உணர முடிகிறது. `முடிந்தவரையில் மனுக்களை நிராகரிக்காமல் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனடிப்படையில் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம்.”

PKS 5532 Tamil News Spot
தன் குழுவினருடன் ஷில்பா பிரபாகர்

“100 நாள்களில் 30 நாள்களுக்கு மேல் முடிந்துவிட்டது. இப்போது வரை எத்தனை சதவிகிதம் வேலைகள் முடிந்திருக்கின்றன. 100 நாள்களுக்குள் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டுவிடுமா?’’

“ நிறைய மனுக்கள் கள ஆய்வில் இருக்கின்றன. பல மனுக்கள் `சேங்ஷன் ஆர்டர்’ தயார் செய்யும் நிலையில் இருக்கின்றன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிக்கப்பட்ட மனுக்களின் விவரங்கள் மட்டும்தான் போர்ட்டலில் காட்டும். ஆகையால், சரியான நம்பர் சொல்ல முடியாது. 30,000 மனுக்களுக்கு மேல் நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.”

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, `புதிதாக இதில் மனு செய்ய முடியுமா…’ என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. அதற்கு வாய்ப்பு உள்ளதா?”

“ இந்த மனுக்களை முடிக்க வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள இலக்கு. ஆகையால் இப்போது புதிதாக மனு அனுப்ப வேண்டுமெனில் சி.எம் செல்லுக்கு அனுப்பலாம். அதற்கென தனி அலுவலர்கள் இருக்கின்றனர். இதே முக்கியத்துவம் கொடுத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.”

“100 நாள்களுக்குப் பிறகு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை எப்படிச் செயல்படும்?’’

“அதுகுறித்து இன்னும் தெரியவில்லை. அரசாங்க அளவில் அதுகுறித்து முடிவெடுப்பார்கள்.”

PKS 5565 Tamil News Spot
தனது குழுவினருடன் ஷில்பா பிரபாகர் சதீஷ்

“இந்தத் துறையின் வாயிலாக நிறையத் திட்டங்கள் செயல்படுத்தியிருப்பீர்கள்… குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திட்டங்கள் ஏதாவது?”

“கிராமப்புறங்களில் கட்டமைப்புகளை உருவாக்கித் தருவது சிறப்பாக இருக்கிறது. சாலை போடுவதற்கான ஆர்டர்கள், சமுதாயக் கூடத்துக்கான ஆர்டர்கள் கொடுக்கும்போது மக்கள் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றாங்க. பென்ஷன், பட்டா கூட நீண்டநாள் கிடைக்காமல் இப்போது கிடைக்கும்போது மிகவும் சந்தோஷப்படுகின்றனர். ஆகையால், எல்லாமே மன நிறைவாகத்தான் இருக்கிறது.”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *