சீன செல்போன் கம்பெனிகளான ஷியோமி, ஓப்போ நிறுவனத்திற்கு இந்தியாவில் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித் துறையினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னையிலும், பெங்களூரிலும் அதிரடி சோதனைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இங்கும் இந்நிறுவனங்களின் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, இறக்குமதி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை பரபரப்பாக நடந்து வருகிறது. அதில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் அடையார் வீட்டிலும் மயிலாப்பூர் அலுவலகத்திலும் இப்போது சோதனை நடந்து வருகிறது.
மணலி மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள அவரது கன்டெய்னர் அலுவலகங்களில் இச்சோதனை நடைபெறவில்லையாம். பிரிட்டோ, சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிசினஸில் ஈடுபட்டு வருகிறார். லாஜிஸ்டிக்ஸ்தான் அவரது முக்கிய பிசினாஸாகும். அவரது நிறுவனங்களில் ஒன்று செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பையும் ஏற்றுமதி இறக்குமதி செய்து வருகிறது. அதனால்தான் பிரிட்டோவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாகச் சொல்கின்றனர்.
இதுபற்றி, பிரிட்டோ தயாரிப்பில் விசாரித்தால், “வருட இறுதியில் இதுபோல் சோதனைகள் வழக்கமாக நடக்கக்கூடியதுதான்…” என்கின்றனர். ஆனால், சினிமா தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு என கோடம்பாக்கத்தில் நியூஸ் பரவி உள்ளதால் பெரிய படத் தயாரிப்பாளர்கள் சற்று ஜர்க் ஆகி உள்ளனராம்.