Share on Social Media


தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: பார்லிமென்ட் இருப்பதே விவாதம் நடத்துவதற்குத் தான். ஆனால், விவாதங்களே இல்லாமல் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பார்லிமென்ட் வரலாற்றில், விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவது மோடி ஆட்சியில் மட்டும் தான்.

பார்லிமென்டில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் தான். ஆனால், மாநில விவகாரங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டு, பார்லிமென்டை செயல்படாமல் செய்து விடுகின்றனரே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: சமீபத்தில் சென்னையில் நடந்த, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், மிக அமைதியாகத் தான் நடந்தது. சில ஊடகங்களில் வந்தது போல எந்த தகராறும் இல்லை. ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தன. எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லாம் சுமுகமாகத் தான் போகிறது.

அ.தி.மு.க., கூட்டங்கள் அமைதியாக நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அமைதியாக நடந்தாலும், தி.மு.க., ஆதரவு ஊடகங்கள் மாற்றித் தான் செய்தி வெளியிடும். இது வழக்கம் தானே!

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி: தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இருப்பதால் தான், 1957 முதல் இப்போது வரை கட்சி உடையாமல் அப்படியே இருக்கிறது. அதுபோல, அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இல்லாததால் தான் பல முறை உடைந்து, அவர்களின் சின்னமே பறிபோனது.

குற்றம், குறைகள், புகார்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் கலையில், தி.மு.க.,வினர் கெட்டி என்பதற்கு, இது தான் சரியான உதாரணம்!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி:
பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டுமே தவிர, தனிமனித துதி பாடக் கூடாது. பதவிப் பிரமாணம் எடுக்கும் போது கடவுள் அல்லது மனசாட்சி பெயரில் மட்டுமே எடுக்க வேண்டும். தனிமனிதர்களை புகழ்வது விதிமீறல்.

அப்படி பாராட்டி பேசாவிட்டால், கட்சியில் கட்டம் கட்டப்படுவர் என்ற அச்ச உணர்வு காரணமாக பேசியிருக்கலாம். ராஜ்யசபாவில் வழக்கம் போல, தி.மு.க., – எம்.பி.,க்கள் பொறுப்பேற்றிருந்தால், யாராவது அவர்களை பற்றி இப்போது பேசி இருப்போமா?

மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி: குமரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் தலைமையில் குழு அமைக்க உள்ளோம். அந்த குழுவினர் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு மீட்பர்.

அ.தி.மு.க., ஆட்சி காலமாக இருந்திருந்தால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி இருப்பீர்கள். இப்போது உங்கள் ஆட்சி நடப்பதால், ஆராய குழு அமைந்துள்ளீர்களா?

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பப்பட்டால், மூன்றாவது மொழியை கற்கலாம். அதை விடுத்து, மூன்றாவது மொழியை கற்றே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது.

இருமொழி தான் வேண்டும் என்று தமிழக மாணவர்கள் கேட்டனரா; உங்களின் லாபத்திற்காக, இந்த காலத்திற்கு ஒவ்வாத அந்த கொள்கைகளை இன்னமும் பின்பற்றி வருகிறீர்களே!

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: தமிழகத்தில், கள்ளுக்கு அனுமதி கேட்டு, 17 ஆண்டாக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இறுதிக்கட்டமாக, ஜனவரி 21ல் தமிழகம் முழுதும், கள் இறக்கி, சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும்.

அப்படியே, கள் குடிக்கும் போராட்டத்தையும் துவக்கி, கள் குடித்து ரகளையில் ஈடுபட வேண்டியது தானே!

அ.தி.மு.க., முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஊழல் செய்து விட்டேன் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டம் அது. அதை செயல்படுத்துவது உட்பட எந்த வகையிலும் மாநில அரசுக்கு தொடர்பு கிடையாது. பிறகு நான் எப்படி ஊழல் செய்திருக்க முடியும்?

ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய அரசின் திட்டம் என்பதை கூடவா, முதல்வர் அறிந்திருக்க மாட்டார் என்ற சந்தேகம் வருகிறதே!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி: என் வாழ்க்கையில் நான் செய்திருக்க கூடாத விஷயம் என்றால், அரசியலில் நுழைந்தது தான். அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது என்பதற்காகத் தான் அதிலிருந்து விலகி விட்டேன். இப்போது நான், சாதாரண குடிமகள் தான்.

சென்னை போயஸ் கார்டனின் சொந்தக்காரர் ஆகி விட்டீர்கள்… அரசியலில் இருந்தால், இதை விட பெரிய வேறு லாபத்தை சம்பாதித்து விட முடியும்; ஆனால், மாட்டிக் கொள்வீர்கள். எனவே, நீங்கள் சாதாரண குடிமகள் மட்டுமல்ல, யோகக்கார குடிமகள்!

அ.தி.மு.க., அமைப்புச் செயலர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி: அ.ம.மு.க.,வில் இருப்பவர்கள் எல்லாருமே ஒரு காலத்தில், அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரிடமும், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை இன்னமும் உள்ளது. அதை வைத்து அவர்கள், அ.தி.மு.க.,வினர் என சொல்லி வருகின்றனர்.

உறுப்பினர் அட்டை அவ்வப்போது புதுப்பிக்கப்படாதா… அ.ம.மு.க.,வினர் வைத்துள்ளனர் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.