Share on Social Media

டி20 மற்றும் ஒருநாள் தடத்திலெல்லாம் ‘மிஸ்பா எக்ஸ்பிரஸ்’ தடுமாற்றமின்றிதான் ஓடிக் கொண்டிருந்தது. ஒருநாள் போட்டிகளில், ஒரு சதத்தைக்கூடத் தொடாமலே, அவரது பேட் ஏமாற்றியிருந்தாலும், 5000 ரன்களை, 43 என்னும் நல்ல சராசரியோடுதான் அவர் கடந்திருந்தார் அதுவும் ஒரே வருடத்தில் அதிக அரைசதம் (15) அடித்தவர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அதேபோல், டி20-ல் ‘நம்பர் 1’ என்னும் சிம்மாசனத்தில் ஏறிய முதல் பாகிஸ்தான் வீரராக எல்லாம் அவர் வலம் வந்தார். ஆனால், இது அவருடைய ‘கப் ஆஃப் டீ’ இல்லை எனச் சொல்லுமளவிற்கு டெஸ்ட் போட்டிகள் மட்டும் அவரைச் சோதித்துப் பார்த்தன. அந்த தண்டவாளத்தில் மட்டும் இந்த எக்ஸ்பிரஸ் சற்றே வேகமின்றி ஓடியது. ஆனால், தடம் புரளவில்லை.

லேட் பிக்அப் எனுமளவு, நிதானமாக வேகமெடுக்கத் தொடங்கியது அவரது பயணம். இடையில் நான்காண்டுகள் ரெட் பால் கிரிக்கெட்டை விட்டு விலகிக்கூட இருந்தார். பின்னர் மீண்டும் திரும்பிவந்தார்.

மிஸ்பா உல் ஹக்

மிஸ்பா உல் ஹக்
icc-cricket.com

2007-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கம்பேக் கொடுத்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான அடுத்த தொடரிலேயே, அடுத்தடுத்து இரண்டு சதங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது மறுவரவை உரக்க அறிவித்தார். அந்தச் சமயத்தில், 30 வயதின் முற்பகுதியில் இருந்த மிஸ்பா உல் ஹக்கைப் பற்றி, பாகிஸ்தானின் ஸ்டார் பிளேயர்களை உருவாக்கிய இம்ரான் கான், “எங்களது நாட்டில் இன்னும் எத்தனை மிஸ்பா உல் ஹக்கள் இருக்கிறார்களோ, அவர்களை எப்போது கண்டறியப்போகிறோமோ?!” என்று வேதனையோடு, கூறி இருந்தார். ஆம்! ஆஸ்திரேலிய வீரர்களைப் போலவே, 30-களில்தான் மிஸ்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை உயிர்த்தெழுந்தது, புது உத்வேகத்துடன்.

2010ம் ஆண்டு சூதாட்டப் புகாரால், பல அவமானங்களைச் சந்தித்து கூனிக்குறுகிப் போன பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு, ஒரு புதிய சக்தி தேவைப்பட்டது, அது உலக அரங்கில், அவர்கள் இழந்த கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டியதாக இருந்தது. அஃப்ரிடி, முகமது யூசுஃப் உள்ளிட்ட வீரர்கள், ஏனைய தேர்வுகளாக இருந்தார்கள்தான். ஆனால், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, மிஸ்பாவை முயன்று பார்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்தது. அந்தச் சமய சமீபகாலங்களில், அவர்கள் எடுத்த அந்தப் புத்திசாலித்தனமான முடிவுதான், பாகிஸ்தானுக்கு வெற்றிக்கான பச்சைக்கொடியை மறுபடி காட்டியது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *