Share on Social Media


`வந்தான், சுட்டான், போனான்… ரிப்பீட்டு’ என்ற ‘மாநாடு’ எஸ்.ஜே.சூர்யாவின் புலம்பலை நினைவுபடுத்தியிருக்கிறது ‘சோழவந்தான்’ தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பற்றிய சமீபத்திய செய்திகள்!

‘அ.தி.மு.க’ டு ‘பா.ஜ.க’, ‘பா.ஜ.க டு அ.தி.மு.க’ என அடுத்தடுத்து கட்சி மாறியதாக மாணிக்கம் பற்றிய செய்திகள் அலையடித்தன. ஆனால், “இதெல்லாம் வதந்திகள். நான் பா.ஜ.க-விலேயேதான் தொடர்கிறேன்” என சத்தியம் செய்துவருகிறார் மாணிக்கம்.

இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும் இன்றைய பா.ஜ.க உறுப்பினருமான மாணிக்கத்திடம் பேசினேன்….

‘சோழவந்தான்’ மாணிக்கம். ‘பா.ஜ.க – வில் சேர்ந்தபோது…

“பா.ஜ.க-வில் சேருவதற்கான காரணம் என்ன?”

“பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார். இந்தியாவின் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழக மக்களைப் பற்றியும்தான் பேசிவருகிறார் பிரதமர். இப்படி தமிழர்களுடைய நலனில் முழுமையாக அக்கறை செலுத்திவருகிற பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இயங்கிவரும் பா.ஜ.க-வில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவே நான் கட்சியில் இணைந்திருக்கிறேன்.”

“அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய மாணிக்கம், அதே தினம் அதிரடியாக பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டிய அவசரம்தான் என்ன?”

“பா.ஜ.க-வின் கொள்கை கோட்பாடுகள் எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். அவ்வளவுதான்.”

o panneerselvam Tamil News Spot
ஓ.பன்னீர்செல்வம்

“ஓ.பி.எஸ் ஆதரவாளர், வழிகாட்டுதல் உறுப்பினர் என கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த நீங்கள் திடீரென கட்சி மாறியது அ.தி.மு.க-வுக்கு செய்த துரோகம் அல்லவா?”

“முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாகவே அ.தி.மு.க-வில் எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டதுதான். எனவே அ.தி.மு.க மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதேசமயம், தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக, நல்லாட்சி தந்துவருகிற பா.ஜ.க-வில் இணையவேண்டும் என்று ஆசைப்பட்டுத்தான் என்னை இணைத்துக்கொண்டேன்.

பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாகவே, ‘நான் அ.தி.மு.க-விலிருந்து விலகி தனிமைப்படுத்திக் கொள்கிறேன்’ என்று என்னுடைய ராஜினாமா கடிதத்தை அ.தி.மு.க-வில் கொடுத்துவிட்டேன். அதன்பிறகுதான் பா.ஜ.க-வில் வந்து இணைந்துகொண்டேன். எனவே நான் கட்சி மாறவோ அல்லது தாவவோ இல்லை.”

“அ.தி.மு.க தலைமையிலிருந்து தேர்தல் செலவுக்குப் பணம் தராததால், தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் என்று நீங்கள் கூறியதாக செய்திகள் வெளிவந்தனவே?”

“அது தவறான செய்தி. அப்படி எந்த இடத்திலும் நான் சொல்லவேயில்லை. அ.தி.மு.க தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பார் என இருவருமே என் மீது அதிகமான பற்று பாசத்தோடு பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தனர். எனவே ஒருபோதும் அவர்களை நான் குறைசொல்லமாட்டேன்.”

admk to bjp Tamil News Spot
அ.தி.மு.க – பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்

“அ.தி.மு.க-வை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு, தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்த்தெடுக்க முயற்சிக்கிறது மத்திய பா.ஜ.க என்கிறார்களே?”

“அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க என்பது ஏற்கெனவே நன்கு வளர்ந்த, வலுவான கட்சி. அப்படிப்பட்ட கட்சியை அபகரிக்கவேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க-வுக்கு ஒருபோதும் கிடையாது. அதனால்தான், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெற்றி பெற்றதற்குக்கூட வாழ்த்து சொல்லியிருக்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டில், இன்னும் மென்மேலும் அ.தி.மு.க வளரவேண்டும் அவர்களுடனான தமிழக பா.ஜ.க-வின் கூட்டணி தொடரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.”

Also Read: ஹெலிகாப்டரின் Black Box என்பது என்ன? அதன் செயல்பாடுகள் எத்தகையது…

“மோடியின் மக்கள் நலத் திட்டங்களினால்தான் கடந்த தேர்தலில் எனக்கு 76 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்களே… அப்படியென்றால் அந்த வாக்குகள் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வாக்குகள் இல்லையா?”

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு செய்த பல்வேறு நலத்திட்டங்கள், மாநிலத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கித் தந்து உதவிய மத்திய பா.ஜ.க அரசு என இரண்டு அரசுகளின் செயல்பாடுகளும்தான் எனக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அரசுகளின் செயல்பாடுகளால் என்னுடைய சோழவந்தான் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது. இதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி எந்த ஓர் அரசையும் தனியே பிரித்துச் சொல்லவில்லை.”

admk bjp alliance election protest Tamil News Spot
மோடியின் பெயர் அழிக்கப்பட்ட சுவர் விளம்பரம்

“மோடியின் பெயரைச் சொன்னால், வாக்குகள் கிடைப்பதில்லை எனக்கூறி பிரதமர் படத்தை மறைத்து வாக்கு கேட்டனர் அ.தி.மு.க தலைவர்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே?”

“வீடுதோறும் எரிவாயு இணைப்பு, ஏழை மக்களுக்காக வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் என மத்திய பா.ஜ.க அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சோழவந்தான் தொகுதியில் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் ‘தாலிக்குத் தங்கம்’, இலவச ஆடு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான ஓய்வூதியம் என கடந்தகால அ.தி.மு.க அரசும் மத்திய பா.ஜ.க அரசும் நடைமுறைப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களையும் என் தொகுதிக்கு நிறைவாகவே பெற்றுத்தந்திருக்கிறேன் நான். இந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் எனக்கு 76 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன.”

Also Read: ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மகன்; வென்டிலேட்டரில் நினைவின்றிக் கிடக்கும் தந்தை!

“உங்களுடைய நிறுவனம் ஒன்று, ஜி.எஸ்.டி வரியை செலுத்தவில்லை என்றும், அதன் பின்னணியில் நடைபெற்ற மிரட்டல் காரணமாகவே தமிழக பா.ஜ.க-வில் அடைக்கலமாகியிருக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்களே?”

“இது கடைந்தெடுத்த பொய். நான் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்புவரை கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக இருந்துவந்தேன். இதை என்னுடைய பிரமாண பத்திரத்திலும் (Affidavit) குறிப்பிட்திருக்கிறேன். நான் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்புவரை இந்தக் கம்பெனியின் ஆண்டு விற்பனை (Turnover) 80-லிருந்து 90 கோடியாக இருந்துவந்தது. ஆனால், நான் எம்.எல்.ஏ ஆன பிறகு இதே கம்பெனியின் டர்ன் ஓவர் என்பது 10-லிருந்து 15 கோடியாக சுருங்கிவிட்டது. இதுதான் உண்மை.

எனக்குச் சொந்தமாக இருக்கக்கூடிய ஒரு குண்டூசியைக் கூட விட்டுவிடாமல், வருமான வரித்துறை அஃபிடவிட்டில் சேர்த்திருக்கிறேன். என்னுடைய சொத்துகள் ஒவ்வொன்றும் எப்போது, எப்படி சம்பாதிக்கப்பட்டது என்ற அனைத்து கணக்கு வழக்குகளையும் உரிய முறையில் சமர்ப்பித்திருக்கிறேன். அதற்கான ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கிறேன்.

narendra modi amith sha Tamil News Spot
நரேந்திர மோடி – அமித் ஷா

எனவே, வருமான வரித்துறைக்கோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறைக்கோ நான் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. எனவே, மிரட்டலுக்குப் பயந்து நான் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டேன் என்று சொல்வது வடிகட்டிய பொய். என் விருப்பத்தின் பேரிலேயே பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன்.

அடுத்து, மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி என்பது, மாதந்தோறும் எவ்வளவு நிலுவைத் தொகை இருக்கிறது, எவ்வளவு தொகை கட்டவேண்டும் என்பதெல்லாம் புள்ளிவிவரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தொழில் செய்துவருகிற யாரும் ஜி.எஸ்.டி வரி கட்டுவதிலிருந்து விலகிச் செல்லவே முடியாது.

அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர்கூட, ‘நான் அமைச்சராக இருக்கிறேன். ஆதலால் ஜி.எஸ்.டி வரி கட்ட முடியாது’ என்று சொல்லிவிட முடியாது. இந்த லாஜிக்கூட தெரியாதவர்கள்தான் என் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *