Share on Social Media

கொரோனா பரவல் ஓய்ந்ததாக எண்ணி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சிறிய இடைவெளிக்குள்ளாகவே இரண்டாவது கொரோனா அலை வேகமெடுக்க ஆரம்பித்தது. இரண்டாவது அலையில் உருமாறிப் பரவிய டெல்டா வேரியன்ட் கொரோனா வைரஸ், முதல் அலையைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதோடு பூஞ்சைத் தொற்றுகளும் புதிதாக உருவெடுத்தன. பூஞ்சைத் தொற்றுகள் பெரும்பாலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களையே குறிவைத்துத் தாக்கின.

corona

Also Read: டெல்டா ப்ளஸ் வைரஸ்: `மூன்றாம் அலை இன்னும் மோசமாக இருக்குமா?’ – விளக்கும் மருத்துவர்

இந்நிலையில், இரண்டாவது கொரோனா அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வர, மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் கொரோனாவின் மூன்றாம் அலை ஆரம்பமாகிவிட்டதாகப் பேச்சுகள் எழுந்துவருகின்றன.

கடந்த மூன்று வாரங்களாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் நடுவே சராசரியாக நூறு நாள்கள் இடைவெளி இருந்தன. ஆனால், மூன்றாம் அலை அப்படியில்லாமல் முந்தைய அலை குறையத் தொடங்கிய 2 – 4 வாரங்களுக்குள்ளாகவே வேகமெடுக்கும் என்றும் செய்திகள் பரவிவருகின்றன.

இது குறித்து தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுதர்ஷனிடம் பேசுகையில், “கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துவந்தது. தற்போது மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது தொடர்ந்தால், மூன்றாவது அலையாக உருவெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அப்படியாகும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை அடையும். மூன்றாவது கொரோனா அலையில் அதிக அளவில் பரவும் டெல்டா ப்ளஸ் வேரியன்ட் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் குறைந்துவிடும்.

WhatsApp Image 2021 07 01 at 5 40 04 PM Tamil News Spot
தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் சுதர்ஷன்

குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி அளிக்கப்படாததால் மூன்றாவது அலையில் அவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன. முதலாவது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் மட்டுமே அதிக அளவு பாதிப்பிருந்தது. இரண்டாவது அலையில் மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதிக அளவிலான பாதிப்புகளும் இறப்புகளும் ஏற்பட்டன. கிட்டத்தட்ட இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பையே மூன்றாவது அலையும் ஏற்படுத்தும். இறப்புகள் நிகழ்ந்தாலும் அவை இரண்டாவது அலையைவிட மோசமானதாக இருக்காது. நிலைமை கையை மீறிப் போகாமலிருப்பதும் மக்களிடமே உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில்தான் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில்தான் அதிக அளவிலான இறப்புகளும் ஏற்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை எவ்வளவு விரைவாகக் கண்டுகொள்ள முடிகிறதோ அவ்வளவு விரைவாக சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். காய்ச்சல் ஏற்படுபவர்களில் 95 சதவிகிதத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். காய்ச்சல் ஏற்பட்டால் சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும் எனும் யூகத்தில் அறிகுறிகளைப் பொருட்படுத்தாத பட்சத்தில் பாதிப்பு தீவிரமாகக்கூடும். தொற்று தாக்கிய முதல் வாரத்திலேயே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிப்பது சிறந்தது.

WhatsApp Image 2021 05 26 at 3 53 26 PM Tamil News Spot
COVID-19 vaccine

Also Read: கோவிட் மூன்றாவது அலை… எப்போது வரும், எப்படி வரும்? பதில் சொல்கிறார் நிபுணர்…

மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற சுகாதார நடவடிக்கைகள் அவசியம். அதுமட்டுமல்லாது தடுப்பூசி எடுத்துக்கொள்வதும் முக்கியம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது 100% பாதுகாப்பை அளிக்காவிட்டாலும்கூட, உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வேரியன்ட்டாக இருந்தாலும் அதற்கு எதிராக 60 – 70% வரை செயல்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் அலட்சியம் செய்யாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வதும் இந்தச் சூழலில் மிக அவசியமானதாக இருக்கிறது” என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *