Share on Social Media

இப்படியான ஒரு சூழலில், என் கணவருக்கே மரியாதை இல்லாத வீட்டில் எனக்கான மரியாதையை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என் பிறந்த வீட்டில் வசதியானவர்கள் என்பதால், எனக்கான தேவைகளை நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்றாலும், என்னுடன் பிறந்த ஒரே அண்ணனுக்குத் திருமணமான பிறகு, அதையும் நான் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

கணவரின் நண்பர்கள் சிலர், ஏதாச்சும் தொழில் தொடங்கும்போது இவரையும் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள அணுகுவார்கள். என் கணவரும், `நம்ம தொழில்ல எல்லா வேலைகளையும் நான் கத்துக்கிட்டாலும், இத்தனை வருஷத்துல என்னோட தனிப் பொறுப்புல ஒரு கட்டடம்கூட அப்பா பார்க்கவிட்டதில்ல. நண்பர்கள்கூட ஒரு தொழில் செஞ்சு ஜெயிச்சுக்காட்டிட்டா, எனக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்’ என்றே நினைப்பார். ஆனால், அதற்கான முதலீட்டுக்கும் நாங்கள் என் மாமனாரிடமே சென்று கேட்க வேண்டிய நிலை. `அதெல்லாம் ஒண்ணும் வேணாம், உனக்கு சாமர்த்தியம் பத்தாது, காசத் தொலைச்சுட்டு வந்துருவ. இருக்குறதைப் பார்த்தா போதும்’ என்று அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவார்.

woman (Representational image)

woman (Representational image)
Image by RAEng_Publications from Pixabay

38 வயதாகிறது என் கணவருக்கு. ஆனாலும், வீட்டில் பதின்ம வயதுச் சிறுவர்கள் என்ன செய்தாலும் அப்பாக்கள், `உனக்கென்னடா தெரியும்…’ என்ற மனநிலையில் செய்யும் உதாசீனத்தைதான் இப்போதுவரை என் கணவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், இப்போதெல்லாம் பதின்ம வயதுச் சிறுவர்களின் சின்னச் சின்ன முயற்சிகளை, அவர்களின் சுய தேடல்களை எல்லாம் பெற்றோர்கள் ஊக்குவிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டிலோ, பணக்கார, ஈகோயிஸ்ட் மாமனாரின் அதிகாரத்தில் என் கணவர் தினம் தினம் முகம் வாடும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தனிக்குடித்தனம் பற்றியெல்லாம் நானோ கணவரோ இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் நிலையை அறிந்து, அதைப் பற்றி எங்களிடம் சொல்லும் உறவுகள், நண்பர்களிடம்கூட, `ஒற்றை பிள்ளையை பெற்று வளர்த்தவர்களை வயதான காலத்தில் அப்படியெல்லாம் விட்டுச்செல்லலாமா? மனக்கசப்புகள் வேறு, பெற்ற கடமை வேறு. நாங்கள்தாம் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுவோம். ஆனால் மாமியாரோ இதை உறவுகளிடம் வேறு மாதிரியாகச் சொல்வார். `தனிக்குடித்தனம் போனா அவங்கப்பா தயவில்லாம அவனால குடும்பத்தை நடத்திட முடியுமா? அதுக்கும் அவர்கிட்டதானே வந்து நிக்கணும்?’

இப்படித்தான், தங்கக்கூண்டில் கிளிகளாகக் கிடக்கிறோம் நானும் கணவரும். நிலைமாற வழியென்ன?

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *