Share on Social Media


கோவை:கலெக்டர் தலைமையில் வெவ்வேறு துறை அலுவலர்கள், மருத்துவர், மன நல ஆலோசகர்களுடன் மாவட்ட அளவில் செயல்பட வேண்டிய குழுக்கள் பல, கொரோனா தொற்றுக்கு பிறகு முடங்கியுள்ளன. அவற்றை உயிர்ப்பித்து மீண்டும் செயல்பட வைக்க, கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

மாவட்ட அளவில், வெவ்வேறு துறையினர் தொடர்புடைய விவகாரங்களில், விசாரித்து தீர்வு காண்பதற்கு கலெக்டர் தலைமையில் குழுக்கள் உள்ளன.இந்த குழுக்கள், மாதம் ஒரு முறை, இரண்டு மாதம் ஒரு முறை அல்லது மூன்று மாதம் ஒரு முறை கூடி, புகார்கள், வழக்குகள் தொடர்பான அப்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யும்.கொரோனா தொற்று காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, இத்தகைய குழுக்களின் கூட்டங்கள் எதுவும், முறையாக நடத்தப்படவில்லை. குழு செயல்பாடுகள் முடங்கியிருக்கின்றன.

கல்லுாரிகளில் ‘ராகிங்’ தடுப்புக்காக, அமைக்கப்படும் குழு இவற்றில் ஒன்று. விரைவில் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த குழுவுக்கு உயிர் கொடுத்து, செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.அதேபோல, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புக்குழு கூட்டமும் நடத்தப்படாமல் முடங்கியிருக்கிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை விசாரிக்கும், விசாகா கமிட்டியின் நிலையும் இதுதான்.
அரசு அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவர், சமூக சேவகர், மன நல மருத்துவர் போன்றோர், இத்தகைய குழுக்களில் இடம் பெற்றிருப்பர்.கூட்டம் நடத்தப்படாமலே இருப்பதால், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அதிகாரிகளுக்கு, இப்படி குழுக்கள் இருப்பதே தெரியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.இதேபோன்ற நிலையில்தான், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புக்குழுவும் கூட்டப்படாமல் உள்ளது.
கேபிள் ‘டிவி’ கண்காணிப்புக்குழு என்பது, கேபிள் ‘டிவி’யில் ஒளிபரப்பாகும் படக்காட்சிகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படுவது. இந்த குழுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை.இந்த குழுக்களை உயிர்ப்பித்து, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம், சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, சிறிதளவேனும் தீர்வு காண முடியும் என்பது, சமூக ஆர்வலர்களின் நம்பிக்கை.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *