Share on Social Media


நடிகர் சிலம்பரசனுக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்துகொண்டே இருக்கின்றன. தற்போது ‘மாநாடு’ படத்தின் தெலுங்கு உரிமையில் டி.ராஜேந்தர் குளறுபடி ஏற்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரான இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“திரு. டி. ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் மகன் திரு. சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் திரு. சுரேஷ் காமாட்சி தயாரித்த வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சம்பந்தமாக தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் TFAPA பலமுறை தலையிட்டு படம் சுமூகமாக வெளியாக உதவியதை தாங்கள் அறிந்ததே. படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று திரு. சிலம்பரசன் அவர்களின் வியாபாரமும் அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

‘மாநாடு’ விவகாரம் குறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை
IMG 20211213 WA0055 Tamil News Spot
‘மாநாடு’ விவகாரம் குறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்த திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மாநாடு வெளியீட்டுக்கு முந்தையநாள் மொத்த திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்கு சான்று.

படத்தின் தொலை்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வர தாமதமானாலும் பரவாயில்லை படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரியமனதுடன் ஒத்துக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முன்வந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பி தருகிறார்.

ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிக தவறான முன்உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

ஓர் அமைப்பில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

simbu Tamil News Spot
‘மாநாடு’ கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்கு போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என அந்த அறிக்கையில் உள்ளது.

இது பற்றி ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்பில் விசாரித்ததில் கிடைத்த தகவல் இது. “படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் இரவு எவ்வளவு பிரச்னைகள் இருந்துச்சுனு எல்லாருக்குமே தெரியும். அன்னைக்கு ராத்திரி முக்கியமான திரையுலக நபர் ஒருத்தர் படத்தின் சாட்டிலைட் உரிமையை 18 கோடிக்கு வித்துத்தர்றேன்னு சொன்னார். ஆனால் கடைசி நிமிஷம் வரை அது நடக்கல. சொன்னது முக்கியமான நபர்னால அதை நம்பி, பைனான்ஸியருக்கு பணம் கொடுப்பதாக தயாரிப்பாளரும் கடிதம் கொடுத்திருந்தார். ‘சாட்டிலைட் விற்காமல் இருந்தால் எனக்கு எப்படிப் பணத்தை திருப்பி கொடுப்பீங்க?’னு பைனான்ஸியரும் கேட்டார். ஸோ, சாட்டிலைட் வித்த பிறகு படத்தை ரிலீஸ் பண்ணிக்கலாம்னு சுரேஷ் காமாட்சி பட ரிலீஸை நிறுத்தினார். இந்த சூழல்லதான் டி.ஆர்., ‘இது என் மகனோட வாழ்க்கை. எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணிடனும்’னு சொன்னார். சாட்டிலைட் எப்போ வித்து? எப்போ ரிலீஸ் பண்றது?

இப்படிச் சூழல்லதான் தயாரிப்பாளர் தியாகராஜன் சார் தலைமையிலான தயாரிப்பாளர்கள் ‘இப்போதைக்கு டி.ஆரும், சுரேஷ் காமாட்சியும் பொறுப்பேற்று கடனை அடைக்கட்டும்’னு ஒரு முடிவுக்கு வந்தாங்க. சாட்டிலைட்டை வித்து, அந்தக் காசை பைனான்ஸியருக்கு கொடுக்கணும்னு ஒரு கேரண்டி கையெழுத்தும் போட்டாங்க. இந்த கேரண்டி கையெழுத்தை வைத்துதான் டி.ஆர். சாட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டதாக நினைக்கிறார் போலும். ஆனால், சாட்டிலைட் உரிமையை வாங்குவதாக இருந்தால், அதற்கான பணத்தை டி.ஆர். தயாரிப்பாளருக்குக் கொடுத்திருக்கணும். பைனான்ஸியருக்கு செட்டில் செய்திருக்கணும். அப்படி நடந்திருந்தால் டி.ஆருக்கு முழு உரிமையை பைனாஸியர்கள் கொடுத்திருப்பார்கள். கேரண்டி கையெழுத்து இட்டவர்கள் படத்தின் சாட்டிலைட் உரிமையை கொண்டாட முடியாது.

tr3 Tamil News Spot
டி.ராஜேந்தர்

இந்தப் பிரச்னை வந்தப்ப சத்யஜோதி தியாகராஜனும் அவரது கவுன்சிலும் சேர்ந்துதான் படத்தை வெளிக்கொண்டு வரணும்னு இந்த முடிவு எல்லாம் பண்றாங்க. டி.ஆர். இப்ப அந்த கவுன்சில்ல போய் புகார் கொடுத்திருந்தா, ‘உங்களுக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு இருக்கு?’னு கேட்டிருப்பாங்க. இதுல இன்னொரு விஷயம், கேரண்டி கையெழுத்து போட்ட கடிதத்தையும் இரண்டு மணி நேரத்துல டி.ஆர். திரும்ப வாங்கிட்டார். ஸோ, சாட்டிலைட்டுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தவிர தயாரிப்பாளருக்குத் தெரியாமல் தெலுங்கு உரிமையை விற்கவும் முயற்சி செய்திருக்கிறார். இந்த விஷயம் சுரேஷ் காமாட்சிக்கும் தெரியாது. வெங்கட் பிரபுவிற்கும் தெரியாது. தெலுங்கில் டி.ஆர். பிரெஸ் மீட் வைத்து படத்தை விற்க முயன்றது எந்த வகையில் நியாயம்?

இப்ப இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தில் கொண்டு செல்ல முடிவு பண்ணியிருக்காங்க. ஆனால் என்ன?! இப்ப ‘மாநாடு’ உரிமை விலைகளுக்கு ஒரு ஹைப் இருக்கிறது. இந்தப் பிரச்னைகளால் இந்த ஹைப் போய்விடும். அதன்பிறகு யாருமே வாங்க முன்வராத ரைட்ஸை டி.ஆர். நினைத்தது போலவே ‘கீதா ஆர்ட்ஸ்’க்கு வித்துடலாம்னு நினைக்கிறார்” என்கிறார்கள்.

இது குறித்து டி.ராஜேந்தரையும் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து அவர் தரப்பின் கருத்தையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.