Share on Social Media


தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் கொண்டாடப்பட்டதை மாற்றி தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட வேண்டும் என 2008-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் பின் 2011-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இந்த அரசாணையை ரத்து செய்து சித்திரை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தை 1ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. அதோடு தை பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு பொருட்கள் அடங்கிய பையில் ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டு அச்சிட்டுள்ளது. நீண்டகாலமாக இருந்துவரும் இந்தச் சர்ச்சைக்குத் தமிழறிஞர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. மேலும், தற்போது தி.மு.க அரசு இதைக் கையில் எடுத்திருப்பதற்குக் காரணம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கையாள்வதில் தவறி விட்டது. எனவே அதிலிருந்து தப்பிக்க தி.மு.க தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சை மீண்டும் எழுப்பப்படுவதன் பின்னணி என்ன? பிரச்னைகளிலிருந்து தப்பிக்கவே இப்போது இதைத் தி.மு.க கிளப்பியிருக்கிறதா என்று அறிய விசாரணையில் இறங்கினோம்…

Also Read: கொட்டும் மழை, மிதக்கும் தெருக்கள், குமுறும் மக்கள்!

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்… “எந்தத் தமிழறிஞர்களும் தை மாதம்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என எவரும் சொல்லவில்லை. அதே நேரத்தில் சித்திரை முதல் தேதியைத்தான் அனைவரும் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். அதையொட்டியே மக்களும் சித்திரை ஒன்றாம் தேதியைப் புத்தாண்டாகக் கருதி காலம் காலமாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் நாள்காட்டியும் சித்திரையிலிருந்துதான் தொடங்குகிறது. இது குறித்து சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் விவாதித்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்நோக்கத்தோடு தி.மு.க கொண்டு வந்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற அரசாணையை அ.தி.மு.க அரசு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களைக் குழப்ப மீண்டும் மீண்டும் இதே பிரச்னையைக் கொண்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. தி.மு.க-வினர் சொல்வதுபோலத் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிடவில்லை. மக்கள் வாழ்க்கை விடியவில்லை. வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டது, மழைப் பொழிவு நின்றுவிட்டது. இதனால் மழை நீர் இயல்பாக வடிந்துவிட்டது. இதை தி.மு.க அரசு செய்தது என்று சொல்லிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. நிர்வாகம் செய்யத் தெரியாமல் தோல்வியடைந்துள்ளது தி.மு.க அரசு இது போன்ற சின்ன சின்ன சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டுத் தப்பிக்கொள்ள முயல்கிறது.

narayanan tiruppathi Tamil News Spot
நாராயணன் திருப்பதி

நிர்வாகம் சரியாகச் செயல்படாததால்தான் முதல்வரே நேரடியாகக் களத்தில் இறங்கி பணிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்துகளின் பண்டிகையைப் பெரும்பான்மையான மக்களின் கலாசாரத்தை மதிக்காமல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதையும் மீறி தி.மு.க அரசு தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லுமானால் அதற்கான பலனை மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள்” என்றார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “தை முதல் தேதிதான் தமிழர்களுக்கான புத்தாண்டு என்பது தி.மு.க தலைவர் கலைஞர் முடிவு செய்வதற்கு முன்பே தேவநேயப் பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் ஆய்ந்து, அறிந்து சொன்னது. அதை வைத்துத்தான் தமிழ்ப் புத்தாண்டை தை ஒன்று எனத் தி.மு.க அரசு செய்தது. சித்திரை, விஷு என்பது வட இந்தியர்களுக்கு என்பதையும் அறிஞர்கள் சொன்னது. மனதுக்குத் தோன்றியதை வைத்து முடிவெடுக்கும் அரசு தி.மு.க-வினுடையது அல்ல. கற்றறிந்த அறிஞர்கள் சொல்வதை வைத்துத்தான் பண்பாட்டு ரீதியிலான முடிவுகளை எடுக்கிறோம். இப்படி அறிவார்ந்தவர்கள் சொற்படி நடக்கும் ஒன்றை மழை வெள்ளத்தோடு தொடர்புப்படுத்திப் பேசுவதே வேடிக்கையானது. அதிலும் இந்தப் பேரிடரை நாங்கள் சரி செய்யத் தவறிவிட்டோம் என்று சொன்னது நகைப்புக்குரியது. தலைவர் மு.க.ஸ்டாலின் யாரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்திலோ இல்லை. சென்னை அழியட்டும் என வீட்டைப் பூட்டிக்கொண்டேவா இருக்கிறார். பாதிப்பு எனக் கேள்விப்பட்ட உடனே அதிகாரிகள் செல்லும் அங்கு சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தானே முன்னின்று செய்து கொடுக்கிறார். ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்திருக்கிறது. மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

cons Tamil News Spot
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மக்களுக்குச் சிக்கலே இல்லாதபோது நாங்கள் எதைத் திசை திருப்ப நினைக்க வேண்டும். சர்வதேச அளவில் தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பொறுக்க முடியாமல் எதை வைத்து அரசியல் செய்வது எனத் தெரியாமல் ஏதோ பேச வேண்டும் எனப் பேசுகிறார்கள். அவர்களுக்கு வேலையில்லை. நமக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அதைப் பார்ப்போம்” என விளக்கமளித்தார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *